இந்து ஆலயங்களில் வரலாற்றை பதிவு செய்ய புதிய இணைய முகப்பு- சரவணன்

Malaysia, News

 372 total views,  1 views today

கோலாலம்பூர்-

மலேசியாவில் உள்ள அனைத்து இந்துக் கோவில்களின் தகவல்கள் வரலாற்றுப் பதிவாக இருக்க வேண்டும் எனும் நோக்கில், இணைய முகப்பு ஒன்று உருவாக்கப்படவுள்ளது என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார். அந்தப் பணியை மேற்கொள்ள “கோவில் ஆய்வு மேம்பாட்டுத் துறை” அமைத்து இந்தப் பணி தொடங்கப்படவுள்ளது.

இந்த இணைய முகப்பை உருவாக்குவதன் மூலம் மலேசியாவில் இந்து கோவில்கள் பற்றிய அதிகாரப்பூர்வ கட்டமைப்பை நிறுவ முடியும். மேலும், மலேசியாவில் உள்ள இந்து கோவில்களின் ஒட்டுமொத்த தரவுகளுக்கான முதன்மை குறிப்பு இந்த இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்த இணைய முகப்பு அனைத்து தரப்பினருக்கும் உதவும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வுக்குழுவின் முதல் கட்டப் பணியாக மலேசியாவில் உள்ள அனைத்து கோவில்களின் விவரங்களைத் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதனை வடிவமைத்து, அனைவருக்கும் உதவும் வகையில் இணையத்தளம் இயக்கப்படவுள்ளது.

இந்த ஆய்வு தமது சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் டத்தோ பரமசிவம் முத்துசாமி தலைமையில் குழு அமைத்து மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணியின் மூலம் மலேசியாவில் உள்ள இந்துக் கோவில்கள் பற்றிய தகவல்கள், ஸ்தல வரலாறு, விழாக்கள் போன்ற பல்வேறு தகவல்கள் ஒட்டுமொத்த இந்துக்களின் பயனுக்காக அமையும் என்று டத்தோஶ்ரீ சரவணன் சொன்னார்.

இத்திட்டம் தொடர்பில் நாட்டிலுள்ள சமயம் சார்ந்த பொது இயக்கங்களுடன் சந்திப்பு ஒன்றும் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வு “மலேசியக் குடும்பம்” எனும் கொள்கையின் அடிப்படையில் மலரும் என்பதோடு வளமான, நிலையான 12-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் இன,மத பேதமின்றி அனைவரும் அரவணைக்கபடுவர் என்று அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply