
அன்வாரின் சவாலை ம.இ.கா. ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் ! – யுனேஸ்வரன்
197 total views, 1 views today
– குமரன் –
கோலாலம்பூர் – 14 செப் 2022
மித்ரா, மைக்கா, எம்ஐஇடி ஆகியவற்றில் ஊழல் இல்லை என்றால் எதிர்க்கட்சித் தலைவரும் பிகேஆர் கட்சியின் தலைவருமான அன்வார் இபுராகிம் கூறியது போல் அம்மூன்று அமைப்புகளை உட்படுத்திய தணிக்கைப் பரிசோதனையை ம.இ.கா.வின் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் துணிச்சலாக ஏற்றிருக்கலாமே எனக் கூறினார் பிகேஆர் கட்சியின் மத்தியத் தலைமைக் குழு உறுப்பினர் யுனேஸ்வரன்.
முந்தைய, அதாவது 14வது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது பிரதமராக வீற்றிருந்த துன் மகாதீரைதான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி கேட்டிருக்க வேண்டும். அன்வார் இபுராகிம் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தவிர எந்த அமைச்சரவைப் பதவியையும் வகிக்கவில்லை. இருப்பினும், நம்பிக்கைக் கூட்டணி பள்ளிகளுக்கும் சமுதாய மேம்பாட்டிற்கும் நிதி ஒதுக்கீட்டைச் செய்திருந்தது என யுனேஸ்வரன் சொன்னார்.
தற்போது அன்வார் விடுத்திருக்கும் சவாலை ஏற்றுக் கொண்டு பயமின்றி துணிச்சலாக தடயவியல் தணிக்கைச் சோதனையை தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் வரவேற்க வேண்டும் என்றார். இதனால் அம்மூன்று அமைப்புகளோடு ம.இ.கா.வின் துணைத் தலைவரின் அமைச்சையும் சம்பந்தப்படுத்திய பெஞ்சானா கெர்ஜாயாவையும் உட்படுத்தி எந்த ஊழலிலும் ம.இ.கா. ஈடுபட வில்லை என்பதை நிரூபித்துக் காட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்மொழிந்தார் எனவும் யுனேஸ்வரன் கூறினார்.
முன்னதாக, ரிம 100 மில்லியன் மதிப்பு கொண்ட மனிதவள அமைச்சின் பெஞ்சானா கெர்ஜாயா திட்டத்தை உட்படுத்திய ஊழலில் ம.இ.கா.வைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக டத்தோ ஶ்ரீ சரவணன் ஒப்புக்கொண்டிருந்ததாகவும் யுனேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.
முந்தையப் பிரதமராகப் பதவி வகித்த தான் ஶ்ரீ முகிதீன் யாசின் தேசியப் பொருளாதார மீட்சித் திட்டத்தின் கீழ் பெஞ்சானா திட்டத்தை அறிவித்தார். சொக்சோவின் கீழ் ரிம 423 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு வேலை இல்லாதோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பணியமர்த்தம் செய்யப்பட உருவாக்கப்பட்டது அத்திட்டம். ஆனால், அதில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
கடந்த 2019 – 2021 வரையிலானக் காலத்தில் 337 நிறுவனங்களுக்கும் அரசு சாரா அமைப்புகளுக்கும் ரிம 203 மில்லியன் மித்ரா நிதி ஒதுக்கப்பட்டது. அதில் 60 விழுக்காட்டினர் அதன் நோக்கத்தை நிறைவு செய்யவில்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கணித்தது. அதன் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
நிலைமை இவ்வாறு இருக்க ஒட்டுமொத்தமாக ஒரு தணிக்கைச் சோதனைடே சரியானத் தீர்வாகும் எனத் தெரிவித்தார் யுனேஸ்வரன்.
இந்த ஊழல்களுக்கும் ம.இ.கா.வுக்கும் தொடர்பு இல்லை என மறுக்கின்ற நிலையில், அன்வார் இபுராகிமின் சவாலை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அது வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும் எனக் கூறும் யுனேஸ்வரன், இவ்வாறானத் தணிக்கைச் சோதனைக்கு ம.இ.கா. அஞ்சுகிறதா எனும் கேள்வியையும் முன்வைத்துள்ளார்.