“எனது ஆட்சியை மட்டம் தட்டியது போதும் !” – தேமு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் பிரதமர் இஸ்மாயில் சப்ரி

Malaysia, News, Politics

 277 total views,  1 views today

ஷா ஆலாம் – 31 ஜூலை 2022

தோல்வி அடைந்த அரசாங்கம் எனத் தமது அரசாங்கத்தை பழித்தது போதும் என தேசிய முன்னணி உறுப்பினர்களை பிரதமர் இஸ்மாயில் சப்ரி கேட்டுக் கொண்டார்.

அம்னோவின் துணைத்தலைவருமான அவர் கூறுகயில், தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இவ்வாறான செயல்பாடுகள் எதிர்க்கட்சிகளுக்கு நாமே துருப்புச் சீட்டை எடுத்துக் கொடுப்பதற்கு ஒப்பாகும் எனக் குறிப்பிட்டார்.

“தோல்வி அடைந்த அரசாங்கம் என இன்று நம்மை நாமே கூறிக்கொண்டால், அதுவே எதிர்க்கட்சிக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்து விடும்.”

நம்மை நாமே குறை கூறி பழித்தது போதும். இப்போதிருந்தே எதிர்க்கட்சியை வசை பாடத் தொடங்கினால்தான் தேர்தலைச் சந்திக்க ஏதுவாக இருக்கும் என சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி மாநாட்டில் பேசிய பிரதமர் சொன்னார்.

இன்னும் மூன்று நான்கு மாதங்களில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. நம் பெயரை நாமே கெடுத்துக் கொண்டால் மக்களை எவ்வாறு நம் பக்கம் திருப்புவது ?

முன்னதாக, மலேசிய வரலாற்றில் பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான பிரதமர் இஸ்மாயில் சப்ரி மிகவும் “வலிமை” குறைந்த பிரதமர் என ஜோகூர் மாநில அம்னோ கட்சியின் துணைத் தலைவர் நோர் ஜஸ்லான் முகம்மட் உட்பட பல அம்னோ தலைவர்கள் கூறி இருந்தனர்.

இதனிடையே, நாட்டின் 15வது பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து பிரதமர் பேசும்போது, தேர்தலில் போடியிடாதவர்கள் களம் காணும் வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

மாறாக, அனைவரும் ஒருமித்த சிந்தனையோடு ஒற்றுமையாக தேசிய முன்னணியை வெற்றியடையச் செய்ய வேண்டும் எனவும் சொந்தத் தொகுதிகளைத் தற்காப்பதோடு எதிர்க்கட்சித் தொகுதிகளையும் வெற்றிகொள்ள வேண்டும் எனவும் சொன்னார்.

ஒவ்வொரு கிளைத் தலைவரும் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றிருந்தாலும் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply