“அன்வாரின் தந்திர அரசியலும் வஞ்சக குணமும் மாறவே இல்லை!” – ஐநா மன்றத்தின் ICERD தீர்மானம் மலாய் சமூகத்திற்கு எதிரானதா?

Malaysia, News, Opinion, Politics, Polls

 76 total views,  1 views today

நக்கீரன்

கோலாலம்பூர் – 30/10/2022

உலக அளவில் அனைத்து வகை இன பாகுபாடுகளையும் களைவதற்கான ஐநா மன்றத் தீர்மானம் – ஐசெர்ட்டை (ICERD) மலேசியா ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது குறித்த விவாதம், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி காலத்தில் நாடாளுமன்றத்தில் எழுந்தபொழுது, தொடக்க கட்டத்திலேயே அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அதற்கு விளக்க அளிக்க வேண்டிய பிகேஆர் கட்சியைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் அப்துல்லா, தன்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் விதமாக அப்போதைய ஒற்றுமைத் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியிடம் தள்ளிவிட்டு தந்திரமாக ஒதுங்கி பதுங்கிக் கொண்டார்.

இப்போது, அரசியல் களம் மாறியுள்ள நிலையில், அதே பிகேஆர், ஐசெர்ட் தீர்மானத்திற்காக நாடாளுமன்றத்தில் பேசிய பொன்.வேதமூர்த்தியுடன் அம்னோ கைகோக்கலாமா என்று கேட்கிறது.

உலக அளவில் அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் களைவதற்கான பன்னாட்டு மாநாடு, 57 ஆண்டுகளுக்குமுன், 1965-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ஆம் நாள் ஐநா மன்றத்தால் நடத்தப்பட்டது.

அடுத்த நான்கு ஆண்டுகளில், 1969 ஜனவரி 4-இல் ஐசெர்ட் மாநாட்டுத் தீர்மானம் நடைமுறைக்கு வந்தது.

2020 ஜூலை மாத நிலவரத்தின்படி, 179 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கையொப்பமிட்டுள்ளன. மன்னர் ஆட்சி முறையை இன்னமும் கொண்டுள்ள மத்திய கிழக்கு நாடுகளான சௌதி அரேபியா, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளும் இதில் அடங்கும்.

ஆனால் இஸ்லாமிய மக்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மலேசியா, புரூணை மற்றும் வட கொரியா, தென் சூடான், அங்கோலா உள்ளிட்ட 18 நாடுகள் இன்னமும் ஐசெர்ட் தீர்மானாத்தை அங்கீகரிக்கத் தயங்குகின்றன.

ஐசெர்ட் தீர்மானத்தை மலேசியா ஏற்றுக் கொண்டால், மலாய் மக்களின் ‘பூமி புத்ரா’ அந்தஸ்திற்கும் சிறப்பு சலுகைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறிவரும் பாஸ் கட்சி, இதற்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தான் ஆட்சி செய்யும் கிளந்தான், திரங்கானு மாநிலங்களுக்கு விடுமுறை அளித்து நாட்டின் பாரம்பரிய தலைநகரான கோலாலம்பூரில் எதிர்ப்பு பேரணி நடத்தியது.

இதனால் மிரண்டுபோன வெளியுறவு அமைச்சரும் பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவருமான சைஃபுடின் அப்துல்லா, ஊருக்கு இளைத்தவர் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் என்பதைப் போல இளநிலை அமைச்சராக இருந்த பொன்.வேதமூர்த்தியிடம் ஐசெர்ட் விவகாரதை ஒப்படைத்து விட்டு காணாமல் போய்விட்டார்.

அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில், பொன்.வேதமூர்த்தியும் ஐசெர்ட் தீர்மானம் குறித்து பேசினார்.

இந்தத் பன்னாட்டு தீர்மானம் மலாய் சமுதாயத்திற்கு எதிரானது அல்ல;

ஆனால், உலக அளவில் ஆண்-பெண் வேறுபாடு உள்ளிட்ட இனம், சமயம், மொழி. நிறம் சார்ந்த அனைத்து வேறுபாடுகளை புறந்தள்ளி, மனிதர்கள் அனைவரும் சமம் என்ற நிலையை உலக அளவில் ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புதான் இந்தத் தீர்மானம்.

கடைசியில் ஒற்றை மனிதராக ஐசெர்ட் குறித்து நாடாளுமன்றத்தில் பேசி, அமைச்சரவைக்குரிய கூட்டுப் பொறுப்பை பொன்.வேதமூர்த்தி நிலைநாட்டினார். இந்த விவகாரம் அந்த அளவுடன் 14-ஆவது நாடாளுமன்றத்தில் நிலைகுத்திப் போனது.

இதுதான் உண்மையில் நடைபெற்றது.

மலேசிய அரசியலில், தன் மனைவி, மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை தேர்தல் களத்தில் இறக்கிவிட்டு அரசியல் லாபம் பார்க்கும் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் பிகேஆரின் தேர்தல் அறுவடைக்கு காரணமான ஹிண்ட்ராஃப் இயக்கத்தையும் அதன் அரசியல் கரமான மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபியையும் நம்பிக்கைக் கூட்டணியில் சேர்க்காமல் வஞ்சித்து வந்ததன் விளைவாக, எம்ஏபி தேசிய முன்னணியுடன் குறிப்பாக அம்னோவுன் தேர்தல் உறவு கொண்டதை பொறுக்க முடியாமல், ஐசெர்ட் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியவரும் எம்ஏபி தலைவருமான பொன்.வேதமூர்த்தியுடன் அம்னோ சேரலாமா என்று கேட்டு தன் வஞ்சக குணத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது அன்வாரின் பிகேஆர் கட்சி.

பாஸ் கட்சியுடன் சேர்ந்து கொண்டு பிகேஆரும் பல இன மக்கள் வாழும் மலேசியாவை 20-ஆம் நூற்றாண்டுக்கு பின்னோக்கு நகர்த்துன்றன என்பதை நடுநிலை வாக்காளர்கள் தங்களின் சிந்தனையில் கொள்வார்கள் என்பது திண்ணம்.

_________________________________________________________________________

நக்கீரன் – மூத்த ஊடகவியலாளர். அரசியல் நிலவரங்களை கவனித்து வருபவர்.

இந்தக் கட்டுரை ஐ சேனலின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக ஆகாது.

Leave a Reply