சிறந்தொரு விடியலைத் தர சித்திரை, விஷு, வைசாக்கி புத்தாண்டு வாழ்த்துகள் ! – டத்தோ ஶ்ரீ மு சரவணன்

Malaysia, News

 150 total views,  3 views today

கோலாலம்பூர் – 14 ஏப்பிரல் 2022

இன்றைய தினம் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மலேசிய இந்தியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்துக்கள் கொண்டாடும் சுபகிருது ஆண்டு சித்திரைப் புத்தாண்டு, மலையாளி வம்சாவளியினர் கொண்டாடும் விஷு மற்றும் சீக்கியர்கள் கொண்டாடும் சூரியப் புத்தாண்டின் துவக்கமான வைசாக்கி அனைவருக்கும் சிறந்தொரு விடியலைத் தர இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

புத்தாண்டு என்றாலே ஒரு நல்ல தொடக்கமாக அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புவோம். அந்த வகையில் இந்த புத்தாண்டுகளையும் மகிழ்ச்சியாக வளமான, நலமான எதிர்காலத்தை நோக்கிக் கொண்டாடுவோம்.

இந்தியர்கள் நாம் பல்வேறு மொழிகளையும், பண்டிகைகளையும், பண்பாடுகளையும் கடைப்பிடித்து வந்தாலும், நமக்குள் நாம் இந்தியர் எனும் உணர்வு மேலோங்கி நிற்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருக்கும் வரைதான் நமக்கான உரிமைகளையும், சேவைகளையும் கேட்டுப் பெற முடியும். பலமான சக்தியாக உருவெடுக்க முடியும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

இங்கே யாரும் தனிமனிதரல்ல. நாம் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் சார்ந்துதான் இருக்கிறோம். ஒருவருக்கொருவர் உதவியாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டியது நமது கடமை.

கடந்த 2 வருடங்களில் உலகம் இதுவரை கண்டிராத ஒரு சூழலையும், நடைமுறையையும் நாம் கண்கூடாகக் கண்டோம், அனுபவித்தோம்.

ஆனால் அதில் எதையாவது நம்மால் மாற்றியமைக்க முடிந்ததா? எதுவுமே நம் கையில் இல்லை என்பதே நிதர்சனம்.

எனவே வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு, நமது முயற்சியைத் தொடர்வோம். “முயற்சி திருவினையாக்கும்” என்பது எந்நாளும் பொய்த்ததில்லை. வள்ளுவனின் கூற்றுப்படி,

            “தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

   மெய்வருத்தக் கூலி தரும்”                – குறள் 619

ஒருவனின் முயற்சிக்குண்டான பலன் நிச்சயம் கிடைக்கும் எனும் நம்பிக்கையை நாம் பெற்றிருக்க வேண்டும்.

மனிதவள அமைச்சராக அமைச்சின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை உங்களிடம் முன் வைத்துள்ளோம். குறிப்பாக வேலையில்லாதோர்க்கு, வேலையிழந்தவர்க்கு   எனும் இணையத்தளத்தின் வழி வேலை எங்கு காலியாக இருக்கிறது, என்ன தகுதி வேண்டும் எனும் தகவல்கள் நிரம்பியிருக்கின்றன.

ஆனால் அதன் உள்ளே சென்று முழுமையாகப் பதியாதவர்கள் இன்னும் வேலை கிடைக்கவில்லை எனப் புலம்புவதைக் கேட்க முடிகிறது. நாம் முயற்சி எடுக்காமல் எதுவும் நடக்காது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உடனடியாக இல்லை என்றாலும், சற்று தாமதமாக நமது முயற்சிக்கான வெற்றி கிடைக்கும்.

அந்த சிந்தனையோடு மீண்டும் புத்தாண்டு வாழ்த்துகள்.

இன்றைய பொழுது இனிய பொழுதாக மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்,

டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்

மனிதவள அமைச்சர்

Leave a Reply