சோற்றுக்குத் திண்டாட்டம் ஏற்படுத்தாத அரசாங்கத்தைத் தேடும்  இளம் வாக்காளர்கள் !

Malaysia, News, Politics, Polls

 129 total views,  1 views today

15வது பொதுத் தேர்தல் குறித்து இளைஞர்களின் மனநிலை – ஒரு கண்ணோட்டம்

– குமரன் –

கோலாலம்பூர் – 20/10/2022

நிலையான பொருளாதாரம், வேலைக்கான உறுதிப்பாடு, நல்ல வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை வழங்கக்கூடிய கட்சியையே இளம் வாக்காளர்கள் இம்முறை நடக்கவிருக்கும் நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் தேர்தெடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரம் குறித்து இன்றைய இளைஞர்களின் பார்வை கால மார்றத்திற்கு ஏற்ப மாறி இருக்கிறது. அதர்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்,

நல்ல ஊதியத்துடன் நிலையான வேலையைத் தேடும் படலம் தற்போது இளைஞர்களிடையே அரங்கேறி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் 11% ஆக மிக அதிகமான விகிதத்தில் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

காலம் காலமாக மக்கள் தொகை விழுக்காடு அடிப்படையில் கோட்டா (Kuota) முறையில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் வியூகம் பழைய முறையிலான அரசியலைக் கொண்டிருப்பதாகும். இன்றளவும் இது ஏற்புடையதாக இருக்குமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால், இப்போதுள்ள இளம் வாக்காளர்கள் அதிகமானத் தகவல் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள், தரவுகளைக் கொண்டு தங்களுக்கு மிகச் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால், வழக்கமான வாக்காளர்களின் மனநிலையைக் கணிப்பது போல, இளைஞர்களின் மனநிலையைக் கணிக்க முடியாமல் போகிறது.

இளம் வாக்காளர்கள் என வரும்போது, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதன்முறையாக நாட்டின் பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

இவர்களது தற்போதைய வாழ்க்கைச் சூழல் இப்பொதுத் தேர்தலில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் என சில அரசியல் ஆய்வாளர்கள் கூறீ வருவதையும் நாம் பார்த்து இருக்கிறோம்.

எந்த மாதிரியான சூழலில் இவர்கள் இருக்கிறார்கள் எனும் கேள்விதான், நாட்டின் தலையெழுத்தை இந்தப் பொதுத் தேர்தலில் தீர்மானிக்க உள்ளது என்றாலும் அது மிகையில்லை.

நாடு மெல்ல மெல்ல கோவிட்-19 பெருந்தொற்றில் இருந்து வழக்கு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இன்னும் முழுமையாக வழக்கு நிலைக்குத் திரும்பவில்லை எனலாம்.

இவ்வாறானச் சூழலில், பள்ளிப் பருவத்தையோ அல்லது கல்லூரி படிப்பையோ முடித்து விட்டுள்ள 18 வயதிற்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் எல்லோரும் மேற்கல்வியை நோக்கிப் போவதில்லை. அதற்குக் காரணம் தற்போதைய மிக மோசமானப் பொருளாதாரச் சூழ்நிலை.

இந்த நிலைமையில், தங்களின் வாழ்க்கையைக் குறித்து அதிக அக்கறை கொள்ளும் இளைஞர்கள், தங்களின் வேலைத் தேடலையும் வாழ்க்கையையும் தொடங்குகிறார்கள்

அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக் கொடுக்காமல் எந்த அரசியல் கட்சியும் கூட்டணியும் அவர்களை நெருங்கி விட முடியாது எனலாம்.

அதே சமயம், சமூக நீதிக்காகாவும், சுற்றுச் சூழலுக்காகவும் போராடக் கூடிய ஒரு குறிப்பிட்ட இளைஞர் தரப்பும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களைக் காட்டிலும் நிலையானப் பொருளாதாரச் சூழலையும் பாதுகாப்பான வாழ்க்கையையும் வேண்டும் எனக் கூறுகிற தரப்புதான் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள்.

எந்தக் கட்சி அல்லது கூட்டணி பக்கம் அவர்கள் இருக்கப் போகிறார்கள் என்பதற்கு முக்கியக் காரணமாக அவர்களின் பெற்றோரோ, குடும்ப உறுப்பினர்களோ அல்லது நண்பர்களோ இருக்கப்போவதில்லை. அப்படியே அவர்கள் காரணமாக இருந்தாலும் பெரும் தாக்கம் சமூக ஊடகங்களின் கையில் இருக்கிறது என்பதை நம்மால் மறுக்கவியலாது.

அந்தக் காலத்தில் வேண்டுமானால் பெற்றொரின் தாக்கம் பிள்ளைகளிடத்தில் ஏற்பட்டு அது பொதுத் தேர்தலில் வெளிப்பட்டிருக்கலாம். ஆனால், இப்போது அப்படி இல்லை. தகவல் நிறைந்த தொழில்நுட்ப உலகத்தில் இருக்கின்றோம். நாட்டையும் சமூகத்தையும் அவர்கள் பார்க்கின்ற கோணமே வேறு மாதிரியாக இருக்க சமூக ஊடகங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

அதிகமானத் தரவுகளையும் புள்ளி விவரங்களையும் கொண்டு பயணிக்கிறார்கள் இளைஞர்கள்.

இவற்றைக் கொண்டு பார்க்கும்போது, இளைஞர் சமூகத்தை மதிக்கின்ற, பொறுப்பான, பொருளாதாரச் சிக்கல்களை முறையாகக் கையாள்கின்ற தலைமையைத்தான் இளம் வாக்காளர்கள் – இளைஞர்கள் விரும்புகிறார்கள் என ஆணித்தரமாகக் கூறலாம்.

எனவே, இவர்களைக் குறி வைத்து, இவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு நகரும் கட்சி அல்லது கூட்டணிக்கு இளைனர்களின் ஆதரவு கூடலாம்; அஃது இம்முறை நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் வெளிப்படலாம்.

நாட்டின் அரசியல் மிக முக்கியமானத் தக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் மிக்கவர்கள் இளைஞர்கள் என அங்கீகரிக்கப்படுவதையே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பது இங்கு தெள்ளத் தெளீவாகப் புலப்படுகிறது.

Leave a Reply