சமூக நீதிக்கானப் போராட்டமே பெரியாரின் போராட்டம் ! – பெரியார் பிறந்த நாள் விழாவில் பேராசிரியர் சுபவீ

India, Malaysia, News, Politics

 272 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 28 செப் 2022

மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்கிற அவரது கொள்கைத் தீபத்தை நெஞ்சில் ஏற்ற வேண்டும்.

மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரிநிகர்சமம் ஆகியவற்றையே தனது வாழ்நாள் எங்கும் பல்வேறு வடிவங்களில் உரையாற்றிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தார் தந்தை பெரியார்.

இந்தியாவில் எங்கும் புரையோடிப்போயிருந்த சாதியையும், பெண்ணடிமைத்தனத்தையும் ஒழிக்க தன் கைத்தடியை எடுத்தார் பெரியார். அதற்குத் தடையாக முன்னின்ற அனைத்தையும் கேள்விகளால் உடைத்தார் பெரியார் என்றார் சுபவீர பாண்டியன்.

சமூகத்தில் திணிக்கப்பட்டிருக்கும் சரி சம மற்ற நிலையை சீர் செய்ய கிளம்பிய அறிவுச் சூரியன்தான் தந்தை பெரியார். அவரது போராட்டம் கால மாற்றத்திற்கு ஏற்ப அதன் அடி நாதத்தில் இருந்து விலகாமல் இன்றும் தேவையாக இருக்கிறது என தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுப வீரபாண்டியன் பேசினார்.

சமூக நீதிக்காகத் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் நடத்திய போராட்டங்கள் மிகப்பல. அவர் தன் வாழ்நாளில் இறுதியாக அறிவித்த போராட்டமும் சமூக நீதிக்கானதுதான். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதே அவருடைய இறுதிப் போராட்டமாக அமைந்தது என சுபவீ குறிப்பிட்டார்.

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டில் சுயமரியாதை இயக்கம், பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று கேட்டு இயற்றிய தீர்மானம், 60 ஆண்டுகளுக்குப் பிறகு உயிர் பெற்றது என்பதையும் குறிப்பிட்டு தந்தை பெரியாரின் போராட்டங்களை வருகையளித்தவர்களோடு பகிர்ந்து கொண்டார்.

பெரியாரைப் பற்றியும் அவரின் போராட்டங்கள் பற்றியும் ஆழமானத் தெளிவு தேவை. மேலோட்டமாக அவர் ஒரு கடவுள் மறுப்புச் சிந்தனையாளர் எனும் மிகக் குறுகிய கூண்டினுள் அடைப்பதும் ஒரு வகை மூடநம்பிக்கையே.

அண்மையில் பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக தமிழக அரசால் அங்கீகரித்துள்ளது. அந்த வரிசையில், சமூக நீதி நாளை முன்னெடுத்து இந்த விழாவை மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

கே ஆர் சோமா அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியை சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ தொடக்கி வைத்து உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டியும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விழாவுக்கு முன்னர் இயங்கலையிலும் விழா நாளன்று இறுதிச் சுற்றும் நடத்தப்பட்டது.

Leave a Reply