கருத்துக்களம் | அம்னோவின் ஆதரவை அன்வார் நாடலாம் ; வேதமூர்த்தி நாடக்கூடாதா ?

Uncategorized

 79 total views,  1 views today

– நக்கீரன் –

கோலாலம்பூர் – 27-10-2022

கருத்துக்களம் | கடந்த கால நிகழ்ச்சிகளை கவனத்தில் கொள்ளாமல், எதிர்கால இந்திய சமுதாயத்தைப் பற்றியும் எண்ணிப் பாராமல் அவ்வப்பொழுது காண்பதையும் கேட்பதையும் வைத்துக்கொண்டு சமூக ஊடகத்தில் அரசியல் மேதையரைப் போல கருத்து தெரிவிக்கும் அன்பர்கள், நவம்பர் 3-ஆவது வாரத்தில் நடைபெற இருக்கும் 15-ஆவது பொதுத் தேர்தல் தொடர்பில் மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபியும் அதன் தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தியும் தேசிய முன்னணியுடன் அணி சேர்வதைப் பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர்.

தவணைக் காலத்திற்கு முன்பாகவே கரைந்துபோன கடந்த 14-ஆவது நாடாளுமன்றம், மூன்று பிரதமர்களைக் கண்டது; இவர்களுக்கு இடையில் இன்னொருவரும் பிரதமர் ஆக முயன்றார். அவர்தான் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம்.

அன்வார் இப்ராகிம் பிரதமராக முயன்றபொழுது அம்னோவின் ஆதரவுடன் அந்த முன்னெடுப்பை மேற்கொண்டார். நாடாளுமன்றத்தில் தனக்கான பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக அம்னோவின் ஆதரவை அவர் நாடியபொழுது, தேசிய முன்னணியை வழிநடத்தும் அம்னோவின் தலைமை 35 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் தெரிவிப்பதாக அன்வாருக்கு வாக்குறுதி அளித்தது.

சம்பந்தப்பட்ட அம்னோநாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேரின் பெயரைக் குறிப்பிட்டு அம்னோ தலைமை ஆதரவுக் கடிதம் வழங்கிய விவரம் இணையத்தளத்தில் வெளியானது.

இதை, சமூக ஊடகங்களில் அரசியல் மேதாவித்தனம் புரியம் அன்பர்கள் எவராவது மறுக்க முடியுமா? இது குறித்து அன்வார் எந்த விளக்கமும் சொல்லாமல், அப்படியே கடந்துபோனார். அதேவேளை, அது அதிகாரப்பூர்வ கடிதம் அல்ல என்று அறிக்கை வெளியிட்டு அம்னோதான் சமாளித்தது. முக்கியமான இந்த அரசியல் நகர்வு குறித்து, நாட்டு மக்களுக்கு கடைசிவரை அன்வார் விளக்கம் அளிக்கவே இல்லை.

தனக்குப் பிரதமர் பதவி வேண்டும் என்பதற்காக, எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ள தயங்காதவர் அன்வார். அதனால்தான், கொஞ்சமும் மனம் கூசாமல், அம்னோவின் ஆதரவை கேட்டுப் பெற்றார் அவர். மற்ற பேரங்களும் படியாததால், அந்த முயற்சி கைகூடாமல் போனது.

பேரம் படிந்திருந்தால், அன்வார் அம்னோவின் ஆதரவுடன் பிரதமர் ஆகி இருப்பார். 14-ஆவது நாடாளுமன்ற வரலாற்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது உண்மையா இல்லையா?

அரசியல் ஆய்வாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களாகட்டும் அல்லது சமூக ஊடகக் கருத்தாளர்களாக இருக்கட்டும்; இப்படிப்ப்பட்டவர்களில் ஒருவர்கூட அன்வாரின் அந்த நடவடிக்கைக் குறித்தும் ஏதும் கருத்து தெடிவிக்கவில்லை.

மலேசிய இந்திய சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி, நாடாளுமன்றத்தில் உறுப்பியம் பெறக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அன்வாரைப் பற்றி ஏதும் சொல்லாமல், அன்வாரால் அடியோடு புறக்கணிக்கப்பட்ட நிலையில், எம்ஏபி கட்சி மாற்று வழியை நாடும்பொழுது மட்டும் குறுக்கே வந்து நிற்கும் இந்த சமூக ஊடக கருத்தாளர்கள் எதையும் நடுநிலையோடு சிந்தித்தால், நலம் விளையும்.

_________________________________________________________________________

நக்கீரன் – மூத்த ஊடகவியலாளர். அரசியல் நிலவரங்களை கவனித்து வருபவர்.

இந்தக் கட்டுரை ஐ சேனலின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக ஆகாது.

Leave a Reply