கிடைத்தது அடையாள அட்டை; மலேசிய பிரஜையானார் மருதவாணி (Video News)

Malaysia, News

 409 total views,  1 views today

சிறப்பு செய்தி: ரா.தங்கமணி

ஷா ஆலம்-

ஒரு நாட்டின் பிரஜை என்ற அடையாளத்திற்கு ஆதாரமாக திகழ்வதே குடியுரிமையும் அடையாள அட்டையும் தான். ஆனால் இவ்விரு ஆவணங்களும் இல்லாமல் கடந்த 35 ஆண்டுகளாக இருள் சூழ்ந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த திருமதி மருதவாணியின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளது மைசெல் பிரிவு.

பல்வேறு போராட்டங்கள், பலவித அலைகழிப்புகள் என்று பெரும் சங்கடத்தை எதிர்நோக்கிய திருமதி மருதவாணி இறுதியில் மைசெல் அதிகாரிகளின் கவனத்திற்கு தமது பிரச்சினையை கொண்டு வந்ததன் விளைவாக குடியுரிமை, பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றை பெற்றுள்ள மலேசிய பிரஜையாக உருவெடுத்துள்ளார்.

4 பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் கடைசி பிள்ளையாக பிறந்தவர்தான் திருமதி மருதவாணி. மருதவாணிக்கு அவரின் பெற்றோர் பிறப்புச் சான்றிதழ் எடுக்கத் தவறியதன் விளைவாக 35 ஆண்டுகளாக மலேசிய பிரஜையாக அங்கீகரிக்கப்படாததன் விளைவாக பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ளார்.

குடியுரிமை, அடையாள அட்டை இல்லாததால் முறையான கல்வியை பெற முடியவில்லை, வேலை கிடைக்கவில்லை, வங்கி கணக்கை தொடங்க முடியவில்லை,  திருமணத்தை பதிவு செய்ய முடியவில்லை, இறுதியாக பெற்றெடுத்த பிள்ளைகள் கூட நாடற்றவர்களாக உள்ளனர் என்று கண்ணீர் வேதனையுடன் தனது துன்பங்களை பகிர்ந்து கொண்டார் திருமதி மருதவாணி.

தமக்கு இப்போது குடியுரிமையும் அடையாள அட்டையும் கிடைத்துள்ள சூழலில் நாடற்றவர்களாக இருக்கும் தமது இரு பிள்ளைகளுக்கும் குடியுரிமையும் பிறப்புச் சான்றிதழும் கிடைக்கப் பெற அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பேன்.  நான் அனுவித்த வேதனைகளை என் பிள்ளைகள் அனுபவிக்கக்கூடாது என்று மருதவாணி கூறினார்.

மருதவாணி மட்டுமல்லாது அவரின் சகோதரர் ரவியும் அடையாள அட்டை எடுக்க முடியாமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருந்தார். இவ்விருவரின் பிரச்சினையும் தம்முடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இறுதியாக அவரின் மற்றொரு சகோதரி வழி மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் இவ்விருவரும் ரத்த சொந்தங்கள் தாம் என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் தொடர் நடவடிக்கையாக மருதவாணிக்கு குடியுரிமையும் அடையாள அட்டையும் கிடைக்கப்பெற்றது. ரவிக்கு அடையாள அட்டை கிடைத்தது என்று மைசெல் பிரிவின் அதிகாரி திருமதி சாந்தா வேணுகோபால் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கண்காணிப்பில் செயல்பட்டு வரும் மைசெல் பிரிவு இம்மாநிலத்திலுள்ள குடியுரிமை, அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், குடிநுழைவு போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.  திருமதி சாந்தா,ஆர்.ரகுபதி ஆகிய இரு அதிகாரிகளை கொண்டு செயல்பட்டு வரும் மைசெல் பிரிவு

2018இல் தொடங்கப்பட்டது. இது வரை 2,724 விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 758 விண்ணப்பங்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பங்கள் யாவும் பரிசீலனையில் உள்ளன.

Leave a Reply