[காணொலி] சிறப்பு செய்தி | இந்தியர்களின் நலன் காக்க தனி இலாகா உருவாக்கப்படுமா ?

Malaysia, News, Opinion, Special News

 174 total views,  2 views today

இரா தங்கமணி – குமரன் | 6/12/2022

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் தேசிய முன்னணி கூட்டணியுடன் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டு புதிய அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில் இரு இந்திய முழு அமைச்சர்கள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் மட்டுமே மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு இந்திய சமுதாயத்தின் ஆதரவு பெருமளவு கிடைத்ததை அடுத்து இந்த புதிய அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு என்ன செய்யவுள்ளது? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

இந்நாட்டு இந்தியர்களை பொறுத்தவரை தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள், பொருளாதாரம், வாழ்வாதாரம், குடியுரிமை, அடையாள ஆவணங்கள், கல்வி, வேலை வாய்ப்பு, வணிகம், சொத்துடைமை, பங்கு பரிவர்த்தனை, முதலீட்டு அம்சங்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன.

ஒரேயொரு அமைச்சர் மட்டுமே ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் பிரச்சினையை தீர்க்க முடியாது எனும் நிலையில் இந்தியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியர் விவகார இலாகா (Jabatan Hal Ehwal India) உருவாக்கப்படுமா? என்ற கேள்வி எழுகிறது.

 முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தலைமைத்துவத்தின்போது SITF எனப்படும் இந்திய விவகார சிறப்பு செயலாக்கப் பிரிவு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் காணாமல் போய்விட்டது.

இந்திய விவகாரங்களை கவனிப்பதற்கு சிறப்புப் பிரிவை உருவாக்குவதை காட்டிலும் தனியொரு இலாகா உருவாக்கப்படுவதே சால சிறந்ததாகும்.

இஸ்லாமியர்களுக்கு ஒரு Jabatan Agama Islam, பூர்வக்குடியினரின் நலன் காக்க Jabatan Hal Ehwal Orang Asli போன்று இந்தியர்களின் நலன் காக்க Jabatan Hal Ehwal India உருவாக்கப்படுவதில் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் முனைப்பு காட்டுமா?

இந்தியர் நலன் சார்ந்த விவகாரங்களை கவனிக்க தனித்தனி பிரிவுகளை உருவாக்குவதை காட்டிலும் அரசாங்கக் கொள்கைகளை உள்ளடக்கிய ஓர் இலாகா உருவாக்கப்படுவதே சிறந்த நடவடிக்கையாக அமையும்.

பிரிவு ஓர் அரசாங்கத் துறையாக மாறாது. ஆனால் இலாகா அரசாங்கக் கொள்கையாக மாறும்போது அதில் பணியமர்த்தப்படுகின்ற பணியாளர்கள் நிச்சயம் அரசாங்கப் பணியாளர்களாக உருமாறுவர். இதனால் அரசாங்கத்தில் இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கை உயர்வு காணும்.

மித்ரா போன்ற தனி பிரிவுகளை அமைச்சரவை கட்டுபடுத்துவதே காட்டிலும் ஒரு தனி இலாகா உருவாக்கப்பட்டு அதன் மூலம் சுயாட்சியாக செயல்படுகின்ற நிலை இந்தியர்களுக்கு உருவாக்கப்பட வேண்டும்.

இந்தியர்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி, மானியங்களை இந்த இலாகாவே யாருடைய கட்டுப்பாடும் இன்றி முழு சுதந்திரத்துடன் செயல்படுகின்ற மையமாக இந்த இலாகா தோற்றுவிக்கப்பட வேண்டும்.

83 விழுக்காட்டு இந்திய வாக்காளர்கள் பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களித்து 24 வருடமாக பிரதமர் கனவை சுமந்த டத்தோஸ்ரீ அன்வாருக்கு அப்பதவியை அலங்கரிக்கச் செய்துள்ளனர்.

அதற்கு கைமாறாக இந்திய சமுதாயத்தை சூழுந்துள்ள விவகாரங்களுக்கு தீர்வு காண தனி இலாகா உருவாக்கப்படுமா?

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரும் மனிதவள அமைச்சர் சிவகுமாரும் இதனை முன்னெடுக்க முயற்சிப்பார்களா?

Leave a Reply