இந்தியருக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை ஜசெக தற்காக்கும்- அந்தோணி லோக்

Malaysia, News, Politics

 134 total views,  2 views today

கிள்ளான் –
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்தியர்களின் நலன் காக்கும் பொருட்டு மாநில அரசில் இடம்பெற்றுள்ள இந்தியருக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை ஜசெக தற்காக்கும் என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.


நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் மிகவும் போராட்டம் மிகுந்தது ஆகும். அதில் இழந்த ஆட்சி அதிகாரத்தை நாம் மீண்டும் கைப்பற்ற வேண்டும். மலேசியர்கள் பெரும் நம்பிக்கையில் நாட்டை ஆளும் அதிகாரத்தை நம்மிடம் வழங்கினர். ஆனால் ‘அரசியல் தவளை’களின் சுயநலத்தால் பக்காத்தானிடமிருந்து ஆட்சி அபகரிக்கப்பட்டது.
புத்ராஜெயாவை நாம் இழந்தது போல் சிலாங்கூர் மாநிலத்தை நாம் ஒருபோதும் இழந்து விடக்கூடாது. பல இன மக்கள் வாழும் இம்மாநிலம் பல்வேறு மேம்பாடுகளை கண்டுள்ளது. அதனை நாம் ஒருபோது அழித்து விடக்கூடாது.


2008ஆம ஆண்டு முதல் சிலாங்கூர் மாநில ஆட்சியை நாம் சிறப்பாக ஆண்டு வருகிறோம். முன்னெடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்களினால் மாநில மக்களின் வாழ்வாதாரம் மேமபடுத்தப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநில ஆட்சி அதிகாரம் அம்னோ,. பாஸ் கட்சிகளிடம் வீழ்ந்தால் நாம் முன்னெடுத்த திட்டங்களெல்லாம் பாழாகி விடும். இனவாத அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் அம்னோ, பாஸ் கட்சியால் அனைத்து இன மக்களுக்குமான சுபீட்சமான வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது.
ஆனால் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அனைத்து மக்களுக்கும் சிறப்பான சேவை வழங்கி வருகிறது. குறிப்பாக ஜசெக அனைத்து மலேசியர்களுக்குமான கட்சி என்ற கோட்பாட்டை நிரூபித்தே வந்துள்ளது.

ஜசெகவின் இந்திய பிரதிநிதிகளை சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்க ஆகிய மாநிலங்களில் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நியமித்தோம். பினாங்கில் துணை முதல்வர், பேராவில் சட்டமன்ற சபாநாயகர் போன்ற பதவிகளை இந்தியர்களுக்கு வழங்கி அச்சமூகத்தின் பிம்பத்தை மாற்றி காட்டியது ஜசெக கட்சியாகும்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக தற்போது மாண்புமிகு வீ.கணபதிராவ் பதவி வகித்து வருகிறார். ஜசெகவின் இந்திய பிரதிநிதியாக அவர் சிறப்பான சேவைகளை முன்னெடுத்து வரும் நிலையில் வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கைப்பற்றும் நிலையில் இந்தியருக்காக வழங்கப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை ஜசெக தற்காக்கும்.
இந்தியர்களின் குரல் மாநில அரசில் எதிரொலிக்க வேண்டும் எனும் அடிப்படையில் இந்தியருக்கான மாநில அரசு பதவியை ஜசெக தற்காக்கும் சூழலில் அது இம்மாநில மக்களின் நலன் காக்கும் வகையில் அமைந்திடும் ஓர் ஆக்ககரமான திட்டமாக விளங்கிடும் என்று அண்மையில் கிள்ளான் ஜசெக தொகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற விருந்துபசரிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட அந்தோணி லோக் இவ்வாறு கூறினார்.

இந்நிகவில் ஜசெக தலைவர் லிம் குவான் எங், துணைத் தலைவர் கோபிந்த் சிங், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக், நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் பாப்பராய்டு, உட்பட ஜசெகவினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

Leave a Reply