
இளைஞர்கள் மனதைக் கவர்வது அவ்வளவு எளிதானதல்ல ! – சரவணன்
169 total views, 1 views today
– குமரன் –
கோலாலம்பூர் – 25/10/2022
நாட்டின் 15வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வழக்கமான அரசியல் வியூகங்களைக் கொண்டு இப்போதுள்ள இளைஞர்கள் மனதைக் கவர்வது அவ்வலவு எளிதான காரியம் அல்ல என மனிதவள் அமைச்சர் டத்தோ ஶ்ரீ மு சரவணன் தெரிவித்தார்.
குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களான புதிய வாக்காளர்கள் அதிகம் சிந்தனை முதிர்ச்சி அடைந்தவர்களாகவும் பொதுத் தேர்தலில் தங்களின் நிகராளிகளைத் தேர்ந்தெடுப்பது உட்பட நன்மை தீமைகளைப் பிரித்துப் பார்க்கும் பகுத்தறிவு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்றார் அவர்.
கடந்த 14வது பொதுத் தேர்தல் முடிவும் அதன் பின்விளைவையும் கண்கூடாகப் பார்த்திருக்கும் அவர்கள் சரியான முடிவை எடுத்து நாட்டின் நிலையான – உறுதியான அரசாங்கத்தை அவர்கள் இந்தப் பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுப்பார்கள் என சரவணன் குறிப்பிட்டார்.
நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் சந்திக்கக் கூடிய பெரும் சவால் குறித்து அவரிடம் வினவியபோது, தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருக்கின்ற இப்போதையச் சூழலில் சமூக ஊடகங்களே பெரும் சவாலாகப் பார்க்கப்படுவதாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா.வின் தேசியத் துணைத் தலைவருமான அவர் பதிலளித்தார்.
கடந்த 14வது பொதுத் தேர்தலில் வாட்ஸ்ஆப் எனப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் சமூக ஊடகத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால், இப்போது டிக்டோக் எனும் காணொலி சமூக ஊடகம் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தக் கூடிய ஆற்றல் பெற்றிருக்கிறது. அதே சமயம், இதே தளம்தான் தேர்தல் பரப்புரைகளீலும் அதிகம் பங்கு வகிக்கும் தளமாக இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை.
அரசியல் நிலைத்தன்மை இல்லாதக் காரணத்தால் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டியக் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. கோவிட்-19 தாக்கத்திற்குப் பிறகான பொருளாதார மீட்சியில் அரசாங்கம் பலதரப்பட்ட முயற்சிகளை எடுத்திருந்தாலும் இந்த அரசியல் நிலைத்தன்மை அற்றச் சூழல் பெரும் தடையாக அமைந்திருந்தது என அவர் மேலும் கூறினார்.
இதனால், முதலீட்டாளர்களுக்கும் அது நல்ல சூழலைக் கொடுக்க வில்லை. ஆகையால், இதனை ஒட்டுமொத்தமாக சரி செய்ய, மக்கள்தான் தமது தரப்புக்கு உதவ வேண்டும் எனக் கூறினார்.
மீண்டும் அதே வரலாற்றுப் பிழையை செய்து ஒரே தவணையில் பல பிரமர்கள் மாற்றம் ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி விட வேண்டாம் எனவும் டத்தோ ஶ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.