டத்தோஶ்ரீ தனேந்திரனின் ‘விஸ்வாசம்’; வரமாய் வந்த நிபோங் திபால்

Malaysia, News, Politics

 77 total views,  1 views today

சிறப்பு செய்தி: ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிடும் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரனின் அரசியல் தடம் அரசியல் புள்ளிகளை புருவம் உயர்த்தச் செய்துள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளை கடந்து விட்ட போதிலும் தங்களுக்கான உரிமைகள் ஆளும் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்த மூன்றாவது மிகப் பெரிய இனமான இந்திய சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வின் வழி 2007 நவம்பர் 25இல் நடத்தப்பட்ட  ஹிண்ட்ராஃப் உரிமை போராட்டம் நாட்டில் அரசியல் சுனாமியையே ஏற்படுத்தியது.

வீதி போராட்டத்தின் வழி  எழுப்பப்பட்ட இந்திய சமுதாயத்தின் உரிமைக்குரலை நசுக்கும் வகையில் கைது நடவடிக்கை, நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு, போராட்ட த்தை முன்னெடுத்த தலைவர்கள் சிறையில் அடைப்பு என தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தலைவர்கள் இல்லாத ஹிண்ட்ராஃப் இயக்கத்தை வழிநடத்துவதாக சமூகத்தின் முன் தோன்றினார் அன்றைய பொதுநலவாதியான ஆர்.எஸ்.தனேந்திரன்.

இந்திய சமுதாயம் அணி திரண்ட ஹிண்ட்ராஃப் பேரியக்கத்தை வழிநட த்துவதாக சொன்ன தனேந்திரன் பின்னாளில் மக்களின் எழுச்சிக் குரலாக விளங்கிய ‘மக்கள் சக்தி’ தனது பலமாகக் கொண்டு மலேசிய மக்கள் சக்தி கட்சி எனும் அரசியல் கட்சியை தொடங்கினார்.

எந்த அரசாங்கத்தை எதிர்த்து இந்திய சமுதாயம் ஓரணியில் திரண்டதோ அதே அரசாங்கத்தின் தலைவராகவும் அன்றைய பிரதமருமாக திகழ்ந்த டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கை வைத்து கட்சியை தொடங்கினார்.

இந்திய சமுதாயத்தின் துரோகி என பலராலும் குற்றஞ்சாட்டப்பட்டாலும்  உரிமைக்காக வீதியில் திரண்ட இந்திய சமுதாயம் வீதியிலேயே காலத்தை கழித்து விடக்கூடாது எனும் நிலையில் ஆளும் அரசாங்கமான தேசிய முன்னணியுடன் தனது நெருக்கத்தை வலுவாக்கிக் கொண்டார் டத்தோஶ்ரீ தனேந்திரன் .

ஆளும் அரசாங்கத்துடனான நல்ல தொடர்பு இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் காதுகளுக்கு கொண்டுச் செல்லும் வழித்தடமாக அமைந்தது. அதன்வழி இந்திய சமுதாயம் எதிர்கொண்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சக்தியாகவும் டத்தோஶ்ரீ தனேந்திரன் உருவெடுத்தார்.

இந்திய சமுதாயத்தின் குரல் அரசாங்கத்தை எட்ட வேண்டுமானால் மக்கள் பிரதிநிதிகளாக நாங்களும் உருவெடுக்க வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்து தேமுவின் தோழமைக் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று ஓயாமல் குரல் கொடுத்தார் டத்தோஶ்ரீ தனேந்திரன்.

கட்சியின் பேராளர் மாநாடானாலும், அரசியல் கூட்டாமானாலும் இடைத் தேர்தலானாலும் எங்கும் தனது போராட்டத்தை பதிவு செய்துக் கொண்டிருந்தார். அந்த போராட்ட த்தின் வெற்றிதான் நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியிலும் ஜெலாப்பாங் சட்டமன்றத் தொகுதியிலும் மலேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் களமிறக்கம்.

ஆனால் இந்த போராட்டத்திற்கு அவர் கொடுத்த விலை ‘விஸ்வாசம்’. ஆம் தன்னுடைய கோரிக்கைகளுக்கு எல்லாம் செவி சாய்ந்த முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ  நஜிப்புக்கும் தேசிய முன்னணிக்கும் அவர் காட்டிய விஸ்வாசத்தை ஊடகமும் அரசியல் களமும் நன்கு அறியும்.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அடைந்த தோல்வியினால் அக்கூட்டணியில் இருந்த பல கட்சிகள் உறவை முறித்துக் கொண்டன. இனி தேசிய முன்னணி தலை தூக்காது எனும் நினைப்பில் பல கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் தேசிய முன்னணியுடனே எங்களது பயணம் தொடரும் என்று தோழமைக் கட்சியானாலும் கெத்து  காட்டி நின்றவர் டத்தோஶ்ரீ தனேந்திரன்.

அதோடு 1எம்டிபி நிதி மோசடி குற்றச்சாட்டில் நீதிமன்ற வாசலை தொடர்ந்து ஏறி வந்த முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ  நஜிப்புடன் ஒரு நிழலாகவே பின் தொடர்ந்தார் டத்தோஶ்ரீ தனேந்திரன். ஒரு குற்றவாளி பின்னே ஏன் தொடர்கிறீர்கள் என கேள்வி எழுப்பினால் இந்திய சமுதாயத்திற்காக எனது குரலுக்கு மதிப்பளித்தவர் டத்தோஶ்ரீ நஜிப். நன்றி மறப்பது நன்றன்று என்பதால் நஜிப்பை பின் தொடர்கிறேன் என தனது விஸ்வாசத்தை காட்டி நெகிழ வைப்பார்.

அதே விஸ்வாசத்துடன் நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியில் தீவிர பரப்புரையை மேற்கொள்ளும் டத்தோஶ்ரீ தனேந்திரனின் அரசியல் ஆட்டம் அதிர வைக்கலாம்.

Leave a Reply