ஜெலாப்பாங்கிற்கு பதிலாக ஜாலோங்-ஐ கைப்பற்றுமா  மஇகா?

Uncategorized

 183 total views,  1 views today

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

 வரும் 15ஆவது பொதுத் தேர்தல் வெகு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மஇகா போட்டியிடும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகள் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது.

பேரா மாநிலத்தில் சுங்கை சிப்புட், தாப்பா, தெலுக் இந்தான் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டியிடுவது உறுதியாகி விட்ட நிலையில் மஇகா போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிகள் இன்னமும் உறுதியாகமல் இருப்பதாக தெரிகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் மஇகா புந்தோங், சுங்காய், ஜெலப்பாங் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றிலுமே தோல்வியை தழுவியது.

இம்முறை ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்று மாநில ஆட்சிக்குழுவில் இடம்பெற்றிட வேண்டும் என்று கங்கணம் கட்டியுள்ளது.

மஇகா புந்தோங், சுங்காய் தொகுதியில் போட்டியிடுவது சவாலாக இருந்தாலும் ஜெலாப்பாங் தொகுதியில் போட்டியிடுவது சவக்குழியில் தானே படுத்துக் கொள்வதற்கு சமமானதாகும்.

ஜெலாப்பாங் தொகுதியில் போட்டியிடுவதை காட்டிலும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜாலோங் தொகுதியை மஇகா  கோருமா? என்ற கேள்வி எழுகிறது.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போதே ஜாலோங் தொகுதியில் மஇகா வேட்பாளர் களமிறங்க முடிவெடுக்கப்பட்டது. ஆயினும் அப்போது சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக களமிறங்கிய டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி தலையீட்டால் ஜாலோங் தொகுதி மஇகாவுக்கு எட்டாமல் போனது.

துளியும் வெற்றி பெற முடியாது என்ற நிலையில் ஜெலாப்பாங்கை கைப்பற்றிய மஇகா, ஜெலாப்பாங்கிற்கு பதிலாக ஜாலோங்கை கைப்பற்றி விஷப் பரீட்சையில் களமிறங்கலாம்.

நாடாளுமன்றத் தொகுதியிலும் சட்டமன்றத் தொகுதியிலும் மஇகா வேட்பாளர்களே களமிறங்கும் நிலையில் அது மஇகாவின் வெற்றிக்கு சாதகமாக அமையலாம்.

நடந்து முடிந்த  மஇகா மாநாட்டில் கூட மஇகாவுக்கு கூடுதல் தொகுதிகள்  ஒதுக்கப்படலாம். அது முஹமட் ஹாசன் கையில் உள்ளது என தேமு தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் கூட கோடி காட்டியுள்ளார்.

70 விழுக்காடு சீன வாக்காளர்களைக் கொண்டுள்ள ஜெலாப்பாங் தொகுதியில் போட்டியிடுவதை விட 50 விழுக்காடு சீன வாக்காளர்களையும் 50 விழுக்காடு மலாய், இந்திய வாக்காளர்களையும் கொண்டுள்ள ஜாலோங் தொகுதியில் மஇகா போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பை ஓரளவாவது உறுதி செய்யலாம்.

வெற்றி வாய்ப்புக்காக ஜாலோங்கை கைப்பற்றுமா மஇகா?

Leave a Reply