காதலான தாயே டயானா !

News, Special News, World

 89 total views,  1 views today

~ குமரன் ~

31-08-1997 – இளவரசி டயானாவின் நினைவு நாள்

அவர் ஒரு புன்னகை இளவரசி. எளிய குடும்பத்தில் பிறந்து காதல் கணவரால் அரச குடும்பத்தில் நுழைந்த இங்கிலாந்தின் வேல்சின் (WALES) இளவரசி. அழகிலும் அணியுன் உடையிலும் அவர் ஒரு ஃபேஷன் இளவரசி. இவை எல்லாவற்றிலும் மேலக மக்கள் மீதுள்ள அன்பால் மக்கள் இளவரசியாக மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் உலகம் முழுவதும் தன் வசீகரத்தால வசீகரித்தவர் டயனா.

டயானா என்றால் அழகு. டயானா என்றால் அன்பு என்றெல்லாம் அறிந்த நமக்கு டயானா என்றால் வலி என்று எத்தனை பேருக்குத் தெரியும் ? முகத்தில் புன்னகையுடன் வலம் வந்த டயானாவின் வாழ்க்கை துன்பங்களும் துட்யரங்களும் நிறைந்தவை. இளமைக் காலங்களில் மட்டுமல்ல, அவருடைய திருமண வாழ்க்கையிலும் அவர் எதிர்பார்த்த அன்பு கிடைக்காமல் போனது. எல்லோரிடமும் அன்பு பாராட்டிய டயானா தான் வாழ்க்கையில் சந்தித்த கசப்பான சம்பவங்கள் தன்னைத்தானே ஒரு காலக்கட்டத்தில் வெறுக்கும் அளவுக்குத் தள்ளப்பட்டார். இந்த வார்த்தையை அவர் சொல்லும்போது அவர் இளவரசி என்பதை மறந்து ஒரு சராசரி பெண்ணாகவே தெரிந்தார்.

டயானா வாழ்வில் அப்படி என்ன நடந்தது. அவர் மரணம் ஏன் இன்று வரை மர்மமாகவே இருக்கிறது. இங்கிலாந்து அரச குடும்ப இளவரசியின் மரணம் வெறும் விபத்து என்றளவில் இங்கிலாந்து அரண்மனை வட்டம் என்றளவோடு ஏன் கடந்து சென்று விட்டது ? அரச குடும்பத்தில் ஒருவராக இருந்து அவர்களாலேயே பழி வாங்கப்பட்டார் என இங்கிலாந்து நாளேடுகள் ஏன் எழுதின ? இப்படி பல கேள்விகள் இன்றளவும் கேள்விகளாகவே இருக்கின்றன. ஆனால் டயானா மரணம் தொடர்பான செய்திகளும் மர்மங்களும் இன்றளவும் பல்வேறு திசைகளில் இருந்து வெளிவந்து இங்கிலாந்து நாளேடுகளின் தலைப்புச் செய்தியாகிறது. காலத்தால் அழியாத மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த வாழ்க்கையை கொஞ்சம் நினைவு கூர்வோம்.

இளமைக்காலம்

பெற்றோருக்கு இடையிலான விரிசலால் டயானா பிரான்சிஸ் ஸ்பென்சரின் இளமைக்காலம் அன்பு , அரவணைப்பு கிடைக்காத ஒன்றாகவே இருந்தது. பெற்றோர்கள் விவாகரத்து பெற்ற பின்னர் டயானா சுவிட்சர்லாந்துக்கும் இலண்டனுக்கும் இடையே மாறி மாறி டயானாவின் இளமைக்காலம் கரைந்தது. தாயைக் கண் முன்னே அடிக்கும் தந்தையைப் பார்த்து வளர்ந்த டயானா பிறகு, தந்தையை எதிர்த்து விடுதியில் தங்க ஆரம்பித்தார். அதனால் தான் என்னவோ சிறு வயதில் தனக்குக் கிடைக்காத அன்பை பெற்றோரின் அரவணைப்பை தனது பிள்ளைகளுக்கு ஊட்டி ஊட்டி வளர்த்த்தார். திருமணத்திற்கு முன்பும் குழந்தைகள் மீது அதிக அன்பு காட்டிய டயானா பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்தார்.

இளவரசர் சார்ல்ஸ் டயானா காதல்

அது வரை இங்கிலாந்து குடிமகளாகப் பிறந்து ஒரு சராசரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவரின் வாழ்வில் புயலடித்தது போல ஒட்டு மொத்த வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது இளவரசர் சார்ல்ஸ் – டயானா சந்திப்பு. இளவரசர் சார்ல்சை டயானா தனது மூத்த சகோதரி சாராவின் வீட்டில் முதன் முதலாகச் சந்தித்தார். அப்போது சார்ல்ஸ் சாராவின் நண்பர். அந்தச் சந்திப்புக் பிறகு டயானா – சார்ல்சுக்கு இடையே நட்பு மலர்ந்தது. அந்த நட்பை இங்கிலாந்தின் நாளேடுகள் எழுதி எழுதி காதலாக மாற்றினார்கள். இவர்கள் செல்லும் இடமெல்லாம் செய்தியாளர்கள் சென்றார்கள். பெரும்பாலான மாத, வார, நாளேடுகளின் அட்டைப் படங்களில் யாவும் வேல்சுக்கு இளவரசியாகப் போகும் டயானாவே இடம்பிடித்தார்.

இளவரசர் சார்ல்ஸ் – டயானா திருமணம்

1981 ஆம் ஆண்டு, ஊதா நிற வைர கற்கள் நிறைந்த அரச பாரம்பரொய மோதிரத்தை இளவரசர் சார்ல்ஸ் டயானாவுக்கு அணிவித்து நிச்சயதார்த்தை நாட்டு மக்களுக்கு உணர்த்தினார். உலகிலேயே நிலவுக்கு அடுத்தபடியாக அதிகம் கண்டு களித்ததாக இளவரசர் சார்ல்ஸ் – டயானாவின் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. அரச குடும்ப ராஜ்ஜிய பாரம்பரிய திருமண மரபை உடைத்து காதல் திருமணம் செய்து கொண்ட முதல் இளவரசர் சார்ல்ஸ் என்ற புதிய வரலாற்றுப் பக்கத்தைத் தொடக்கி வைத்தது இவர்களது திருமணம். 

டயானாவின் வெந்நிற ஆடை அவரை ஃபெய்ரி டேல் கதைகளில் வரும் நாயகியைப் போன்று தோற்றமளிக்கச் செய்தது. இளவரசர் சார்ல்ஸ் – டயானாவின் திருமணத்தை ஃபெய்ரி டேல் வெட்டிங் என நாளேடுகள் எழுதின. டயான ஸ்பென்சர் , இளவரசி டயானா சார்ல்ஸ் ஆக மாறி சராசரி கனவுகள் மட்டும் இன்றி சற்றி அதிகப்படியான கனவுகளுடனே பக்கிங்கம் அரண்மனைக்குள் காலடி எடுத்து வைத்தார். ஆனால் அந்தப் பட்டுப் பாதைகள் முள் பாதைகளாக மாறும் என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

வில்லியம் – ஹென்றி பிறந்தனர்

பிரித்தானியா என்னும் உல்லாசக் கப்பலில் தேனிலவைக் கொண்டாடிய இளவரசர் சார்ல்ஸ் – டயானாவுக்கு திருமணம் ஆகி ஒரே ஆண்டில் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு வில்லியம் எனப் பெயர் வைத்தனர். இளவரசர் சார்ல்ஸ் – டயானா திருமணம் அரச குடும்பத்து மரபுகளை உடைத்து நடத்தப்பட்டது போன்றே சராசரியான வாழ்க்கையில் தன் குழந்தையை வளர்க்க எண்ணினார் டயானா. அரச குடும்பத்து வாரிசுகளுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் அரண்மனைக்கே வருவது வழக்கம். ஆனால், டயானா தனது மகன் வில்லியமை நர்சரி பள்ளிக்கு அனுப்பினார். தானே கொண்டுபோய் பள்ளியில் விட்டுவிட்டு மீண்டு அழைத்து வந்தார். பள்ளிக்குச் சென்று படித்த முதல் அரச குடும்பத்து இளவரசர் என்று வரலாற்றில் இடம்பிடித்தார்.

1984ஆம் ஆண்டு டயானாவுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஹென்றி எனப் பெயர் சூட்டப் பட்டிருந்தாலும் ஹேரி என்றே அழைத்தனர். குழந்தைகளிடம் அதிக அன்பு செலுத்திய டயானா, சிறு வயதில் தான் இழந்தவைகளை அவர்களுக்கு அளித்து அதிக நேரம் அவர்களோடு செலவழித்தார். கேலி, கிண்டல், கேளிக்கை விளையாட்டு விடுதிகள் என குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிப்பார். கூடவே அரண்மனை விவகாரங்களையும் கவனித்து வந்தார்.

டயானா விதி

அரச குடும்ப விவகாரங்கள் நாளேடுகளில் அவர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தவிர மற்ற செய்திகள் அனுமதியின்றி வருவது குறைவு. ஆனால், டயானா வருகைக்குப் பிறகு இது முற்றிலும் மாற்றப்பட்டது. பக்கிங்கம் அரண்மனை விதிகள் மீறப்பட்டு புதிதாக டயானா விதியாக உருவானது. டயானா தொடர்ந்து மக்களைச் சந்திப்பது என்று சாமானியராக வலம் வந்து அரச குடும்பத்து விதிகளை எல்லாம் உடைத்தெறிந்தார். அது நாள்தோறும் செய்தியானது. ஐக்கிய அரசில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் டயானா பெயர் ஓங்கியது. அமெரிக்க அதிபர் ரீகனை வெள்ளை மாளிகையில் இளவரசர் சார்ல்ஸ் – டயானா இணையினர் சந்தித்தனர். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹாலிவூட் நடிகர் ஜான் டிரவல்டாவோடு டயானா நடனமாடி அசத்தினார். இப்படி இளவரசர் சார்ல்ஸ் – டயானா சேர்ந்து செல்லும் கூட்டங்களில் சார்ல்சை விட டயானாவுக்கு வரவேற்பு அதிகம் இருந்தது. இதுதான் இளவரசர் சார்ல்ஸ் இளவரசி டயானா இடையிலான பிரச்சனைக்குத் தொடக்கப் புள்ளி.

சார்ல்சின் டேட்டிங்

சார்ல்சுக்கு டயானாவுடனான காதலுக்கு முன்பே சில பெண்களோடு காதல் இருந்தது. அதில் முக்கியமானவர் கமிலா பார்க்கர். 1971ஆம் ஆண்டில் போலோ விளையாட்டின்போது சார்ல்ஸ் கமிலாவைச் சந்தித்தார். இருவருக்கும் இடையேயான நட்பு டயானாவின் காதலுக்குப் பிறகும் தொடர்ந்தது. டயானா இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். திருமண பந்தத்தின் ஓராண்டுக்குள்ளாகவே இளவரசர் பெயரும் கமிலா பெயரும் ஊடகங்களில் கசிய ஆரம்பித்தன. அந்த நேரங்களில் டயானா மிகுந்த மன உளைச்சலுக்குத் தள்ளப்பட்டார். கூடவே பெண்கள் இயல்பாக மகப்பேறு காலங்களில் அடையும் மன உளைச்சலும் சேர்ந்து கொண்டன.

ஃப்லுமியா

80களிலேயே டயானாவுக்கு அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கே வரக்கூடிய ஃப்லுமியா என்ற ஒரு வகை நோய் இருந்தது. அதாவது அதிகளவு உணவுகளை சாப்பிட்டுக்கொண்டே இருப்பது. இதனால் சில நேரங்களில் உடலுக்குத் தேவையான களோரிக்கு மேல் உண்ணும்போது, வாந்தி, சோர்வு, ஞாபக மறதி போன்றவையும் உண்டாகும். இதற்கான சிகிச்சைகளும் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைகளும் டயான பெற்று வந்தார்.

1992ஆம் ஆண்டு எண்ட்ரூ மாடன் எழுதிய “டயானா – அ ட்ருஎ ஸ்டோரி” டயானா தன்னைப் பற்றியும் தன் வாழ்க்கை பற்றியும் வெளிப்படையாகவே பேசிய பேட்டியும் இடம் பெற்றிருந்தது. உலகம் முழுவதும் இன்றளவில் அதிகம் விற்பனையான அந்த நூலில் தனக்கு ஃப்லூமியா நோய் இருப்பதை டயானா குறிப்பிட்டிருந்தார். இளவரசி டயானாவைத் தொடர்ந்து இங்கிலாந்தில் அதிகளவில் இந்த நோயின் தாக்கத்தில் இருந்தவர்கள் ஃப்லூமியா குறித்து வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர். அப்போதுதான் மருத்துவர்களே அதிகளவில் இந்த நோயின் தாக்கம் இருப்பதை அறிந்தனர். இது குறித்த விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை “டயானா எஃப்பெக்ட்” என்ற பெயரிலேயே நடத்தினர். டயானாவின் இந்த வெளிப்படைப் பேச்சுக்களில் பக்கிங்கம் அரண்மனை மட்டுமல்ல, இளவரசர் சார்ல்சும் விரும்பவில்லை.

டயனாவின் தனித்தன்மை

டயானாவுக்கு இவ்வளவு இரசிகர்கள் இருப்பது அவரது அழகு, இளவரசி என்பதனால் மட்டுமல்ல. சரி, தவறைத் தாண்டி அவருக்கு மனதுக்குப் பட்டதை நேர்மையாக வெளிப்படையாகப் பேசினார். அத்தகைய செயல்களையே செய்தார். குழந்தைகள் எப்போதும் சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் சரி என்பது சூழலுக்கு எற்றவாறு மாறுபடும். அப்போது உணர்வுகள் அடிப்படையில் முடிவெடுப்பதே சரி.உணர்வுகளைக் கொன்று விட்டு சரியானதைச் செய்ய அவசியம் தான் என்ன ? ஒரு பொது நிகழ்ச்சியில் பேசினார். அதன்படி வாழ்ந்தவர்தான் டயானா.

டயானாவின் மறுபக்கம்

இதுதான் டயானாவின் பலம் என்றால் அதுவே அவரின் பலவீனமும் கூட. செய்தியாளர்களிடம் தனக்கான தனிப்பட்டப் பக்கங்கள் எல்லாவற்றையும் பேட்டிகளில் கொட்டிவிடுவார். அப்படியாக பீட்டர் செட்டிர்லன் என்ற செய்தியாளருக்கு அளித்த அவரது ஒரு பேட்டி இங்கிலாந்தை மட்டுமல்ல ‘ஃபேஷன் பதுமை, புன்னகை இளவரசி’ என்று மட்டுமே டயானாவை அறிந்திருந்த உலக மக்களுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்தது. அவர் சொந்த வாழ்வில் சந்தித்த அவ்வளவு கசப்பான பக்கங்களையும் ஒரு நிரபராதியின் வாக்குமூலம் போல டயானா கூறியது பக்கிங்கம் அரண்மனையை அசைத்துப் பார்த்தது. அதைவிட அவரது பேட்டியில் அவரின் உடல்மொழி செய்தியாளர் முன்னால் பெட்டி அளிக்கிறோம், தான் ஒரு இளவரசி என்றெல்லாம் மறந்து மன அழுத்தத்தின் வெளிப்பாடாகவே அமைந்தது.

டயானா – சார்ல்ஸ் நிச்சயதார்த்தத்தன்று ஒரு செய்தியாளர் டயானாவைப் பார்த்து “நீங்கள் சார்ல்சை காதலிக்கிறீர்களா?” என்று கேட்கிறார். தனது விரல்களில் அரச பாரம்பரிய நிச்சயதார்த்த மோதிரத்தை அணிந்திருந்த டயானா “கண்டிப்பாக” என்று புன்முறுவலோடு அந்தக் கேள்வியை எதிர்கொள்கிறார்.

ஆனால், அருகிலிருந்த சார்ல்ஸ் டயானாவைத் திரும்பிப் பார்த்து “காதல் என்றால் என்ன ?” என்று கேட்கிறார். சார்ல்சின் அந்தக் கேள்வி தன்னைப் பெரிதும் பாதித்ததாக டயானா அந்தப் பேட்டியில் குறிப்பிடுகிறார். அதை உணராமலா சார்ல்ஸ் தன்னைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்றும் அப்போதே தான் செத்துவிட்டதைப் போன்று உணர்ந்ததாகவும் டயானா அந்தப் பேட்டியில் குறிப்பிடுகிறார்.

டயானா சார்ல்சை மனதார விரும்பினார். டயானாவுக்கு அப்போது வயது பத்தொன்பது. சார்ல்ஸ் டயானாவை விடப் பதின்மூன்று வயது பெரியவர். இந்த வயது வித்தியாசம் குறித்து இங்கிலாந்து நாளேடுகள் எழுதின. ஆனால், டயானா சிறு வயதில் தன் பெற்றோரிடம் இழந்த அன்பை மூத்த அனுபவமிக்கக் கணவரால் கொடுக்க முடியும் என இளவரசர் சார்ல்ஸ் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். அரண்மனைக்கு ஒரு விருந்தினராக சென்றபோது கிடைத்த அனுபவம் வேறகவும் அதே அரண்மனைக்கு மருமகளாக சென்றபோது அவை வேறாக இருந்தததைக் காண முடிந்ததைக் குறிப்பிட்ட டயானா அவை தன்னை மனதளவில் பெரிதும் காயப்படுத்தின என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டார்.

சார்ல்ஸ் – டயானா விரிசல்

இளவரசர் சார்ல்சின் தந்தை அரசர் ஃபிலிப், “உங்களுடைய திருமண வாழ்வு சரியாக அமையவில்லை என்றால் ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் மாற்றிக்கொள்ளுங்கள். அதுவரை வேண்டாம்,” என்றார். அது தன்னை மேலும் நிலைகுலைய வைத்ததாகக் குறிப்பிட்டார்.

எட்டு ஆண்டுகள் எனக்கும் இளவரசர் சார்ல்சுக்கும் இடையே வெறும் சம்பிரதாய உடலுறவே இருந்ததது என படபடவென அந்தப் பேட்டியில் பேசினார். அப்போது பேட்டி எடுப்பவர் இடைமறைத்து, “எப்படி அப்படி கூறுகிறீர்கள்?” எனக் கேட்கிறார். “என் உள்ளுணர்வு ஒவ்வொரு முறையும் கூறியது. அவருக்கு மற்றொரு பெண்ணுடனான உறவை எனக்குப் பல தருணங்களில் உணர்த்தியது. காதலித்த நாட்களில் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை சார்ல்ஸ் தொலைபேசி வழி அழைப்பார். அந்த அழைப்புக்காக அவ்வளவு எதிர்ப்பார்ப்புடன் நான் காத்துக்கொண்டிருப்பேன். அது ஒர் உன்னதமான உணர்வு. ஆனால், அத்தகைய உணர்வுகள் எங்களது தாம்பத்திய வாழ்க்கையில் எனக்கு ஒரு முறை கூட கிடைக்கவில்லை என்று அவருடைய படுக்கை அறை வரை வெளிப்படையாகப் பேசிய அந்தப் பேட்டி பிரிட்டன் மட்டுமல்ல உலக நாளேடுகளையே அலற வைத்தது. தனது தனி மனித உரிமையில் நாளிதழ்கள் அதிகளவு மூக்கை நுழைப்பதையும் ஆதங்கத்தோடு வெளிப்படுத்தினார்.

டயானாவின் மன அழுத்தம்

தனது சகோதரரின் திருமணத்தில் அழைக்கப்பட்ட தனது  தாயை, தனது தந்தையும் அவரது இரண்டாவது மனைவியும் மிக மோசமாக நடத்தியதாகவும் அதனைத் தட்டிக் கேட்ட தன்னையும் மிக மோசமாகப் பேசியதையும் அந்தப் பேட்டியில் டயானா மிக வருத்தத்துடன் கூறியிருந்தார். பல நாட்கள் தான் தனிமையில் அழுததையும் நினைவு கூர்ந்தார்.

அப்போதுதான் டயானாவின் திருமணத்திற்கு முதல் நாள் சார்ல்ஸ் கமிலாவுக்கு வாங்கிய அவர்களது செல்லப்பெயர்களான “கிலேடிசன் – ஃபிரேட்” என்பதைக் குறிக்கும் வகையில் G & F என்று பொறிக்கப்பட்டிருந்த கைச்சங்கிலி ஒன்றை டயானா பார்த்த செய்தி எல்லாம் ஊடகங்களில் கசிந்தன. கமிலா – சார்ல்ஸ் காதல் தன்னைப் பெரிதும் பாதித்ததாகவும் அதிலிருந்து மீள முதலில் அதிகம் குடிக்க ஆரம்பித்ததாகவும் உடல் மெலிந்து தன்மீதே தனக்கு வெறுப்பு வரக் காரணமாக அமைந்தது என்றும் டயானா குறிப்பிட்டார். இதுக்கு முன்பு இங்கிலாந்து ஊடகங்கள், கடுமையான மன அழுத்தத்தால் டயானா ஐந்து முறை தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்தப் பேட்டி அமைந்திருந்தது.

டயானாவின் புரட்சி

அதே போன்று இளவரசர் சார்ல்ஸ் அளித்த பேட்டி ஒன்றில் அவருக்கும் கமிலாவுக்கும் இடையேயான காதலை ஒப்புக்கொள்கிறார். அந்தப் பேட்டி ஒளிபரப்பான நாள், டயானா இளவரசிகளுக்கான உடை அணியும் மரபை உடைத்து தனது முழங்கால்கள் , தோள்பட்டைகள் தெரியும் வகையில் கவர்ச்சியான உடை ஒன்றை நிகழ்ச்சி ஒன்றுக்கு அணிந்து வந்து உடைப் புரட்சியை ஏற்படுத்தினார். இங்கிலாந்து அரச குடும்பம் அந்த உடையை பழிவாங்கும் உடை என எண்ணியது. அதற்கு முன்பு வரை டயானாவின் ஆடைகள் மேற்கு உலக ஃபேஷன் வரலாற்றில் இடம் பிடித்தன என்றால், இது ஆடைப் புரட்சியாகவே பேசப்பட்டது.

இதற்கு மேலும் டயானா – சார்ல்ஸ் பிரிவை அறிவிக்காவிட்டால் நல்லதல்ல என்று உணர்ந்த பக்கிங்கம் அரண்மனை, 1992ஆம் ஆண்டு பிரிட்டன் பிரதமர் ஜான் மேயர் மூலம் டயானா – சார்ல்ஸ் அதிகாரப்பூர்வமாக பிரிந்து விட்டனர் என்ற செய்தியை வெளியிட்டது. வேஎல்சின் இளவரசியாக டயானா தொடர்வார் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

உலக வலத்தில் டயானா

பதினோரு ஆண்டுகால காதல் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது கண்டு டயானா உடைந்துவிடவில்லை. அவரது தனிமையைக் கடக்க அதிகப் பயணங்களை மேற்கொண்டார். அந்தப் பயணம் முழுவதும் பல நோயாளிகளைச் சந்தித்தார். அவர்களோடு அதிக நேரங்களைச் செலவு செய்தார். நாடு விட்டு நாடு பறந்து போய் தொழுநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், புற்று நோயாளிகள் போன்ற கொடும் நோய்கள் ஆட்கொண்டு வாழ்வின் விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களைத் தேடித் தேடிப் போய் அவர்களுக்கு ஆறுதல் கூறி மருத்துவ உதவிகள் செய்து காயப்பட்ட தன் மனதுக்கு தானே இப்படி ஒரு சிகிச்சையை டயானா அளித்துக் கொண்டார்.

இலண்டனில் எயிட்ஸ் நோயாளி ஒருவருடன் கை குளுக்கிய டயானாவின் புகைப்படம் நாளேடுகளில் வெளிவந்தது. எயிட்ஸ் நோய் பரவ ஆரம்பித்தக் காலக்கட்டம். டயானா எயிட்ஸ் நோயாளியுடன் கைகுளுக்கிய புகைப்படங்கள் வெளியாகி தொடுவதன்வழி எயிட்ஸ் பரவாது என்ற செய்தியை உலகம் முழுவதும் கொண்டு சென்றது. அதன் பிறகு டயானா அனைத்துலக அரங்கில் மிக முக்கிய சமூக செயற்பாட்டாளாராகப் பார்க்கப்பட்டார்.

இரவு நேரங்களில் தன்னுடைய பழைய உடைகள் அது தரும் நினைவுகள் எண்ணி அழுது கொண்டிருந்த டயானா ஒரு நாள் தான் முக்கியத் தருணங்களில் அணிந்திருந்த சிறப்பு ஆடைகளை ஏலத்திற்கு விட்டு அதில் வந்த பணத்தை தொன்டு நிறுவனங்களுக்கு அளித்தார். தொண்டு நிறுவனங்களுக்கு பல வகையில் நிதி திரட்டிக் கொடுத்தார். அடுத்து டயானா தன்னுடைய அரச தகுதியைப் பயன்படுத்தி கன்னிவெடிகளுக்கு எதிரானா பரப்புரைகளில் ஈடுபட்டார்.

ஆப்பிரிக்காவில் சுரங்கங்களை வெட்ட ஆங்காங்கே புதைக்கப்படும் கன்னிவெடிகளால் பாதிக்கப்படும் அப்பாவியினர் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து அது குறித்து விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்தார். கன்னிவெடி விபத்தில் பாதிப்புக்குள்ளான குழந்தைகளைச் சந்தித்து ஆறுதலும் கூறினார்.

இந்தியாவில் டயானா

அன்னை திரேசாவைச் சந்திக்க இந்தியா வந்த டயானா தாஜ் மகாலில் தனியாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். காதல் கோட்டையான தாஜ் மகாலில் காதலர்கள் இணையராகப் புகைப்படம் எடுப்பது உலகப் பொது விதிகளில் ஒன்று. ஆனால், உலகமே காதலிக்கும் காதல் இளவரசி டயானா தனியாக தாஜ் மகால் முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மணவிலக்கிற்குப் பின்

1996ஆம் ஆண்டு டயானா – சார்ல்ஸ் சட்டப்பூர்வமாக மணவிலக்குப் பெற்றனர். இதய அறுவை சிகிச்சை நிபுணரான ஹஸ்னத் கான் உடன் ஏற்பட்ட நட்பை ஊடகங்கள் இருவருக்கும் இடையே காதல் என சித்தரித்தன. இதனை டயானா மறுக்கவில்லை. இதய அறுவை சிகிச்சையை நேரில் பார்க்க விரும்பினார் டயானா. இதய அறுவை சிகிச்சைக்காக இலண்டன் வந்த ஆப்பிரிக்கக் குழந்தைக்கு நடந்த இதய அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் குழுவோடு டயானா செவிலியர் உடையிலிருந்த புகைப்படம் வெளியாகியது. இந்த முறை இதய அறுவை சிகிச்சை தொடர்பான பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதே போன்று என்ட்ரூ மாதன் புத்தகத்தின் டயானாவின் குதிரைப் படை பயிற்சியாளர் ஜேம்ஸ் டயானாவின் தனிமையான நேரங்களில் செலவழித்திருப்பதாகவும் டயானா மறுக்கவில்லை. இப்படி டயானா இளவரசர் சார்ல்சின் நிராகரிப்புத் தாக்கத்தில் இருந்து விடுபட எதிர்வினையாக ஆண் நண்பர்களுடனேயே வலம் வர ஆரம்பித்தார். அது டயானாவின் வாழ்க்கைக்கு இறுதி அதிகாரம் எழுதப் போகும் என்று கனவிலும் டயானா அப்போது நினைத்திருக்க மாட்டார்.

டயானாவுடனான நெருக்கம் டோடியை கெல்லி ஃபிஷருடனான திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்தது. பிரான்சில் உள்ள ரிவெரியா கேளிக்கை விடுதியில் டயானா டோடி இருவரும் உல்லாசமாக இருக்கும் படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அந்த இறுதி நாள்…

பாரிசில் உள்ள டோடி தந்தைக்குச் சொந்தமான ரிட்ஸ் தங்கும் விடுதிக்கு சம்பவத்தன்று மாலை 4.15 அளவில் டயானா வந்தார். அவர் வந்த சில நிமிடங்களில் டோடியும் அங்கு வந்தார். இருவரும் மின் தூக்கியில் மேலே சென்றார்கள். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அந்தத் தங்கும் விடுதியில் இருந்தனர். டோடி தங்கியிருந்த ராயல் இம்பீரியல் சூட் அறையின் சாளரத்தில் இருந்து கீழே போப்பரசிகள் இந்த இணையரை படமெடுக்க தயாராக இருப்பதை அறிந்து அவசர அவசரமாக வெளியேறினர். தங்கும் விடுதிக்கு வெளியே வந்து மெர்சடீஸ் பென்ஸ் ஸ்280யில் ஏறிச் சென்றவர்களை இரு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்த போப்பரசிகள் இவர்களைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு காரைத் துரத்திச் சென்றனர். இறுதியில் அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

 பாரிசின் அடையாளமான ஈஃபில் கோபுரத்தின் அருகே உள்ள பாலத்தில் மோதி கார் விபத்துக்குள்ளானது. டோடியும் அவருடையப் பாதுகாவலரும் ஓட்டுனர் ஹென்ரி பாலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டயானா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆகத்து மாதம் 31ஆம் தேதி சம்பவ நள்ளிரவில் உயிரிழந்தார். இந்தச் செய்தி அடுத்தநாள் காலை அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியது. டயானாவின் இந்த அகால மரணம் உலகையே உலுக்கியது. பக்கிங்கம் அரண்மனையில் உள்ள கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அரண்மனையைச் சுற்றி பூங்கொத்துகளால் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

வில்லியம் , ஹேரிக்கு தாய் டயானாவின் மரணம் பேரிடியாய் இருந்தது. இலண்டன் மக்கள் நிலை குலைந்து போனார்கள். தெருவெங்கும் மரண ஓலம். இளவரசி டயானாவின் நல்லுடல் இலண்டன் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது மக்கள் சாலைகளில் குழுமி நின்று கண்ணீர் வடித்தனர். பல்லாயிர மக்கள் டயானாவின் இறுதி ஊர்வலத்தைக் காண சாலையின் இருபுறங்களில் நின்றிருந்த போதும் டயானாவின் நல்லுடலை எடுத்துச் சென்ற குதிரை வண்டியின் காலடிச் சத்தம் கேட்குமளவுக்கு இலண்டலின் பேரமைதி குடிகொண்டிருந்தது. இளவரசி டயானாவின் மறைவுக்கு “குட் பை டு லண்டன் ரோஸ்” , “அ ஃபேர்வல் பிரின்சஸ் டு லண்டன் ரோஸ்” என நாளேடுகள் எழுதின.

டயானாவின் நல்லுடல் பக்கிங்கம் அரண்மனையைக் கடக்கும்போது  வெளியே நின்று தலைதாழ்த்தி மகாராணி எலிசபெத் அஞ்சலி செலுத்தினார். அவர் வெளியிட்ட அஞ்சலி குறிப்பில், டயானாவிடம் கற்றுக்கொள்ள நிறைய இருந்ததாகவும் டயானாவின் மறைவு பேரிழப்பு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

டயானாவின் மறைவுக்கு டோடியுடனான நெருக்கத்தை விரும்பாத அரச குடும்பத்தின் சதி எனக் கூறப்பட்டது. டயானா டோடியின் கருவை வயிற்றில் சுமந்திருந்ததாகவும் இசுலாமிய மகனுக்கு டயானா தாய் என்பதையும் அது அரச குடும்பத்துக்குள் ஏற்படுத்தப்போகும் தாக்கங்களையும் அரண்மனை எதிர்கொள்ள விரும்பவில்லை என்று யூகங்கள் குறிப்பிடுகின்றன. பக்கிங்கம் தொடர்பான அரச இரகசியங்கள் டயானா தெரிந்து வைத்திருந்ததால் திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்து இது, இப்படி டயானாவின் மரணம் குறித்து இன்று வரை பல திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. டயானாவின் மரண வழக்கில் ஓட்டுனர் மது போதையில் சாலை சட்டவிதிகளை மீறி காரை ஓட்டியதால்தான் இந்த விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது.

வேல்ஸ் இளவரசியாக, தாயாக, ஆகச் சிறந்த சமூக சேவைப் பெண்மணியாக டயானா வாழ்ந்து மறைந்தார். “நான் இந்த நாட்டு அரசியாக இருக்க விரும்பவில்லை. நாட்டு மக்களின் மனதில் அரசியாகவே இருக்க விரும்புகிறேன்” என்று சொன்னவர்தான் டயானா.

உண்மையாகவே அப்படித்தான் இன்று வரையிலும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் டயானா. டயானா இந்த இடத்தைப் பிடிக்க இளவரசர் சார்ல்ஸின் தற்போதைய மனைவி கமீலா பார்க்கர் மட்டுமல்ல வேறு யாராலும் முடியவில்லை.

டயானா கடைசிவரை ஏங்கியது அன்பிற்காக மட்டுமே. டயானாவின் முகம் இப்போது யார் யாருக்கெல்லாம் நினைவுக்கு வருகிறதோ அதில் தலையை சற்றே கீழே தாழ்த்தியவாறு அகண்ட கண்களை மட்டும் மேலே உயர்த்தி எதிரே நிற்பவரை டயானா பார்க்கும் அந்த முகம் நினைவில் வந்தால் நீங்களும் உணர்வீர்காள். டயானா கடைசி வரை தேடியது அந்த அன்பைத்தான் என்று.

Leave a Reply