அன்வாரின் தலைமைக்கு நாடு காத்திருக்கிறது; 15-ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி ஒன்றே இலக்கு – டாக்டர் ஜி.குணராஜ்

Malaysia, News, Politics

 150 total views,  1 views today

கிள்ளான்-

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்னும் வகையில் செந்தோசா தொகுதி மக்களுக்கு பல வகையாலும் சமூக, கல்வி, பொருளாதார சேவையை வழங்கிவரும் மக்கள் தலைவர் டாக்டர் ஜி.குணராஜ், மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின், மாநில அளவிலும் இவரின் சேவை விரிவடைந்துள்ளது.

இப்பொழுது, காலம் கனிந்துள்ள நிலையில்,  இவரின் கடமை இன்னும் தேசிய அளவில் விரிவடைவதற்கான சூழல் உருவாகி உள்ளது. அதன் அடிப்படையில்தான் தேசியத் தலைமையின் ஆதரவுடனும் மாநில மந்திரிபெசாரின் ஒத்துழைப்புடனும் பிகேஆர் தேசிய உதவித் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுவதாக தெரிவிக்கிறார் குணராஜ்.

நாடு 15-ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மலேசிய அரசியலில் மறுமலர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படும் மக்கள் நீதிக் கட்சி-பிகேஆர்-இல் உட்கட்சித் தேர்தல், இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற இருக்கிறது.

இந்த நேரத்தில், பிகேஆர் என்னும் அரசியல் இயக்கத்தின் இன்றையத் தேவை ஒற்றுமையும் வலிமையும்தான். இவை இரண்டையும் கட்சி உறுப்பினர்களும் தலைவர்களும் உயர்த்திப் பிடித்தால்தான் நாளைய மலேசியாவை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வழிநடத்தும் சூழல் உருவாகும்.

இந்த ஒற்றைச் சிந்தனையின் அடிப்படையிலும் கட்சியின் தேசியத் தலைவர் அன்வார் இப்ராகிமின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கத்திலும் பிகேஆர் தேசிய உதவித் தலைவர் பொறுப்பிற்கு போட்டி இடுவதாக செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் தெரிவித்துள்ளார்.

உலக அரசியல் தலைவர்களில், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைப் போல வஞ்சகத்திற்கு சூழ்ச்சிக்கும் ஆளான இன்னொரு தலைவர் இருப்பாரா என்பது ஐயமே; பிரதமர் பொறுப்புக்குக் காத்திருக்கும் தலைவர் என்ற நிலையில் முப்பது ஆண்டுகளாகக் காத்திருக்கும் தலைவர் நம்பிக்கைக் கூட்டணித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.

கடந்த பொதுத் தேர்தலில், நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். அந்த மாற்றம், அன்வார் பிரதமர் ஆக வேண்டும் என்பதுதான். அந்த வகையில், அவரை நம்பித்தான் மக்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர்.

அறுபது ஆண்டு கால தேசிய முன்னணி ஆட்சிக்கு விடைகொடுக்கவும் புதிய  விடியலை நாடியுமே மக்கள் வாக்குச் சீட்டுகளின் மூலம் நல்ல தீர்ப்பு அளித்தனர். 2018 பொதுத் தேர்தலின்போது, நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் அன்வார் இப்ராகிம் பெயரைச்சொல்லித்தான் மக்களிடம் ஆதரவு கேட்டனர்; வெற்றியும் பெற்றனர்.

ஆனால், கரையான் புற்றெடுக்க, அதில் கருநாகம் குடியேறிய கதையைப் போல, வஞ்சகத்தையும் சூழ்ச்சியையும் மனதில் ஒளித்துக் கொண்டு நம்பிக்கைக் கூட்டணியின் அரசியல் போராட்டத்தின் இடையில் வந்த சேர்ந்த துரோகிகளின் ஏமாற்றுத் தனத்தால் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி, ஐந்து ஆண்டு கால தவணையை நிறைய செய்ய முடியாமல் இடையில் கவிழ்ந்தது.

அடுத்தப் பொதுத் தேர்தல் மூலம் இதை நேர் செய்ய வேண்டிய கடப்பாடு பிகேஆர் உறுப்பினர்களுக்கும் தலைவர்களுக்கும் உள்ளது. அதற்கு முன்பாக கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது.

பிகேஆர் அங்கத்தினர்களும் தேசிய-மாநில-வட்டாரத் தலைவர்களும் தங்களுக்கு இடையிலான வேறுபாட்டையும் கருத்து பேதங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தேசியத் தலைவரின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை காலம் ஏற்படுத்தி இருக்கிறது; இது, காலத்தின் கட்டாயமும்கூட.

இந்த சிந்தனையின் அடிப்படையில்தான், அதுவும் தேசியத் தலைமையின் வழிகாட்டலுடனும் மாநில ஒருங்கிணைப்பாளரும் மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் ஆதரவுடனும் கெஅடிலான் தேசிய உதவித் தலைவர் பொறுப்புக்கு போட்டி இடுவதாக குணராஜ் தெரிவித்துள்ளார்.

பிகேஆர் கட்சித் தேர்தலில் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் இணைந்து களம் காண்பது, மக்கள் தலைவர் குணராஜுக்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.

தேசிய அளவில் பி-40 தரப்பு இந்தியர்களின் மேம்பாட்டிற்காக சிறப்பு கவனம் தேவைப் படுகிறது. அதைப்போல, தமிழ்ப் பள்ளிகளின் பாதுகாப்பு, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்-தமிழிலக்கியப் பாடங்களுக்கு முறையான வாய்ப்பு; இந்திய மாணவர்களுக்கு உரிய கல்வி-வேலைவாய்ப்பு,  அதைப்போல இளைஞர்களுக்கு தொழில் கல்விப் பயிற்சி உள்ளிட்ட அனைத்தையும் சீராக மேற்கொள்வதற்கு கெஅடிலான் கட்சியின் தேசிய அளவிலான பொறுப்பு உந்துதலையும் ஊக்கத்தையும் அளிக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக கட்சியின் தேசியத் தலைவருக்கு பக்கபலமாக திகழ்வேன் என்று உறுதி அளிக்கும் டாக்டர் குணராஜ், பிகேஆர் உறுப்பினர்களும் வட்டாரத் தலைவர்களும் தன்னை ஆதரித்து தேசிய உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறார்.

Leave a Reply