
சிலாங்கூர் மாநில 2022 பட்ஜெட்- இந்திய சமூகத்திற்கு வெ.1 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு
369 total views, 1 views today
ஷா ஆலம், நவ.27-
சிலாங்கூர் மாநில அரசின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இம்மாநில இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக ஏறக்குறைய 1 கோடியே 20 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி இன்று அறிவித்துள்ள பட்ஜெட் 2022இல் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக வெ.50 லட்சம், முஸ்லீம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களுக்கு வெ.63 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இந்து ஆலயங்களுக்கு கிட்டத்தட்ட வெ.18 லட்சம் உறுதி செய்யப்படுகிறது.
அதோடு, ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் மாநில இந்தியர் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரிவுக்கு வெ.11 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு மத்தியில் தொடங்கப்பட்ட ஐ-சீட் திட்டத்தின் வாயிலாக 257 இந்தியர்களுக்கு வர்த்தக உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்தாண்டு தொடரும் வகையில் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக (பேருந்து, உயர்கல்வி மாணவர்களுக்கான நிதியுதவி உட்பட) வெ.20 லட்சமும் இந்தியர் சார்ந்த கலை, கலாச்சார நடவடிக்கைகளுக்கு வெ.5 லட்சமும் ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பற்றுச்சீட்டு வழங்கும் திட்டத்திற்கு வெ.20 லட்சம் என மாநில திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில், குடியுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் மைசெல் பிரிவும் ‘UPPS’ எனப்படும் மனிதவள மேம்பாட்டு பிரிவும் தொடர்ந்து செயல்படுவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.