டாக்டர் ஜெயகுமார் மீது வராத அதிருப்தி கேசவன் மீது எழுந்தது ஏன்?

Malaysia, News, Politics

 372 total views,  1 views today

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

அரசியல் சர்ச்சைக்கு பெயர் பெற்ற சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தற்போது மீண்டும் அரசியல் சர்ச்சை புகைந்துள்ளது.

அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் எஸ்.கேசவன் மீது அதிருப்தி கொண்டுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த பிகேஆர், ஜசெக கட்சிகளின் கிளைத் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என 5,000 பேர் அதிலிருந்து வெளியேறி மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தருவதாக அண்மையில் அறிவித்தனர்.


இந்த அறிவிப்பு வந்தவுடன் தன் மீதான குற்றச்சாட்டு பொய்யானது, அவதூறுகள் பரப்பப்படுகின்றன எனவும் ‘யார் இந்த 5,000 பேர்?, அவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் கொடுக்க முடியுமா?’ எனும் தோரணையில் கேசவனும் தம் பங்கிற்கு அறிக்கை விடுத்தார்.


கேசவனுக்கு எதிராக திரும்பிய பிகேஆரின் உமாபரனும் ஜசெகவின் டேவிட் ராஜாவும் முன்வைத்த முதன்மை குற்றச்சாட்டு கேசவனின் சேவை திருப்திகரமாக இல்லை, மக்களை சந்திப்பதில்லை, மானியம் வந்தால் மட்டுமே அலுவலகம் திறந்திருக்கும் என குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
உண்மையிலேயே கேசவனின் செயல்பாடுகள் அங்குள்ள மக்களுக்கு திருப்திகரமாக இல்லையா? என்றால் அதை தீர ஆராய வேண்டியுள்ளது.

2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது அப்போதைய மஇகாவின் தேசியத் தலைவரான துன் ச.சாமிவேலுவை தோற்கடித்து சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் டாக்டர்ஜெயகுமார்.
2008 முதல் 2018ஆம் ஆண்டு வரை இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் ஜெயகுமார் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கினார். மானியம் ஏதும் இல்லாதபோதும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனும் நிலையில் அவர் தமது சிறப்பான சேவையை வழங்கினார் என்பதை மறுக்க முடியாது.

10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்த போதிலும் டாக்டர் ஜெயகுமாரின் மீது மக்கள் அதிருப்தி கொண்டது கிடையாது. இதுபோல் ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று அவருக்கு எதிராக யாரும் அறிக்கை விட்டதும் கிடையாது.


2018இல் நிகழ்ந்த அரசியல் சுனாமியாலேயே டாக்டர் ஜெயகுமார் தோல்வியை தழுவினார்.


ஆனால் 22 மாதங்கள் ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, எதிர்க்கட்சியாக இருந்தாலும் வருடாந்திர மானியத்தை பெற்றுக் கொள்ளும் கேசவனின் ‘சேவை மனப்பான்மை’ என்னவென்பதை தொகுதி மக்கள் நன்கறிவர்.

நாடாளுமன்றத்தில் புகழ்மாலை சூடுவதோ, கவிதை வாசிப்பதோ, ‘நான் ஆணையிட்டால்’ என் பாடல் பாடுவதோ மக்களுக்கான சேவையாக அமைந்து விடாது. தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதும், தொகுதியில் களமிறங்கி பணி செய்வதும் தமது கடமை என்பதை மறந்து விடக்கூடாது.


தம் மீதான குற்றச்சாட்டை அவதூறு என புறந்தள்ளுவதை எங்கே பலவீனம் அடைந்தோம் என்பதை ஆராய்வதே நல்ல அரசியல்வாதிக்கு அழகு. அதனை கேசவன் செய்வாரா? தன்னை தானே சுயசோதனை செய்து கொள்வாரா?

Leave a Reply