செயல்படாத மின்தூக்கி; சக்கர நாற்காலியில் வருபவர்கள் எப்படி பயணிப்பர்?

Malaysia, News

 178 total views,  1 views today

கோலாலம்பூர்,டிச.7-


அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் நாளையொட்டி 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளிகளுக்கும் அவர்களுடன் வருகின்ற ஒருவருக்கும் ரேப்பிட் கேஎல் தொடர்வண்டிகளிலும் (LRT / MRT / MONOREL / BRT) ஆகியவற்றில் இலவசமாகப் பயணிக்கும் சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது.

கேட்கவே மிகவும் சிறப்பாகத் தோன்றினாலும், உண்மையாகவே இச்சலுகையை மாற்றுத் திறனாளிகள் முழுமையாகப் பயன்படுத்த முடியுமா எனும் கேள்வி எழுத்துள்ளது.


ரேப்பிட்கேஎல் பேருந்து , தொடர்வண்டி ஆகியப் பொதுப் போக்குவரத்துச் சேவையை வழங்கி வருகிறது. அவற்றை மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் நிலையில் அவர்களுக்கானச் சிறப்பு வசதிகளை பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் ஏற்படுத்தித் தருவது வழக்கம்.
ஆனால், கோலாலம்பூர் மாநகரில் பயணிக்க மோனோரேல் தொடர்வண்டிச் சேவையை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதில் சிக்கல் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.


மோனோரேல் தொடர்வண்டி சேவை கேஎல் செண்ட்ரல் முனையத்தில் இருந்து தித்திவங்சா வரையில் செயல்படுகிறது. கேஎல் செண்ட்ரல் முனையத்தை அடுத்து 10 மோனோரேல் நிலையங்கள் இருக்கின்றன.

அவை சில முக்கியச் சாலைகளுக்கு மேலே மேம்பாலம் போல் அமைந்துள்ளன. மேலே மோனோரேல் நிலையத்திற்குச் செல்ல பொது மக்கள் நகர்படிகளைப் பயன்படுத்த வேண்டும். (ஏறுவதற்கு மட்டுமே, இறங்குவதற்கு அல்ல)

ஆனால், மாற்றுத் திறனாளிகள், குறிப்பாக சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோருக்காக ஏற்படுத்தப்பட்டச் சிறப்பு மின்தூக்கி (Lift) வசதி கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பழுதடைந்து அப்படியே கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன.


இதனால், அத்தகையோர் மோனோரேல் தொடர்வண்டியைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. கேஎல் செண்ட்ரல் முனையத்தை அடுத்து உள்ள 10 மோனோரேல் நிலையங்களிலும் இதே நிலைதான். ஆனால், மோனோரேல் நிலையத்தினுள் இருக்கும் சிறு படிகளைக் கடப்பதற்குச் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோருக்கானச் சிறப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

மோனோரேல் தொடர்வண்டியினுள் அவர்களுக்கான சிறப்பு இருக்கை, சக்கர நாற்காலிகளில் வருவோரை நிறுத்தி வைக்கவும், அதற்கானப் பாதுகாப்புப் பட்டையும் இருக்கின்றன. ஆனால், அவற்றைப் பயன்படுத்த அவர்கள் முதலில் மோனோரேல் நிலையத்திற்கு மேலே ஏறி வர வேண்டுமே !

அதற்கான மின் தூக்கிகள் பழுதான நிலையிலேயே பல ஆண்டுகளாகக் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றபோது, மேலே அமைந்திருக்கும் நிலையத்திலும், மோனோரேலிலும் இத்தகைய வசதிகள் செய்து வைத்திருப்பது யாருக்காக ? யாருக்குப் பயன்படப் போகிறது ?
கண் பார்வையற்றோர் பயணியாக வந்தால், அவர்களுக்கு உதவும் வகையில் ரேப்பிட்கேஎல் ஊழியரோ அல்லது காவல்துறை அதிகாரியோ உடன் வருவது நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். பாராட்டத்தக்க ஒன்று.


ஆனால், சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர் கதி ?

பழுதடைந்திருந்தால், தொடக்கத்திலேயே அதனைச் சரி செய்திருக்கலாமே. இவ்வாறு ஓராண்டுக்கும் மேலாகக் கைவிடப்பட்டிருந்தால், அதனை சரி செய்யும் செலவு பெரிதாகி விடாதா ? அந்தச் செலவை பயணிகளின் பயணக் கட்டணத்தை உயர்த்துவதில் இருந்து ஈடுகட்டுவார்களா ? யாருடைய பொறுப்பற்றத் தனத்திற்கு யார் தண்டச் செலவு செய்வது?


கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அருகில் இருப்பது Chow Kit மோனோரேல் நிலையம். மருத்துவத்திற்காக கூட அவர்கள் மோனோரேல் தொடர்வண்டியைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது வேதனைக்குரியது.

மேலும், இறுதி முனையமான தித்திவங்சா நிலையத்தில் இருந்து கீழே இறங்க மின் தூக்கியும் செயல்படவில்லை, நகர்படிகளும் இல்லை. நிலைமை இவ்வாறு இருக்க, மோனோரேல் சேவையைப் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு வாரத்திற்கு இலவசம் என்பது வெறும் கண் துடைப்பா ?

Leave a Reply