இணைப்பாட ஆசிரியர் மீது பழி போடுகிறார் தலைமை ஆசிரியர் ! சத்தியப் பிரமாணம் செய்த பெற்றோர் !

Malaysia, News, Politics, Polls

 229 total views,  1 views today

– குமரன் –

கோம்பாக் – 15/10/2022

தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களை மறுப்பதோடு அந்த விவகாரத்தை இணைப்பாட ஆசிரியையின் பக்கம் திசை திருப்பி வீண்பழியைச் சுமத்துகிறார் ஒரு தலைமை ஆசிரியர் எனக் குறிப்பிட்டு பெற்றோர் ஒருவர் சத்தியப் பிரமாணம் செய்திருக்கும் தகவல் ஐ சேனலுக்கு நம்பத்தகுந்த வட்டத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகத் தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான சில அதிகார முறைகேடல்கள் குறித்த செய்தியை ஐ சேனல் வெளியிட்டு வந்துள்ளது. அந்த வரிசையில், ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியையின் அதிகார முறைகேடல்களும் அம்பலப்படுத்தப்பட்டன.

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத, சில தரப்பினர் ஐ சேனலுக்கு மிரட்டல் விடுத்தும் காவல் துறை புகாரில் ஐ சேனலின் பெயரைக் குறிப்பிட்டும் வந்துள்ளனர்.

அப்பள்ளியின் பெற்றோர் ஒருவர் இந்தத் தலைமை ஆசிரியையின் முறைகேடல்கள் அனைத்தையும் குறிப்பிட்டு கல்வி அமைச்சு, மாநிலக் கல்வி இலாகா ஆகியவற்றுக்குப் புகார் அளித்திருந்தை மக்களின் குரலாகவும் அவர்களுக்கான ஓசையாகவும் விளங்கி வரும் மலேசியத் தமிழ் நாளேட்டில் செய்தி வெளியிட்டிருந்தார்.

அதற்கு மறுப்புச் செய்தி கொடுத்த அந்தத் தலைமை ஆசிரியை , அதே பள்ளியில் பணி புரியும் இணைப்பாட ஆசிரியர் மீது வீண்பழியைச் சுமத்தி தமக்கும் பள்ளிக்கும் களங்கம் ஏற்படுத்தவே அந்த இணைப்பாட ஆசிரியர் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

தலைமை ஆசிரியை கொடுத்த அந்த மறுப்புச் செய்தியில் குறிப்பிட்டது போல் இணைப்பாட ஆசிரியர் மீது குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் ஆதரமற்றக் குற்றச்சாட்டுகளும் அவதூறுகளும் எனக் கூறி சத்தியப் பிரமாணம் செய்திருக்கிறார் அந்தப் பெற்றோர்.

அந்தத் தலைமை ஆசிரியரின் நடவடிக்கைகள் மீது தாமே முன்வந்து புகார் கொடுத்ததாகவும் யாருடையத் தூண்டுதலின் பெயரில் செய்யவில்லை எனவும் அந்த சத்தியப் பிரமாணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இரு ஆடவர்கள் அந்தப் பெற்றோரைச் சந்தித்து தலைமை ஆசிரியை மீது கொடுத்தப் புகாரை மீட்டுக் கொள்ள வீட்டிற்குத் தேவையானப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பதாகப் பேரம் பேசியதையும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டு இருந்தார்.

சத்தியப் பிரமாணச் சட்டம் 1960இன்படி தாம் கொடுத்துள்ளப் புகார் யாவும் உண்மை எனவும் அந்தப் பெற்றோர் குறிப்பிட்டுள்ளார்.

சத்தியப் பிரமாணச் சட்டத்தின்கீழ், தவறானத் தகவல் கொடுப்போருக்கு 6 மாத கால சிறையோ அல்லது ரிம 10,000 தண்டமோ அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் குரலான நாளேடு மன்னிப்பு கேட்டதா ?

மேலும், சி சேனலுக்குக் கிடைத்தத் தகவலின்படி, தவறான செய்தி வெளியிட்ட மக்களின் குரலாக விளங்கும் அந்த நாளேட்டுக்கு தாம் நேரடியாகச் சென்று தன் மீது அந்தப் பெற்றொர் கொடுத்த கொடுத்தக் குற்றச் சாட்டுகளுக்கு மறுப்பு செய்தி கொடுத்து மறுநாளே (9-10-2022) அதே நாளேட்டில் தலைமை ஆசிரியரின் செய்தியும் வெளியிடப்பட்டது.

மறுப்புச் செய்திக்காக அந்த நாளேட்டின் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்ற அந்தத் தலைமை ஆசிரியை, அவரது பக்கம் இருப்பதாகக் கூறப்படும் நியாயங்களை முன்வைத்த பிறகு, மக்களின் குரலாக விளங்கும் அந்த நாளேடு தலைமை ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் குறிப்பிட்டு காவல் துறை புகார் ஒன்றை இந்தத் தலைமை ஆசிரியை கொடுத்திருப்பதாகவும் ஐ சேனலுக்கு ஆதாரத்துடன் தகவல் கிடைத்துள்ளது.

அப்படி ஒரு காவல் துறை புகாரைச் செய்து அதனை கல்வித் துறை சார்ந்த அலுவலகத்தில் இந்தத் தலைமை ஆசிரியர் கொடுத்திருக்கிறார். தமது பக்கம் எந்தக் குற்றம் இல்லாததால் அந்த நாளேடு மன்னிப்பு கேட்டதாக கல்வி அலுவலகத்தில் காட்டிக்கொள்ள இவ்வாறானச் செயலை அந்தத் தலைமை ஆசிரியர் செய்தாரா எனும் ஐயப்பாட்டை இங்கே எழுப்பி இருக்கிறது.

அந்த காவல் துறை புகாரில் கூறப்பட்டது போல் அந்த நாளேடு உண்மையிலேயே மன்னிப்பு கேட்டதா ? என விசாரித்த போது, அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்பது தெரிய வந்துள்ளது. நாட்டின் முதன்மைத் தமிழ் நாளேடுகளில் ஒன்றான அந்தப் பத்திரிகையைக் குறிப்பிட்டு அந்தத் தலைமை ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுவதற்கானக் காரணம் என்ன ?

காவல் துறை புகாரை யாரும் பார்க்கப்போவதில்லை எனும் அலட்சியப் போக்கா ?

தமது மகளைக் கட்டாயப்படுத்தி இணைப்பாட ஆசிரியர் மீது குற்றஞ்சாட்டி புகார் ஒன்றை எழுத வைத்து அந்தப் புகாரை கல்வி இலாகாவிடம் தலைமை ஆசிரியை கொடுத்திருந்ததை பெற்றோர் தமது முந்தையப் புகாரில் தெரிவித்திருந்தார்.

தலைமை ஆசிரியரின் அனுமதி இல்லாமல் மாணவியை பள்ளிக்கு வெளியில் கல்வி இலாகாவின் ஏற்பாட்டில் நடந்தப் போட்டி ஒன்றுக்கு இணைப்பாட ஆசிரியர் அழைத்துச் சென்றதாக அந்தத் தலைமை ஆசிரியர் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இது குறித்து கல்வி அமைச்சிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபொழுது, இணைப்பாட ஆசிரியரின் அறிக்கை, இல்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்ட அனுமதிக் கடிதங்கள், இதர ஆவணங்கள் எல்லாம் முழுமையாக இருப்பதாகக் கல்வி அமைச்சிடம் இருந்து ஐ சேனலுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

கல்வி அமைச்சையே மீறுகிற அளவுக்கு ஆற்றல் பெற்றவரா அந்தத் தலைமை ஆசிரியை ?

காவல் துறைப் புகாரில் ஒரு தமிழ் நாளேடு மன்னிப்பு கேட்டது எனப் பொய் கூறும் அளவுக்கு நாளேடுகளை அந்தத் தலைமை ஆசிரியர் குறைத்து மதிப்பிடுகிறாரா அல்லது மதிக்கவே இல்லையா ?

அடுக்கடுக்காக இந்தப் பள்ளி குறித்தப் புகார்களும் பிரச்சனைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதற்கானக் காரணம் என்ன ?

இந்தத் தொடர்கதை என்று முடியும் ? நடவடிக்கை எடுக்கப்படுமா ?

காத்திருப்போம் !

Leave a Reply