இனிமேல்தான் நிரந்தர சீரான செயல்முறை வகுக்கப்படுமா ? – புந்தோங் இடுகாட்டு பிரச்சனையின்போது ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் ஆற்றாமை அம்பலம் !

Malaysia, News

 156 total views,  1 views today

– குமரன் –

ஈப்போ – 3 செப் 2022

தற்போது எழுந்துள்ள புந்தோங் இடுகாட்டு சர்க்கை பொதுமக்களின் விழிப்பால் எழுந்துள்ளது எனலாம். புந்தோங் இடுகாட்டில் சடலத்தை நல்லடக்கம் செய்ய முடியுமா / அல்லது மின்சுடலை தகனம் மட்டும்தானா ? எனும் கேள்வி இப்போது எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் புந்தோங் இடுகாட்டை நிர்வகித்து வரும் ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா – அருள்மிகு மாரியம்மன் கோயில் நிர்வாகத்தார் ஆளுக்கொரு சட்டமாக அண்மையில் நடைமுறைப்படுத்தும் விவகாரம் உள்ளூர் மக்களின் அதிருப்தியை ஏற்படுத்தி நேரடியாகவே அவர்கள் கோயில் நிர்வாகத்தாரை அணுகி தெளிவில்லாத பல விவகாரங்களில் கேள்வி எழுப்பினர்.

அதன் தொடர்பில் நேற்று காலை புந்தோங் மாரியம்மன் கோயில் மண்டபத்தில் கோயில் நிர்வாகத்தாரும் பொது மக்களில் ஒரு பகுதியினரும் கூடி பல கேள்விகளை முன்வைத்தனர். அதில் பல கேள்விகளுக்கு இந்தக் கோயில் நிர்வாகத்தாரால் பதில் அளிக்க முடியாமல் போனதுடன் சடலத்தை நல்லடக்கம் செய்வதும் தகனம் செய்வதும் குறித்து எந்த விதமான SOP சீரான செயல்பாட்டு நடைமுறை ஆவணப்படுத்தி வைக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து கேள்வி எழுப்பியபோது, இனி வரும் காலங்களில் பயன்படுத்துவதற்காக இனிமேல்தான் அனைத்தையும் ஆவணப்படுத்தி வைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினர்,

இறந்த சடலத்தை புந்தோங் இந்து இடுகாட்டில் தகனம் செய்ய என்ன  சரியான வழிமுறை ? சடலத்தைப் புதைக்க அனுமதி இருக்கிறதா ? புதைத்த இடத்திலேயே மீண்டும் புதைக்கப்படுவது, அஸ்தியைப் புதைப்பது என எதற்கும் முறையான வழிமுறை இல்லை என்பது அந்த சந்திப்புக் கூட்டத்தில் பொதுமக்களுக்குத் தெரிய வந்துள்ளது.

சடலத்தைப் புதைக்க ஒரு தரப்ப்புக்கு அனுமதிப்பதும் பெரும்ப்பான்மையோருக்கு அந்த அனுமதி மறுக்கப்பட்டு இனி அடக்கம் செய்ய அனுமதி இல்லை எனச் சட்டம் கொண்டு வந்து விட்டதாகவும் இரட்டைத் தர நிர்வாகம் செய்து வரும் இந்த விவகாரம் மக்களின் கோபத்தை ஏற்படுத்தியது.

நேற்று நடந்த சந்திப்பின்போது, பழங்கதைகளையும் முந்தைய செயலவையினரையும் கை காட்டும் இப்போதைய செயலவையினர், இனிமேல்தான் அதற்கான வழிமுறைகளை வகுக்க இருப்பதாகக் கூறினர்.

விவேகானந்தன் தலைமையிலான இம்முறை செயலவைக்கு முன்னர் அவரின் தலைமையில் முந்தையச் செயலவை இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா – புந்தோங் மாரியம்மன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் புந்தோங் இடுகாட்டில் அடுத்த அறிவிப்பு வரும் வரை, நல்லடக்கம் செய்ய இயலாது எனக் கூறி இருக்கின்றனர். இதனை நேற்று நடந்த அந்தக் கூட்டத்தின் இறுதியில் அக்கோயில் நிர்வாகத்தினரால் கூறப்பட்டது.

ஏன் இந்த இரட்டைத் தரச் செயல்பாடு ? எதற்காக இந்தப் பாகுபாடு ? அடுத்த அறிவிப்பு வரும் வரை நல்லடக்கம் செய்யப்படுமா இல்லையா எனக் கூறி இருக்கிறார்கள். அந்த அடுத்த அறிவிப்பு எப்போது ? கல்லறைகளின் மேளாண்மை குறிப்பாகப் 15க்கும் மேலான கல்லறைகள் நிலைமை எனப் பல்வேறு விவகாரங்களுக்கு ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா – அருள்மிகு மாரியம்மன் கோயில் நிர்வாகத்தார் பதில் கொடுக்க வேண்டும் எனப் பலர் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

முறையான பதில் மிக  விரைவாக புந்தோங் மக்களை நாடி வந்து நிரந்தரடத் தீர்வைக் கொடுக்குமா ?

Leave a Reply