சிறையில் BOSSKU ! அம்னோவின் நிலை என்னவாகும் ?

Malaysia, News, Politics

 103 total views,  1 views today

புத்ராஜெயா – 23 ஆகஸ்டு 2022

அம்னோவில் எந்தவிதமான உயர் பதவியை வகிக்கவில்லை என்றாலும்கூட, முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக் அக்கட்சியில் மிகுந்த ஆளூமையைக் கொண்டவர் என்பது மறுப்பதற்கில்லை.

ஆனால், இப்போது அவர் ஊழல் வழக்கில் சிறைவாசம் சென்றுவிடவே, தற்போது அம்னோவின் நிலை என்னவாகும் என்பதும் நஜிப்பின் சிறைவாசம் அம்னோவுக்கு எவ்வாறானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதே சூழலில் நஜிப்பின் அரசியல் வாழ்க்கையின் எதிர்காலம் குறித்தும் முக்கிய விவாதமாக மாறி இருக்கிறது. 23 ஆண்டுகள் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராக ஆளுமை செலுத்தி வந்திருந்தாலும்கூட, 69 வயதில் சிறைவாசம் என்பது அவரது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரியப் பின்னடைவைக் கொடுக்கக் கூடிய அபாயம் இருப்பதையும் மறுக்க முடியாது.

நாட்டின் 6 வது பிரதமராகப் பதவி வகித்த நஜிப்புக்கு உயர்நீதிமன்றத்தில் மூன்று நம்பிக்கை துரோக குற்றச்சாட்டுகள், ஓர் அதிகார முறைகேடல் குற்றச் சாட்டு, ரிம 42 மில்லியனை உட்படுத்திய மூன்று கருப்புப் பணமோசடி குற்றச்சாட்டுகள் ஆகியன சுமத்தப்பட்டன. விசாரணைக்குப் பிறகு அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரிம 210 மில்லியன் தண்டமும் விதிக்கப்பட்டது.

அதனை எதிர்த்து அவர் மேற்கொண்ட மேல்முறையீட்டுக்குப் பிறகு கூட்டரசு நீதிமன்றத்தில் அதே தண்டனை நிலை நிறுத்தம் ஆனது.

தேசியத் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார் எனும் குற்றச்சாட்டு உட்பட அவரது வழக்கறிஞர் குழு பல்வேறு முயற்சிகள் செய்து அவரைக் குற்றமற்றவர் என உறுதிப்படுத்தப் போராடினர்.

இறுதியில், நிதிபதி குழு அவரது மேல்முறையீட்டை நிராகரித்தது.

இந்த வழக்கு ஒரு நிறைவுக்கு வந்ததும் பிரதமர் இஸ்மாயில் சப்ரி பொதுத் தேர்தலை விரைவு படுத்துவாரா அல்லது தாமதிப்பாரா என்பதில் மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

இது வரையில் பொதுத் தேர்தல் குறித்து பிரதமர் எந்தவிதமான அறிகுறியையும் அவர் கொடுக்கவில்லை. முன்னதாக, அம்னோவின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி பொதுத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறி இருந்தாலும் அது குறித்து எந்தவித அறிகுறியும் தென்படவில்லை.

இப்போது, கூட்டரசு நீதிமன்றம் இன்று கொடுத்திருக்கும் தீர்ப்பானது BOSSKU என அழைக்கப்பட்டு அம்னோவின் முன்வரிசை முகவரியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த நஜிப் இல்லாமல் புத்ராஜெயாவை அம்னோ அல்லது தேசிய முன்னணி கைப்பற்றுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கான வாய்ப்பு நிலைக்குமா ?

மற்றொரு சூழலில், BOSSKUவையே முழுமையாக நம்பிக் கொண்டிருக்கும் மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு தேசிய முன்னணியின்கீழ் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

வெளிப்படையாகவே நஜிப் மக்கள் சக்தி கட்சி தலைவர் டத்தோ ஶ்ரீ தனேந்திரனுக்கு ஆதரவு வழங்கி வந்திருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது. இந்நிலையில், மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பொதுத் தேர்தல் கனவு என்னவாகும் ?

அம்னோ வலுவிழந்து விட்டதா ?

கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய அம்னோ – தேமு வுக்கு அடுத்தடுத்து நடந்த இடைத் தேர்தல்களில் வெற்றி பெற நஜிப் மிக முக்கியமான காரணமாக இருந்தார்.

மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு எனக் கருதப்பட்டு கடந்தப் பொதுத் தேர்தலில் வெற்றிபெறச் செய்யப்பட்ட துன் டாக்டர் மகாதீர் உட்பட பல்வேறு தரப்பினரின் குற்றச் சாட்டுகளைக் கடந்து நஜிப் தேமுவை வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தார்.

கட்சியில் எந்தவிதமான உயர் பதவியையும் நஜிப் வகிக்க வில்லை என்றாலும் கூட, கட்சியிலும் கட்சிக்கு வெளியேயும் அவரது ஆளுமை ஓங்கியே இருந்தது.

தற்போது நஜிப் சிறை செல்லுகின்ற நிலையில், 15வது பொதுத் தேர்தல் களத்தில் அம்னோவை மற்றத் தலைவர்கள் எவ்வாறான வியூகத்தைக் கொண்டு முன்னோக்கி நகர்த்த உள்ளார்கள் ?

தற்போது உட்கட்சிப் பூசலால் சில பிரிவுகளாகப் பிரிந்து இருக்கும் அம்னோ தலைவர்களை நஜிப்பின் சிறைத் தண்டனை ஒன்றுபடுத்துமா ? அரசியல் நிலைத் தன்மைக்கு வழி வகுக்குமா ?

கூட்டரசு நீதிமன்றத்தில் நடந்த நஜிப் வழக்கில் அவருக்கு எதிராக நடந்த அநீதியை நஜிப்புடன் பல காலம் தொடர்ந்து பயணித்தவர்கள் நிச்சயம் வெளீயில் கொண்டு வருவார்கள் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அந்த வழக்கினை நீதிமன்றத்தைத் தாண்டி மக்கள் மன்றமாக விளங்கும் தேர்தல் களத்திற்குக் கொண்டுவரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இரும்புத் திரைக்குப் பின்னாள் இருந்தாலும் கூட நஜிப் நிச்சயம் அடுத்தப் பொதுத் தேர்தலில் அம்னோ – தேமு நிலை குறித்து கவனித்து வருவார்.

அடுத்தப் பொதுத் தேர்தலை மிக விடைவில் நடத்தக் கோரி அம்னோவின் உயர்மட்டத் தலைவர்கள் பிரதமர் இஸ்மாயில் சப்ரியை நேற்று இரவு சந்தித்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் அது குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்பட வில்லை.

என்ன இருந்தாலும், அடுத்தப் பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்றும் நகர்வில் அம்னோ – தேமுவுக்கு நஜிப்பின் இந்த நிலை பேரிழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

இடைத் தேர்தல்களில் தொடர்ந்து அம்னோ-தேமு பெற்ற வெற்றியில் நஜிப்பின் ஆளுமையும் பங்கும் அளப்பரியது எனப் பல்வேறு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதே வெற்றியை அடுத்து வர இருக்கின்ற 15வது பொதுத் தேர்தலிலும் நிலை நிறுத்த வாய்ப்பாக அமையும் எனவும் பார்க்கப்படுகிறது.

 இருந்தாலும், நஜிப் இல்லாமல் அம்னோ அந்த வெற்றிகளைத் தொடருமா ?

அரசியல் பலியாடாகவும் நீதித்துறை பலியாடாகவும் நஜிப் நிறுத்தப்பட்டுள்ளார் என சில அம்னோ தலைவர்கள் பகீரங்கமாக அறிவித்து இருக்கின்றனர்.

2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி புத்ராஜெயாவைக் கைப்பற்றிய பிறகு நஜிப் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply