காலியானது PH கூடாரம்; டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு ஆதரவு திரண்ட 5,000 எதிர்க்கட்சியினர்

Malaysia, News, Politics

 585 total views,  3 views today

செய்தி: ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

அரசியலுக்குப் பெயர் பெற்ற சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பானைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் 5,000 பேர் அக்கூட்டணிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதோடு வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் மஇகா தேசியத் தலைவர் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு வழங்கப்போவதாக தெரிவித்தனர்.


சுங்கை சிப்புட் தொகுதியில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் பதவி வகித்து வரும் போதிலும் மக்களுக்கு சேவை செய்ய தகுதியற்ற தலைவராக இருப்பதால் அவருக்கு பின்னால் அணிவகுத்து நிற்பதை விட அடிமட்ட உறுப்பினர்களுடன் ஆதரவை விலக்கிக் கொள்ளலாம் என்பதே எங்களின் இறுதி முடிவு என்று பிகேஆர் கட்சியைச் சேர்ந்த உமாபரன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.


மானியம் வந்தால் மட்டுமே அலுவகத்தை திறப்பதும் மானியம் இல்லையென்றால் அலுவலகத்தை மூடி வைப்பதும் ஒரு தலைவருக்கான சிறந்த பண்பல்ல.


மக்களுக்கு சிறந்த சேவை வழங்குவதே நாடாளுமன்ற உறுப்பினர் முதன்மை கடமையாகும். ஆனால் அதை எதையுமே பொருட்படுத்தாமல் ஏனோதானோ போக்கில் இருப்பது மட்டுமல்லாது வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.


அவரின் பலவீனங்களை பலமுறை அவரிடம் நேரடியாகவும் கட்சித் தலைமைத்துவத்திடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. அதோடு கேசவன் மீதான அதிருப்தி தொடர்ந்து கொண்டிருப்பதால் இனியும் அவருக்கான ஆதரவை தொடர முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளோம் என்று உமாபாரன் குறிப்பிட்டார்.


மேலும், வளர்ச்சி காணாத சுங்கை சிப்புட் நகரத்திற்கு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வரும் மக்கள் பிரதிநிதியே இம்மக்களுக்கு தேவை. ஆனால் மக்களுக்கு சேவையே செய்யாமல் அலுவலகத்தை மூடி வைத்திருக்கும் ஒருவர் எங்களுக்கு தேவையில்லை. இத்தகைய பலவீனமான தலைவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் பக்காத்தான் ஹராப்பான் மீதும் நம்பிக்கை இழந்து விட்டோம் என்று லிம் கார்டன் கிளை ஜசெக தலைமை பீ.டேவிட் ராஜா தெரிவித்தார்.


சேவை செய்யாமல் இருக்கும் தலைவரை ஆதரிப்பதை காட்டிலும் மக்கள் பிரதிநிதியாக இல்லாவிட்டாலும் தனது அலுவலகத்தை தொடர்ந்து இங்குள்ள மக்களுக்கு சேவை செய்து வரும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கே வரும் தேர்தலில் ஆதரவு வழங்க முடிவு செய்திருப்பதாக உமாபரன், டேவிட் ராஜாவுடன் அவரின் ஆதரவாளர்களும் தெரிவித்தனர்.


டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு ஆதரவு வழங்கி வரும் போதிலும் மஇகாவில் உறுப்பினராக இணையாமல் வெளியிலிருந்து ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளோம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Leave a Reply