
கேமரன் மலை உட்பட 12 இடங்களைக் குறி வைக்கும் ம.இ.கா. ?
224 total views, 1 views today
– குமரன் –
கோலாலம்பூர் – 22 செப் 2022
எதிர்வரும் 15வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை உட்பட 12 இடங்களில் ம.இ.கா. போட்டியிடக் கூடும் என அக்கட்சியைச் சார்ந்த நம்பத் தகுந்த வட்டத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
ம.இ.கா.வின் உயர்மட்டத் தலைமைத்துவத்தால் முடிவு செய்யப்பட்டு தேசிய முன்னணியின் தலைமைக்குப் பரிசீலனை செய்ய கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
கடந்த 2004 இல் இருந்து ம.இ.கா. 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வந்துள்ளது. இந்த முறை 12 தொகுதிகளில் போட்டியிடப் பரிந்துரைக்க இருக்கிறது.
தற்போது தேசிய முன்னணியில் கெராக்கன் கட்சி இல்லாததால் அதிக வாய்ப்புக்கானக் கதவுகள் திறக்கப்படலாம் என நம்பப்படுவதாகவும் அந்த நம்பத்தகுந்த வட்டாரம் குறிப்பிட்டதை மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.
ம.இ.கா.வின் பாரம்பரியத் தொகுதிகளாகக் கருதப்படும் சுங்கை சிப்புட், தாப்பா, உலு சிலாங்கூர், கோத்தா ராஜா, சுங்கை பூலோ, காப்பார், போர்ட் டிக்சன், சிகாமாட், கேமரன் மலை ஆகியன அந்தப் பட்டியலில் அடங்கும்.
மேலும், புதிய தொகுதிகளாக, தெலுக் இந்தான், பாடாங் செராய், ஆகியன அடுத்து வர இருக்கும் 15வது பொதுத் தேர்தலில் ம.இ.கா.வின் கனவத்தில் இருக்கின்றன.
முன்னதாக, 14வது பொதுத் தேர்தலில் தெலுக் இந்தாலில் கெராக்கான் கட்சியின் தலைவர் மா சியூ கியோங் போட்டி இட்டார். பாடாங் செராயில் மசீசவின் லியோங் யீங் கோங் போட்டி இட்டார்.
இருப்பினும், அவ்விரு தொகுதிகளையும் நம்பிக்கைக் கூட்டணி வென்றது.
தற்போதைய நிலையில், அவ்விரு தொகுதிகளிலும் ம.இ.கா.வின் ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பட்டு வருவதாகவும் தேசிய முன்னணியின் உச்சநிலைத் தலைமைத்துவம் ஒப்புக்கொண்டால் அங்கு ம.இ.கா. போட்டியிடும் எனவும் கூறப்படுகிறது.

தெலுக் இந்தானில், ம.இ.கா.வின் உதவித் தலைவரான முருகையாவும் கேமரன் மலையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி சிவராஜா பாடாங் செராயிலும் போட்டியிடக் கூடும்.
அம்னோவுக்கு இரவல் கொடுக்கப்பட்ட தொகுதி
தற்போது அம்னோவுக்கு இரவல் கொடுக்கப்பட்ட கேமரன் மலை தொகுதியிலும் ம.இ.கா. போட்டியிட விருப்பம் கொண்டுள்ளதாகவும் அந்த நம்பத்தகுந்த தரப்பிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
அத்தொகுதியில் நடந்த இடைத் தேர்தலின்போது அம்னோவுக்கு இரவல் கொடுக்கப்பட்டதாக ம.இ.கா.வின் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் பல முறை வலியுறுத்தி வந்துள்ளார்.
மேலும், முந்தௌயாப் பொதுத் தேர்தலில் ம.இ.கா. போட்டியிட்ட அத்தனைத் தொகுதிகளிலும் போட்டியிட ம.இ.கா.வுக்கே வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் தேசிய முன்னணியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டிருந்ததையும் அந்த நம்பத்தகுந்த தரப்பு சுட்டிக் காட்டியது.
வேறு தொகுதிகளிலும் ம.இ.கா. போட்டியிடலாம். ஆனால், அதற்கு முன்னதாக தே.மு.வின் துணைத் தலைவர் முகம்மது ஹஸானிடம் கலந்துரௌயாட வேண்டும் என ஸாஹிட் சொன்னதாகவும் அந்தத் தரப்பு குறிப்பிட்டது.
கடந்த 14வது பொதுத் தேர்தலின்போது கேமரன் மலையில் சிவராஜா வெற்றி பெற்றிருந்தார். ஆனால், அந்தத் தேர்தல் முடிவை தேர்தல் நீதிமன்றம் இரத்து செய்தது.
ஆகையால், அந்தத் தொகுதி தேசிய முன்னணியின் வேட்பாளரான ரம்லி முகம்மட் நோர்-இடம் கொடுக்கப்பட்டது. அதற்குப் பின்னர் நடந்த இடைத் தேர்தலில் அவர் வெற்றியும் பெற்றார்.
இருந்த போதும், அந்தத் தொகுதி இன்னமும் ம.இ.கா.வுக்குச் சொந்தமானதே. ஆனால், அந்தத் தொகுதி அம்னோ பெற நினைத்தால், அதே அளவுக்கு வலு மிகுந்தத் தொகுதியைத்தான் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும் என்றது அந்த நம்பத்தகுந்த தரப்பு.
இவ்விவகாரம் குறித்து ஊடகங்கள் ம.இ.கா.வையும் அம்னோவையும் தொடர்பு கொண்டு வருகின்றனர்.