‘காட்சி’ திட்டத்தின் கீழ் 4 குறும்படங்கள் – வடை புரொடக்ஷனின் அரிய முயற்சி

Cinema, Malaysia, News

 59 total views,  1 views today

இரா. தங்கமணி

கோலாலம்பூர் – 12 செப் 2022

‘காட்சி’ திட்டத்தின் கீழ் 4 இளம் இயக்குனர்களை உருவாக்கி அவர்களின் படைப்பில் உருவான குறும்படங்களை வெளியீடு செய்கிறது வடை புரொடக்ஷன் நிறுவனம்.

வடை புரொடக்ஷன் நடத்திய பயிற்சி பட்டறையில் பங்கேற்று தேர்வான 4 இளம் இயக்குனர்களையும் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கான முதல்படியாக குறும் படங்களை இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திள்ளோம் என்று வடை புரொடக்ஷன் நிறுவனர் கே.கவிநந்தன்.

அதன் அடிப்படையில் நந்தின் சாமிநாதன் இயக்கத்தில் ‘Therapy Session’, சிவா கோவிந்த் இயக்கத்தில் ‘The Chain of Anger’, ஹேமா நந்தினி இயக்கத்தில் ‘Mrityunjay’, வீஷ்மன் இயக்கத்தில் ‘ஒரு நண்பன் இருந்தால்’ ஆகிய குறும்படங்கள் குறைந்த முதலீட்டில் தரமான படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.

வடை புரொடக்ஷன் வழங்கிய திரைத்துறை பயிற்சி பட்டறையில் பங்கு கொண்ட இவர்களது திறமை வெறுமனே காணாமல் போய் விடக்கூடாது எனும் நோக்கில் குறும்படங்களை இயக்க வைத்து அதனை வெளியீடு செய்யும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது என்று அண்மையில் செராசிலுள்ள ஃபீனாஸ் அரங்கத்தில் குறும்படங்களின் அறிமுக நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் கவிநந்தன் கூறினார்.

வளர்ச்சி கண்டு வரும் மலேசிய திரைத்துறையில் இந்த 4 இளம் இயக்குனர்களும் மிளிர உரிய வாய்ப்புகள் கிடைக்கப்பட வேண்டும். அதற்கு இவர்களின் திறனை வெளிகொணர்ந்து நிரூபிக்க வேண்டி இருப்பதால் குறும்படங்களை தயாரிக்கும் பொறுப்பை தமது நிறுவனமே ஏற்றுக் கொண்டது.

அதோடு இளம் இயக்குனர்களின் 4 குறும்படங்களும் செப்டம்பர் மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வடை புரொடக்ஷன் யூ டியூப் பக்கத்தில் வெளியிடப்படும். அதற்கு மலேசிய ரசிகர்கள் சிறப்பான ஆதரவை வழங்க வேண்டும் என்று ‘வெண்பா’ படத்தின் இயக்குனருமான கவிநந்தன் சொன்னார்.

இதனிடையே இந்த குறும்பட அறிமுக நிகழ்வில் இயக்குனர் கவிநத்தனின் ‘தீதும் நன்றும்’ குறும்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ கோகிலன் பிள்ளை உட்பட அழைக்கப்பட்ட பிரமுகர்களும் குறும்படங்களில் நடித்துள்ள கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply