ஐ சேனல் சிறப்புச் செய்தியின் எதிரொலி : களமிறங்கிய கல்வி இலாகா !

Uncategorized

 288 total views,  1 views today

தமிழ்ப்பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை விவகாரத்தில் கல்வி இலாகா தண்டிக்குமா ?
மூடி மறைக்குமா ?

கோம்பாக் – 20 ஏப்பிரல் 2022

கோம்பாக் மாவட்டத்தில் உள்ளத் தமிழ்ப்பள்ளி ஆசிரியருக்குப் பாலியல் தொல்லை குறித்த செய்தியினை ஐ சேனல் சிறப்பு செய்திப் பிரிவில் வெளியிட்டதன் எதிரொளியாக இன்று ஏப்பிரல் 20 ஆம் நாள் மாவட்டக் கல்வி இலாகாவின் அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்டத் தமிழ்ப்பள்ளியில் விசாரணை நடத்த களமிறங்கியுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.

பெண் ஆசிரியரின் மாண்பு குறித்த விவகாரத்தில் கல்வி இலாகா தற்போது எடுக்கவிருக்கும் நடவடிக்கை குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

கல்வி இலாகாவின் இந்த நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தில் பணி புரியும் பெண் ஊழியர்களின் மாண்புக்கு எந்த மாதிரியானப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பது கண்கூடாகப் பார்க்கலாம்.

மேலும், குறிப்பிட்ட ஓர் ஆண் ஆசிரியரின் இது போன்றத் தகாதச் செயல்பாடுகள் சில காலமாகத் தொடர்கதையாகவே இருப்பதாக ஐ சேனலின் விசாரணையில் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

அதே சமயம், இவ்விவகாரம் பூதாகரமாக வெடிக்கவே, சம்பந்தப்பட்ட ஆண் ஆசிரியரைக்காப்பாற்றப் பல அழைப்புகள் உதவி கோரி மேற்கொள்ளப்பட்டத் திடுக்கிடும் தகவல் பள்ளியின் நெருங்கிய வட்டத்தில் இருந்து கசிந்துள்ளது.

பெண் ஆசிரியர் பாதிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தில் மூடி மறைக்க இவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கானக் காரணம் என்ன ?

பாதிக்கப்பட்ட ஆசிரியர் விவகாரத்தில் சம்பந்தப்பட்டத் தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்காதது ஏன் ?

இது போன்றக் குற்றச் செயல்களை மூடி மறைக்கும் படலம் அரங்கேறினால், பெண் ஆசிரியர்களின் பாதுகாப்புக்குக் கல்வி இலாகா அதிகாரிகள் கொடுக்கும் மதிப்பு இவ்வளவு தானா எனும் கேள்வி எழுகிறது.

மேலும், பாலியல் தொந்தரவு தடுப்புச் சட்டம் இன்னும் நாடாளுமன்றத்தில் முழுமை எட்டாத நிலையில், இக்குற்றத்தைப் புரிவோர் அரசுத் துறைகளில் இருந்தாலும் கூட தங்களுக்கானப் பாதுகாப்பை வேறு சில விதிமுறைகளைப் பயன்படுத்தி ஒளிந்து கொள்கின்றனரா  எனவும் சந்தேகிக்க வைக்கிறது.

அரசுத் துறௌ ஊழியர்களின் குற்றச் செயல்களுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளை எடுப்பதில் மேல்மட்ட அதிகார வர்க்கம் பாராமுகம் காட்டுவது எதனால் ?

சம்பந்தப்பட்டப் பள்ளியின் உயர்மட்ட நிர்வாகத்தினரை உட்படுத்திய அதிகார முறைகேடல்களும் தவறான நடவடிக்கைகளும் ஐ சேனலின் சிறப்பு செய்திக்குழுவின் ஆய்வில் கிடைத்துள்ளன. அதிகாரம் கையில் இருக்கும் ஆணவத்தில் செயல்படும் சர்வாதிகாரக் கூட்டத்தின் குற்றங்கள் குறித்து சரியான ஆதாரங்களுடன் ஐ சேனல் மிக விரைவில் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும்.

Leave a Reply