
சுங்கை சிப்புட்டில் நவீன கட்டமைப்பை உருவாக்கியவர் துன் சாமிவேலு ! – மணிமாறன் இரங்கல்
265 total views, 3 views today
– இரா. தங்கமணி –
கோலாலம்பூர் – 15 செப் 2022
துன் ச.சாமிவேலுவின் திடீர் மறைவு மஇகாவினரை மட்டுமின்றி சுங்கை சிப்புட் மக்களுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது என்று சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் கி.மணிமாறன் தெரிவித்தார்.
1974இல் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் துன் சாமிவேலு முதன் முதலாக போட்டியிட வந்தபோது அப்பகுதி உட்புறப் பகுதியாகவே இருந்தது. வசதி கட்டமைப்புகள் முழுமையாக இல்லாத சுங்கை சிப்புட் நகரின் அபரிமிதமான வளர்ச்சியில் துன் சாமிவேலுவின் பங்களிப்பை புறந்தள்ள முடியாது.

அவருடைய காலகட்டத்தில்தான் சுங்கை சிப்புட் மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டது. அதுவரையிலும் கோலகங்சார், தைப்பிங் மருத்துவமனைகளே இங்குள்ள மக்களுக்கு அவசர தேவையாக இருந்து வந்தது. சுங்கை சிப்புட் மருத்துவமனை அங்குள்ள மக்களுக்கு பேருதவியாக அமைந்தது. அதோடு சாலை, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுடன் வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்குவதற்கு தொழில்பேட்டைகளையும் இங்கு கொண்டு வந்தார்.
தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்திய துன் சாமிவேலுவின் காலத்தில்தான் மகாத்மா காந்தி கலாசாலை புதிய கட்டடங்களுடன் அதிகமான இந்திய மாணவர்கள் பயிலும் தமிழ்ப்பள்ளியாக உருவெடுத்தது.
சமூகநலன், தனிமனித தேவைகள் ஆகியவற்றையும் பூர்த்தி செய்த துன் சாமிவேலு கடந்த 2008ஆம் ஆண்டு வரையிலும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து அரிய பல சேவைகளை ஆற்றி வந்துள்ளார்.

2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் துன் சாமிவேலு அடைந்த தோல்வியின் பாதிப்பை பின்னாளில் உணர்ந்த சுங்கை சிப்புட் மக்கள் அவரின் சேவையை போல் யாராலும் செய்ய முடியாது என்ற உண்மையை அறிந்து கொண்டணர்.
துன் சாமிவேலுவின் திடீர் மறைவு சுங்கை சிப்புட் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதோடு வேதனையில் மூழ்கடிக்கச் செய்துள்ளது என்று மணிமாறன் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.