ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? கண்ணன் கேள்வி

Malaysia, News, Politics

 135 total views,  3 views today

பெக்கோக்-

பெக்கோக் சட்டமன்றத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளராகக் களமிறங்கும் ம. கண்ணனின தேர்தல் பரப்புரைக்கான விளம்பரப் பலகை பொறுப்பற்றத் தரப்பினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இங்குள்ள தாமான் முகிபாவிலும் லாபிசிலும் தமது தேர்தல் விளம்பரப் பலகைகள் சேதப்படுத்தப்பட்டது வேண்டுமென்றே செய்த காரியம் என ம.கண்ணன் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் குறித்து பேசிய அவர், நற்பண்புமிக்க எவரும் இது போன்றக் காரியத்தில் ஈடுபடுமாட்டார்கள் எனவும் இஃது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் சொன்னார்.

வேண்டுமென்றே விளம்பரப் பலகையை சேதப்படுத்தி இருக்கிறார்கள். அவை இருந்த இடத்தில் இருந்து அகற்றி உள்ளார்கள். பலகையில் கைத்தடங்கள் தெரிகின்றன. அதிவேகமாக வீசியக் காற்றாலோ அல்லது இதர இயற்கைச் சூழலால் ஏற்பட்ட சேதமாகவோ இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.

அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் உரிமையைக் கொண்டுள்ளன. இங்கு (பெக்கோக்) போட்டியிடும் நான்கு வேட்பாளர்களும் தங்களின் பரப்புரைகளை மேற்கொள்ள சம உரிமை உண்டு. ஆகையால், இது போன்ற சதிநாச வேலைகளைச் செய்து வாக்காளர்களின் சினத்திற்கு இலக்காகும் நடவடிக்கைகளை நிறுத்துவது சிறந்தது என்றார்.

மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்து வந்தால் வேட்பாளர்கள் பயப்படுவதற்கானக் காரணம் எனவும் அவர் வினவினார்.

அதே சமயம், தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டு சட்டத்தை மீறி இருப்பதாகவும் கண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்படாத இடங்களில் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி ஆகியவற்றின் கொடிகளை பறக்கவிடப்பட்டுள்ளதை ஆணையம் கண்டும் காணாததுமாய் இருப்பதாகத் தெரிவித்த அவர், தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத் தன்மை கேள்விக்குறியாகி இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.
மாவட்ட மன்றத்தின் இடங்களின் எந்தவிதமான தேர்தல் பரப்புரை குறித்த விளம்பரப் பலகையோ அல்லது கொடியோ பொருத்தக்கூடாது என ஆணையம் குறிப்பிட்டிருந்தது. மேலும், தெரு விளக்குகள், மரங்கள், சாலைக்கு அருகாமையில் இருக்கும் இடங்களுக்கும் அது தடை விதித்திருந்தது.

இதனை முழுமையாக நம்பிக்கைக் கூட்டணியின் தன்னார்வலர்கள் பின்பற்றி உள்ளதாகவும் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி ஆகியக் கட்சிகள் முழுமையாக அந்த விதிமுறையைப் பின்பற்றவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் சிறப்பு சலுகை வழங்கப்படுவதாகவும் சொன்னார். பின்புற வாசலில் நுழைந்தவர்களுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்படுவது உண்மைதானா எனவும் ம.கண்ணன் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply