கும்மாளத்தில் காரியத்தை மறப்பதா ? பின்னர் ஆசிரியர்களைப் பிழிவதா ? – தொடரும் தலைமை ஆசிரியையின் பொறுப்பற்றத்தனம் !

Education, Indian Student, Malaysia, Malaysia, News, Tamil Schools

 113 total views,  4 views today

கோலாலம்பூர் – 22 ஆகஸ்டு 22

இவ்வாண்டு பள்ளி தவணை தொடக்கத்தில் TS25 திட்ட அறிமுகச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளிகள் பல தங்களின் திட்டங்களையும் புறப்பாட நடவடிக்கைகளையும் நடத்தி அறிக்கைகளைத் தயாரிக்கும் படலத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இப்போதுதான் அதன் தொடர்பான நியமனக் கடிதங்களைப் பின்தேதியிட்டு (Backdated) அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கு வழங்கி இருக்கிறார்.

கல்வி அமைச்சின் TS25 திட்டத்தின் முதல் விளக்கக் கூட்டம் பங்கோரில் உள்ள தங்கும் விடுதியில் இவ்வாண்டு மே மாதம் நடந்தது. அதில் கலந்து கொண்ட குறிப்பிட்டத் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியை, அது குறித்த எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இப்போது அவசர அவசரமாக அத்திட்டத்திற்கு சில ஆசிரியர்களை நியமிப்பதாகக் குறிப்பிட்டு பின் தேதியிடப்பட்டக் கடிதத்தைக் கொடுத்திருப்பது அவ்வாசிரியர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பங்கோரில் விளக்கக் கூட்டம் நடந்தது மே 18 – 20. ஆனால், ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளக் கடிதத்தில் மார்ச் மாதம் 31ஆம் தேதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் மற்றொரு தகவலும் ஐ சேனலின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது.

நியமிக்கப்பட்ட சில ஆசிரியர்கள் அப்பள்ளிக்குப் புதிதாக வந்தவர்கள். ஆனால், அவர்கள் அப்பள்ளியில் இணைவதற்கு முன்புள்ளத் தேதியைக் குறிப்பிட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடிதத் தேதிக்கு சில மாதங்களுக்குப் பிறகு அப்பள்ளிக்குப் புதிதாக வந்த ஆசிரியர்களுக்கு மார்ச் மாதமே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது மிகப் பெரியக் கேள்விக் குறியை எழுப்பியுள்ளது.

பங்கோரில் கும்மாளம் அடித்ததை தமது முகநூலில் பதிவேற்றம் செய்யும் அத்தலைமை ஆசிரியை உரிய காலத்தில் கல்வி அமைச்சின் இந்தத் திட்டத்தைப் பள்ளியில் செயல்படுத்தாதது ஏன் எனும் கேள்வியும் எழுந்துள்ளது.

31 மார்ச் எனக் குறிப்பிடப்பட்டக் கடிதம் கடந்த 19 ஆகஸ்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தட்டச்சுப் பிழை என அந்தத் தலைமை ஆசிரியை சொல்லவும் முடியாது காரணம் கடிதம் கொடுக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரே தட்டச்சுப் பிழை – கோளாறு ஏற்படுமா ?

அதைக் கூடப் படித்துப் பார்க்காமல் பள்ளி ஆவணங்களில் கையொப்பமிட்டு விடுகிறாரா ?

தாமதமாகப் பணியைக் கொடுத்து குறைவானக் கால அவகாசத்தைக் காட்டி ஆசிரியர்களைப் பிழிவதா ?

ஆசிரியர்களுக்கு இவ்வாறான நெருக்கடி நிச்சயம் மாணவர்களைத் தாக்கும் எனும் அடிப்படை சிந்தனை கூட இல்லாமலா இந்தத் தலைமை ஆசிரியை செயல்படுகிறார்?

மாவட்டக் கல்வி அலுவலகமும் மாநிலக் கல்வித் திணைக்களமும் இத்திட்டச் செயலாக்கத்தை முறையாக கவனிக்காதா ?

அல்லது அவர்களின் மெத்தனப்போக்கை நன்கு அறிந்து கொண்டு அதனைத் தனது விருப்பத்திற்கு இந்தத் தலைமை ஆசிரியர் நடந்து கொள்கிறாரா ?

அல்லது இந்தத் தலைமை ஆசிரியையின் ஆட்டத்தை எப்போதுமே தற்காக்க அதிகாரத்தில் ஒரு கூட்டம் இருக்கின்ற ஆணவமா ?

இந்தச் செய்தி வெளிவந்த பிறகு, தனக்கு விருப்பம் இல்லாத சில ஆசிரியர்களைக் குறிப்பிட்ட அந்தத் தலைமை ஆசிரியை தனது வெறுப்பைக் காட்டும் படலமும் அவ்வப்போது அரங்கேறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. முன்னதாக, இத்தலைமை ஆசிரியர் குறித்த விவகாரங்கள் ஐ சேனலில் வெளி வந்தபோது, மற்ற ஊடகத்தில் தனக்குப் பிடிக்காத ஆசிரியர்களை தமது “ஆதரவாளர்களை”க் கொண்டு தாக்கும் படலமும் அரங்கேறி வந்ததையும் மறுப்பதற்கில்லை.

குறிப்பு : சரியான ஆதாரங்களை நேரில் ஆராய்ந்த பின்னரே இந்தச் செய்தி வெளியிடபட்டுள்ளது.

இதே திட்டம் குறித்த நிதி கையாடல் விவகாரத்தை அடுத்து ஐ சேனல் வெளியிட உள்ளது.

Leave a Reply