எம்ஏசிசி அதிரடி; வேதமூர்த்தி வரவேற்பு

Uncategorized

 173 total views,  1 views today

கோலாலம்பூர்-

மித்ரா நிதியை ஒரு சிலர் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த வாரம், தான் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உடனே நடவடிக்கையில் இறங்கிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) செயலை வரவேற்பதாக மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்ஏபி) தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.


இவ்விவகாரத்தில் அதிகாரிகள் தயவு தாட்சணியம் இன்றி நடவடிக்கை எடுப்பதற்கு இது பொருத்தமான நேரம். இந்திய சமுதாயத்தில் இதுகுறித்து இன்னமும் புகார் குரல்கள் ஒலித்துக் கொண்டிருப்பது, மித்ரா நிதி எந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்டதோ அந்தத் தரப்பினரை சென்றடையவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.


பெரும்பாலான வேளைகளில் அரசியல்வாதிகள் நிதி முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்படுகின்றனர். இது முதலில் நிறுத்தப்பட வேண்டும். மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று பொன்.வேதமூர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 16 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அஸாம் பக்ரி, கைது செய்யப்பட்டவர்களிடம் ‘2009 மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்ட’ப் பிரிவுகள் 16 மற்றும் 18-இன் படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


மித்ரா நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதன் தொடர்பில் அக்டோபர் 6-ஆம் நாள் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வினா தொடுத்த நேரத்தில் சம்பந்தப்பட்ட ஒற்றுமை அமைச்சர் விவகாரத்தை திசைதிருப்பும் விதமாக முன்னாள் அமைச்சரான தான் கடனை ஏற்படுத்திச் சென்றதாகக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இதே கருத்தை நாடாளுமன்றத்துக்கு வெளியே சொல்லும்படி நான் விடுத்த சவாலையும், இருவரும் சேர்ந்தே ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யலாம் என விடுத்த சவாலையும் ஹலிமா ஏற்கவில்லை.


இப்படி எல்லாவற்றையும் ஹலிமா மறுத்த நிலையில்தான், கடந்த 20.10.2021-இல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்குச் சென்று மித்ரா நிதி ஓர் அரசியல் கட்சிக்கு பெருமளவில் கொடுக்கப்பட்டுள்ளது குறித்தும் மாயமான 85 மில்லியன் வெள்ளி குறித்தும் புலன் விசாரணை மேற்கொள்ளும்படி புகார் கொடுத்ததாக பொன்.வேதமூர்த்து அவ்வறிக்கையில் மேலும் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply