இல்லத்தரசிகள் போல் ‘இல்லத்தரசர்’களுக்கும் சொக்சோ திட்டம் ? – ஆய்வில் அரசாங்கம் இருப்பதாக சரவணன் தகவல் !

Malaysia, News

 87 total views,  1 views today

கோலாலம்பூர் – 18 ஆகஸ்டு 2022

சொக்சோவின் இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டம் ஆண்களுக்கும் விரிவுப் படுத்தப்படும் என மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ மு சரவணன் தெரிவித்தார்.

இல்லத்தரசர்களாக நாட்டில் எத்தனை ஆண்கள் இருக்கிறார்கள் என்பது குறித்தத் தகவல் அரசாங்கத்திற்குத் தேவைப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இவ்விவகாரம் குறித்து அமைச்சரவையில் எழுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் மலேசியாவில் பெரும்பான்மை ஆண்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள் என்றார்.

சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக ஆண்களுக்கும் இத்திட்டம் பயனளிக்கும்படி சட்ட திருத்தம் செய்யப்படும் எனவும் சரவணன் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 1 திசம்பர் 2022இல் இருந்து நடப்புக்கு வரும் இல்லதரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டம் தற்போது பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தச் சட்டத்தைக் கடந்த 9ஆம் நாள் மேலவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் i-Suriயின் கீழ் பதிவு செய்து கொண்ட 150,000 பெண்கள் பயனடைவார்கள்.

பெண்களுக்கான இந்தத் திட்டம் தன்னார்வ அடிப்படையிலானது. கட்டாயமாக மனைவுக்கு அவரது கணவர் இச்சேமிப்புக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதும் இல்லை. அவ்வாறு செலுத்தாதவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவும் மாட்டாது என சரவணன் கூறினார்.

ஆனால், தொடக்கத்தில் கட்டணத்தைச் செலுத்தி விட்டு இடையில், நிறுத்துகின்ற கணவர்களுக்கு ரிம 10,000க்கும் மேற்போகாத தண்டம் விதிக்கப்படும் எனவும் அவர் சொன்னார்.

ஒரு வேளை, அவ்வாறானக் கட்டணம் தொடர்ந்து செலுத்தப்படுவதில் கணவருக்குச் சிக்கல் ஏற்பட்டால், அவ்விவகாரம் குறித்து சொக்சோ அமைப்பிடம் கலந்தாலோசிக்கலாம்.

அதே சமயம், வேலைக் காப்புறுதிச் சட்டம் 2017இல் இதே திட்டத்தின் கீழ் சேமிப்புக் கட்டணத்தைச் செலுத்த ஊதியத் தகுதி ரிம 4,000 இல் இருந்து ரிம 5,000 வரை உயர்த்தப்படுவது குறித்து பேசிய சரவணன், அந்த சட்ட திருத்தம் எதிர்வரும் செப்தம்பர் 1 முதல் நடப்புக்கு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், அதில் பயன்பெறும் சலுகைகளும் அதிகரிக்கப்படுவதாகக் கூறிய அமைச்சர், கடந்த 1971 முதல் அச்சட்டத்தில் எந்த மாற்றம் செய்யப்படாமலேயே இருந்ததாகவும் தெரிவித்தார்.

மாதத்திற்கு ரிம 0.70 முதல் ரிம 7.00 வரை அத்திட்டத்தின் வழி செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply