
இதய துடிப்பறி கண்காணிப்பு அமைப்பு உருவாக்கம்- தங்கம் வென்றனர் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
394 total views, 1 views today
டி.ஆர்.ராஜா
பட்டர்வொர்த்-
பன்னாட்டு புத்தாக்கப் படைப்பாற்றல் தொழில்நுட்பக் கண்காட்சியில் பினாங்கு, பட்டர்வொர்த் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர். இதய துடிப்பறி கண்காணிப்பு அமைப்பு (IOT HEARTBEAT MONITARING SYSTEM ) எனும் படைப்பை உருவாக்கி தங்கப்பதக்கம் வென்றனர்.
இப்போட்டியில் தன்வீர் த/பெ சுகுமாறன், ஹரினி ராதா த/பெ கணேசன், சஞ்சிதா த/பெ விஜையானன், ஜணனி த/பெ பூபாலன், வசுந்தரா தபெ/ கண்ணையா ஆகிய ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் பங்கெடுத்துச் சாதனை புரிந்துள்ளனர்.
தொடர்ந்து, MyRis Innovation Mentor Award-இன் வெள்ளி விருதை இப்பள்ளி தொழில்நுட்ப ஆசிரியை குமாரி ஜெக்குலின் த/பெ மார்டின் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய வகை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் சுமார் இரண்டு ஆண்டுகளாக syscore நிறுவனம் robotic, ardino, micro bit தொடர்பான பல வகுப்புகள் நடத்தி வருகின்றது. ஓராண்டு காலமாக இவ்வகுப்பில் பயின்று வரும் மாணவர்களின் சிறந்த படைப்பின் மூலம் இம்மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போட்டிக்குப் பயிற்றுவிக்கப்பட்டனர்.
இப்புத்தாக்கப் போட்டியின் படைப்புகளை உருவாக்குவதிலும் மாணவர்களைப் பயிற்றுவிப்பதிலும் syscore நிறுவனம் பெரும் பங்காற்றியுள்ளது.இவ்வேளையில் syscore நிறுவன இயக்குனர் காளிதாசனுக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் யாலீஸ்வரன் தர்மலிங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பினாங்கு மாநில அரசின் மானியத்தின் வழி இத்தொழிற்நுட்ப வகுப்புகள் பினாங்கு தமிழ்ப்பள்ளிகளில் மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆதரவுடனும் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலுடனும் இயங்கி வருவதை பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு யாலீஸ்வரன் தர்மலிங்கம் தெரிவித்துக் கொண்டார்.