இந்தியர்களின் உரிமைகளை அழிக்க துடிக்கும் அம்னோ, பாஸ்- கணபதிராவ் தாக்கு

Malaysia, News, Politics

 178 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

இந்நாட்டிலுள்ள இந்தியர்களின்ன் உரிமைகளை அழிப்பதற்கு அம்னோவும் பாஸ் கட்சியும் துடிதுடியாய் துடிக்கின்றன. ஆனால் நம்மை பாதுகாக்கும் கட்சி எது என்பதனை இந்தியர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

தேர்தல் வந்தாலே இந்தியர்களை பகடைக்காயாக பயன்படுத்துவதே அண்மைய கால நிகழ்வாக அமைந்து விட்டது. சிறுபான்மை இனமான இந்தியர்களின் வாக்குகளே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் துருப்புச் சீட்டாக உள்ளது.

அதற்காகவே இந்தியர்களுக்கான உதவிகளையும் சலுகைகளையும் வாரி வழங்குவர். ஆனால் இந்தியர்களின் உரிமைகளை நசுக்கும் வேலையையே அம்னோ, பாஸ் கட்சிகள் செய்து வருகின்றன.

தாய்மொழிப் பள்ளிகள் வேண்டாம் என்பார்கள், தமிழ்ப்பள்ளிகள் நாட்டில் இருக்கக்கூடாது என கொக்கரிப்பார்கள், ஆலயங்களை உடைத்தெறிந்து நமது சமயமும் பாரம்பரியமும் அழிப்பதில் மும்முரம் காட்டுவார்கள். இதுவே அம்னோ, பாஸ் கட்சிகளின் உண்மை முகம்.

ஆனால் இதனை அறியாமல் உதவிப் பொருட்களை வழங்குகின்றனர், பண உதவி செய்கின்றனர் என காரணம் காட்டி அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் ஆதரவு அளிப்பது நமது உரிமைகளை நாமே அழித்து கொள்வதற்கு ஒப்பானதாகும் என்று தாமான் ஶ்ரீ மூடாவில் பிஎச் இந்தியர் அணிவகுப்பு நிகழ்வில் உரையாற்றியபோது கணபதிராவ்  இதனை  வலியுறுத்தினார்.

2007ஆம் ஆண்டு ஹிண்ட்ராஃப் பேரணியால் இந்திய சமுதாயத்தில் எழுந்த எழுச்சி தேசிய அரசியல் நீரோட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் விளைவாக சில மாநில அரசுகள் எதிர்க்கட்சி வசம் வீழ்ந்ததன. முதல் முறையாக மூன்றில் இரு பெரும்பான்மையை ஆளூம் அரசாங்கம் இழந்தது.

நாட்டின் அரசியலையே புரட்டி போட்ட இந்திய சமுதாயத்தை வைத்து அரசியல் சதிராட்டக்காரர்களுக்கு எதிராக இந்திய சமுதாயம் அணி திரள வேண்டும். நமது வாக்குரிமையாலேயே எதுவும் சாத்தியம் எனும் நிலையில் வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு இந்தியர்கள் ஆதரவு திரள வேண்டும் என்று அவர் மேலும் சொன்னார்.

மலேசிய இந்தியர் குரல் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜசெக தலைவர் லிம் குவான் எங், அமானா கட்சி தலைவர் மாட் சாபு, மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் தலைவர் வீ.பாப்பராய்டு, அரசு சாரா பொது இயக்கத்தினர், ஆதரவாளர்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply