உற்பத்தி நாடாக இருந்தும் தள்ளாடும் மக்கள்? லிம் குவான் எங் தாக்கு

Malaysia, News, Politics

 248 total views,  2 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்,ஜூலை 20-1

நிர்வாகத் திறமையற்ற ஆளும் அரசாங்கத்தினால் பொருட்களின் விலைவாசி உயர்ந்து சாதாரண ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வு பெரும் சிரமத்தில் தள்ளப்பட்டுள்ளது. தங்களது அரசியல் பகடைக்காய்களாக மக்கள் பயன்படுத்தப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று ஜசெகவின் தலைவர் லிம் குவாங் தெரிவித்தார்.

எல்லா வளங்களையும் கொண்ட நாடுதான் மலேசியா. ஆனால் தன்னுடைய உற்பத்தி பொருட்களை கூட மலேசியர்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

செம்பனை தோட்டங்களை அதிகம் கொண்டுள்ள இந்நாட்டில் சமையல் எண்ணெய்க்கு திண்டாட்டம். அதிக விலை கொடுத்து மக்கள் வாங்க வேண்டிய அவலம் நிலவுகிறது. இதுதான் மக்களுக்கு ஓர் அரசாங்கம் வழங்கும் சிறந்த நிர்வாகமா? என்று தாமான் ஶ்ரீ மூடாவில் மலேசிய இந்தியர் குரல் ஏற்பாட்டில் நடைபெற்ற பிஎச் இந்தியர் அணிவகுப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் லிம் குவான் எங் கேள்வி எழுப்பினார்.

22 மாதங்களில் ஆட்சி புரிந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மக்களுக்கு சிறந்த நிர்வாகத்தை வழங்கியது. ஊழலற்ற ஆட்சி, வெளிப்படையான நிர்வாகம்  என தனது கொள்கையிலிருந்து விடுபடாமல் பிஎச் கூட்டணி பயணித்ததாலேயே ஊழல்வாதிகளின் சுயநலப்போக்குக்கு பக்காத்தான் ஹராப்பான் பலியாடாக்கப்பட்டது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் அதை வெளிப்படையாகவே மேற்கொண்டோம். ஆனால் ஊழல்வாதிகளாலேயே இன்றைய அரசாங்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு, நிலையற்ற அரசாங்கம், நாட்டின் கடன் அதிகரிப்பு என ஒரு பொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு பயணிக்கிறது.

மக்கள்தான் விழிப்பு நிலை அடைய வேண்டும். தங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யக்கூடிய நிலையான அரசாங்கத்தை தேர்வு செய்யக்கூடிய வாக்குரிமையை கொண்டுள்ள மக்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை தேர்வு செய்ய வேண்டும். பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியாலே மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்க முடியும் என்று லிம் குவாங் என் சொன்னார்.

இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாட் சாபு, மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் தலைவர் வீ.பாப்பராய்டு, ஆதரவாளர்கள், அரசு சார்பற்ற பொது இயக்கத்தினர் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply