டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கான இளைஞர்களின் ஆதரவு வரவேற்கத்தக்கது- மணிமாறன்

Malaysia, News, Politics

 434 total views,  1 views today

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அணி திரண்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று சுங்கை சிப்புட் மஇகா தலைவர் கி.மணிமாறன் தெரிவித்தார்.

இங்கு களமிறங்கி சேவை புரிந்து வரும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தின் மீது இந்திய இளைஞர்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளதேயே இது புலப்படுத்துகிறது. இந்தியர்களுக்கு வலுவான கட்சியாக மஇகா திகழ்ந்துக் கொண்டிருப்பதை இந்த 5,000 எதிர்க்கட்சியினரின் ஆதரவு வெளிப்படுத்தியுள்ளது.

சுங்கை சிப்புட் தொகுதி நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவனின் சேவை திருப்திகரமாக இல்லை என்ற  இந்த இளைஞர்கள் கூற்று அனைவரும் அறிந்த ஒன்றுதான். கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று 22 மாதங்கள் நடப்பு அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதியாக பதவி வகித்தபோதும் தற்போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நிலையிலும் மானியங்கள் கிடைத்தபோதிலும் மக்கள்  நலனில் கிஞ்சிற்றும் அக்கறை இல்லாதவராக அவர் திகழ்கிறார். மானியங்களை விநியோகம் செய்யும் ‘தபால்காரராகவே’ செயல்படுவதாக எதிர்க்கட்சியிலிருந்து விலகியவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு. கேசவனின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதற்கு இதுவே உதாரணமாகும்.

ஆயினும் கடந்த மூன்று தவணைகளாக சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி/ மஇகா வேட்பாளர்கள் தோல்வி கண்ட போதிலும் மக்களுக்கான சேவையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும் மானியம் ஏதுமில்லாமல் தொகுதி மஇகா சேவையாற்றி வரும் நிலையில், டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் ‘மக்கள் பிரதிநிதி’யை போல் திறம்பட செயலாற்றி வருகிறார்.

பல இன கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிப்பதாக கூறி கொண்டாலும் மஇகா மட்டுமே இந்தியர்களின் நலனில் அக்கறை காட்டும் கட்சியாக விளங்குகிறது என்பதை புரிந்து கொண்டு டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு ஆதரவு வழங்க வந்துள்ளதை சுங்கை சிப்புட் தேமு தலைவர் டத்தோ சூல்கிப்ளியும் வரவேற்றுள்ளதாக கூறிய அவரின் சிறப்பு அதிகாரி மணிமாறன், ஆதரவு நல்கியுள்ள இளைஞர்களின் தேவைகள் கண்டறிந்து உரிய உதவிகள் நல்கப்படும் என்று குறிப்பிட்டார்.

கேசவன் மீது அதிருப்தி கொண்ட பிகேஆர், ஜசெகவைச் சேர்ந்த சு.உமாபரம், பி.டேவிட் ராஜா உட்பட 5000க்கும் அதிகமாக உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு  வரும் பொதுத் தேர்தலில் முழு ஆதரவு வழங்கவிருப்பதாக அண்மையில் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply