கணினியில் டைப் செய்யும்போது இனி இப்படிச் செய்யுங்கள் !

Discussion, Education, Malaysia, News, Tech

 150 total views,  1 views today

ஜான்சன் விக்டர் | 18-2-2023

இப்போது ஆசிரியர்கள் பெரும்பாலான நேரத்தில் மடிக் கணினியில் வேலை செய்கிறார்கள். அவர்கள் அறியாமலேயே பல தவறுகளைச் செய்வதுண்டு.

ஒவ்வொருவரிடமும் அவர்களுடைய தவற்றைச் சுட்டிக் காட்டினால் பல பிரச்சினைகள் ஏற்படும். முதலாவது, அவர்கள் பழக்கப்பட்டக் காரியங்களை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுடைய இயல்பான உள்மனம் மறுக்கும். எனவே, தங்களைத் திருத்திக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு மட்டும் சில ஆலோசனைகள்.

1. போதுமான வெளிச்சம்

உங்களைச் சுற்றி போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மங்கலான வெளிச்சம் உங்கள் கண் பார்வையைப் படிப்படியாகப் பாதிக்கும்.

2. திரையில் எந்த அளவு நிரம்பி இருக்க வேண்டும் ?

நீங்கள் எம்.எஸ்.வோர்ட்டில் (MS Word) டைப் செய்கிறீர்கள் என்றால், அதன் திறை கணினியை முக்கால் வாசியாவது நிரப்பியிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். திறையின் வலப் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் வெள்ளைத் தாளை பெரிதாக்கும் மெனு இருக்கும். அதில் ‘பிளாஸ்’ சின்னத்தைப் பல முறை தட்டினால் வெள்ளைத் தாள் பெரிதாகுவதைக் காண்பீர்கள். அத்தோடு கன்ட்ரோல் (Control) விசையை அழுத்திப் பிடித்தவாறே விசைக் குப்பியின் (mouse) உருளையை(roller) உங்களுக்கு எதிர்திசையில் (opposite) உருட்டினால் திரை பெரிதாகும்.

3. எழுத்துப் பிழைகளை சுட்டிக் காட்டும் விசை

தமிழ், மலாய் ஆவணங்களை உருவாக்கும்போது எம்.எஸ்.வோர்ட்டில் சிவப்பு நிற அடிக்கோடு தோன்றும். இது உண்மையில் உங்கள் மனதில் எதிர்வினையை உருவாக்கும். நாம் தவறாக எழுதினால், அதைச் சுட்டிக் காட்டுவதற்கு ஆசிரியர்கள் தவற்றுக்குக் கீழே சிவப்பு மையில் கோடிட்டுக் காட்டுவது போல், நீங்கள் ஏதோ தவறு செய்து கொண்டிருப்பதாக கணினி உங்களுக்கு சொல்லும் போது, உங்கள் மீதான நம்பிக்கை குறைந்து போகும்.

எனவே, பின்வரும் வழிமுறையில் அந்த ஆப்ஷனை ஆன் (On) செய்து விடுங்கள்:
File –> Options –> Proofing –> Hide spelling errors in this document only.
அதே போல் அதற்குக் கீழே உள்ள Hide grammar errors in this document only என்ற ஆப்ஷனையும் ஆன் செய்து விடுங்கள்.

4. எதிர்காலத்திலும் தேவைப்படும் ஆவணம்

உங்கள் எதிர்கால வேலைச் சுமையைக் கருத்தில் கொண்டு வேலை செய்யுங்கள். உதாரணமாக ஒரு கேள்வித் தாளைக் கஷ்டப்பட்டு தயாரிக்கிறீர்கள் என்றால், அடுத்த ஐந்து பத்து ஆண்டுகளுக்கும் அது தேவைப்படும் என்ற எண்ணத்தில் தயார் செய்யுங்கள். அது உங்களுக்குத் தேவைப்படாவிட்டாலும், உங்களைப் போல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கும் தேவைப்படலாம். நீங்கள் அப்படி ஓர் ஆவணத்தை அவரோடு பகிரும் போது, உங்கள் மனித நேயம் வளர்கிறது.

5. எழுத்தின் அளவு

நீங்கள் பார்த்து டைப் செய்யும் ஆவணங்களின் எழுத்து மிகச் சிறியதாக இருந்தால், அதை ஊன்றிப் பார்த்து டைப் செய்யும் போது உங்கள் கண்ணுக்கும், மனதுக்கும் அயர்வு ஏற்படும். எனவே, எழுத்து அலவைப் பெரிதாக வைத்து டைப் செய்யுங்கள்.

இன்றைய பெரும்பாலான ஆசிரியர்கள் முறையான டைப்பிங் கலையைக் கற்றுக் கொள்வது கிடையாது. எனக்கு 12 வயதாக இருக்கும் போது (1976) என் தந்தை ஒரு சிறிய டைப்ரைட்டரில் விரல் அடுக்கி டைப் செய்யும் கலையைக் கற்றுக் கொடுத்தார். உண்மையில் அந்தக் கலை பிறக்கும் போதே எண்ணில் பதிந்து விட்டது. அதை வேறு பதிவில் முடிந்தால் விளக்குகிறேன். அன்று அந்தக் கலையைச் சிரமப்பட்டுப் பழகிக் கொண்டதால்தான் இத்தனை வருடங்களுக்கும் பிறகு ஒரு ஆண்டில் ஆயிரக் கணக்கான ஆவணங்களை என்னால் உருவாக்க முடிகிறது. இந்தக் கலையைக் கற்றுக் கொள்வதற்குப் பின்வரும் தொடுப்புகளில் உலா வாருங்கள்.

https://www.typing.academy/10-finger-typing

https://www.computerhope.com/issues/ch001346.htm


https://www.readandspell.com/finger-placement-for-typing


6. பத்து விரல்களையும் பயன்படுத்தும் முறை

நீங்கள் வெறும் இரண்டு விரல்களை மட்டும் பயன்படுத்தி டைப் செய்கிறீர்கள் என்றால், அது உங்களுக்கு துரதிருஷ்டமானது. எனவே, முடிந்த வரை இக்கலையைக் கற்றுக் கொள்ளுங்கள். அத்தோடு உங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுங்கள்.

7. ஷார்ட்கட் (shortcut) விசைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.

முடிந்த வரை உங்கள் விரல்கள் விசைப் பலகையிலேயே நிலைத்திருக்க வேண்டும். அருகில் இருக்கும் விசைக் குப்பிக்கு உங்கள் வலக் கை அடிக்கடி தாவுவது ஆவணம் தயாராகும் செரிவை மட்டுப்படுத்தும். பின்வரும் தொடுப்பில் சில முக்கிய குறுக்குவழி விசைகளைக் காணலாம்.
https://www.indiatoday.in/information/story/computer-shortcut-keys-everyone-should-know-1480158-2019-03-17
நான் பின்வரும் குறுக்குவழி விசைகளை அடிக்கடி பயன்படுத்துவேன்:
Ctrl + C, Ctrl + v, Ctrl + A, Ctrl + P, Ctrl + x.

8. இரட்டைப்படை பக்கங்கள்

முடிந்த வரை ஆவணங்களின் பக்கங்கள் இரட்டைப்படை எண்களில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உதாரணமாக நீங்கள் ஓர் ஆவணத்தைத் தயாரித்து முடிக்கும் போது அதன் சில வரிகள் ஏழாம் பக்கத்துக்குச் சென்று விடுகிறது. நீங்கள் அதை அப்படியே அலுவலகத்தில் கொடுத்து அச்செடுக்கச் சொன்னால் ஏற்படும் விரயங்களை இங்கே பட்டியலிடுகிறேன்.

  • 8.1. ஒரு தாள் விரயம். உங்கள் பள்ளியில் 500 மாணவர்களுக்கு நீங்கள் ஒரு கேள்வித் தாள் தயாரிக்கிறீர்கள் என்றால் ஒரு ரிம் பேப்பரை விரயமாக்குகிறீர்கள். ஒரு வகுப்பில் ஒரு பாடத்துக்கு ஒரு ரிம் பேப்பர் விரயம் என்றால், அந்த வகுப்பில் குறைந்தது 10 சோதனைத் தாள்கள் தயாரிக்கப்படும் பட்சத்தில் 10 ரிம் பேப்பர் விரயமாகிறது. இப்படி 5 படிவங்களுக்கும் விரயமாக்கினால் 50 ரிம் வீணாகிறது. ஒரு ரிம் 8 ரிங்கிட் என்றால் 50 ரிம் 400 ரிங்கிட் அபேஸ். ஒரு தமிழ்ப்பள்ளியில் இத்தனை ரிங்கிட் அபேஸ் ஆனால் என்னவாகும்?
  • 8.2. இந்த உதாரணத்தில் 7 பக்கங்கள் என்றால் ஒரு கேள்வித் தாளுக்கு 4 தாள்கள் தேவை. அதாவது இந்த நான்காவது தாளை உங்கள் பள்ளி அலுவலக ஊழியர்கள் இந்த நான்காவது தாளையும் படிவம் எடுக்க வேண்டும். இது அவருடைய நேரத்தை விரயமாக்கும். அவர்கள் மேல் உங்களுக்கு அக்கறை இருந்தால் அந்த ஏழாவது பக்கத்தில் வரும் சில வரிகளை எப்படியாவது 6வது பக்கத்திலேயே முடித்துக் கொள்ளப் பார்ப்பீர்கள்.

  • 8.3. அலுவலக ஊழியர்கள் எப்படியாவது போகட்டும் என்று நினைத்தால் அடுத்த வரிகளை வாசியுங்கள். அந்தக் கேள்வித் தாள்களை நீங்கள்தான் ‘ஸ்டேப்பல்’ செய்விர்கள். அல்லது உங்களுக்கு உதவியாக குடும்பத்தில் உள்ளவர்களை வேலை வாங்குவீர்கள். நீங்கள் அந்த நான்காவது தாளையும் எடுத்து ஒரு கேள்வித் தாளாக உருவாக்கும் போது உங்களுக்கு நேரமும் சக்தியும் விரயமாகிறது. 500 மாணவர்களின் கேள்வித் தாள்களை ஒன்றாக இணைக்கும் போது, எப்படியாவது ஒரு அரை மணி நேரத்தையாவது வீணாக்கி விடுவீர்கள்.
  • 8.4. நாம் விரயமாக்கும் ஒவ்வொரு தாளும் உலகத்தின் எங்கோ ஒரு பகுதியில் இருக்கும் மரங்கள் வெட்டி சாய்க்கப்படுவதற்கு வழி வகுக்கிறது. இந்த உலகத்தின் பசுமை இன்னும் நீடித்த காலத்துக்குப் பேணப்பட வேண்டும் என்று கருதினால், முடிந்த வரை ஆவணங்களின் பக்கங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

9. Scanஉம் OCRஉம்

ஆவணங்களை வருடி (ஸ்கேன்) செய்து, ஓசிஆர் மூலம் உரைகளை உங்கள் எம்.எஸ். வோர்ட் ஆவணத்துக்குக் கொண்டு வருவது நீங்கள் டைப் செய்யும் நேரத்தை வெகுவாகக் குறைக்கும். நான் இத்தேவைக்கு அபி ஃபைன் ரீடர் (ABBY FineReader) என்ற மென்பொருளைப் பயன்படுத்துகிறேன். இப்போது கூகிள் டிரைவ் மூலம் கூட உங்கள் பிடிஎஃப் ஆவணத்தை வோர்ட் ஆவணமாக மாற்ற முடியும். இவ்விடம் அதை விளக்க முடியாததால், வாசகர்கள் அதைப் பற்றி விசாரித்தால் பின்னர் எழுதுகிறேன்.

10. இரைச்சல் இல்லாத சுறறுப் புறச் சூழல்

கணினியில் வேலை செய்யும் போது தேவையில்லாத சந்தடிகள் உங்கள் டைப் செய்யும் திறனை பாதிக்கும். எனவே, அக்கம் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் உரத்த குரலில் பேசி, பகீர் என்று சிரிப்பார்கள் என்றால் அவர்கள் இல்லாத இடத்தில் உங்கள் பணியைத் தொடருங்கள். வேறு இடம் கிடைக்கவில்லை என்றால், ‘ஹெட் ஃபோனை’ இரண்டு காதுகளிலும் அணிந்து கொள்ளுங்கள். மெல்லிய இசைகள் உங்கள் மனதுக்கு அமைதியைத் தந்து உற்சாகத்தை ஏற்படுத்தும்.

இப்போதைக்கு இத்தோடு விடை பெறுகிறேன். உங்களுக்கு இது புதுமையாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்தால் விருப்பம் (LIKE) தெரிவியுங்கள். அத்தோடு மற்றவர்களுக்கும் இதைப் பகிருங்கள்.

ஜான்சன் விக்டர்
செயலாளர்,
மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் கல்வி மேம்பாடு, நலனபிவிருத்திச் சங்கம்
11.02.2023

Leave a Reply