டான்ஶ்ரீ விக்னேஸ்வரனை எதிர்த்து டாக்டர் ஜெயகுமார் களமிறக்கம்?

Malaysia, News, Politics

 241 total views,  3 views today

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் எப்போது என்ற கேள்வி மக்களிடையே எழுந்து வரும் நிலையில் வேட்பாளர்கள் குறித்த ஆரூடங்களும் அவ்வப்போது தலை தூக்குவதும் அடங்கிய பாடில்லை.

அவ்வகையில் மஇகாவின் பாரம்பரிய தொகுதியான சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் போட்டியிடுவது உறுதியாகி விட்ட நிலையில் அவரை எதிர்த்து பிஎஸ்எம் கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் போட்டியிடக்கூடும் என நம்பப்படுகிறது.

சுங்கை சிப்புட்டின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.கேசவன் மீது முன்னாள் அதிகாரி கொடுத்த புகாரும் மக்கள் மத்தியில் சரிந்து விட்ட செல்வாக்கையும் காரணம் காட்டி அடுத்த பொதுத் தேர்தலில் அவர் வேறு தொகுதிக்கு மாற்றப்படலாம் என அறியப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றியும் அவசியமானதாக கருதப்படுவதால் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை அக்கூட்டணி இழக்க விரும்பாது.

அதற்காகத்தான் ம இகாவின் தேசியத் தலைவரை எதிர்த்து டாக்டர் ஜெயகுமாரை களமிறக்க பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தீர்மானித்துள்ளது ஆருடங்கள் வலுக்கின்றன.

கடந்த 3 தவணைகளாக எதிர்க்கட்சியிடம் வீழ்ந்துள்ள சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டும் எனும் முனைப்போடு டான்ஶ்ரீ விக்னேஸ்வரனும் கடந்தாண்டு முதலே அங்கு பல்வேறு நடவடிக்கைகளையும் மக்கள் சேவைகளையும் முன்னெடுத்து வருகிறார்.

டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் மக்கள் சேவையால் கேசவனுக்கான ஆதரவு சரிந்து வரும் நிலையில் அங்கு வெற்றி வேட்பாளரை களமிறக்க டாக்டர் ஜெயகுமாரை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தேர்வு செய்துள்ளது என்ற தகவல் கசிகிறது.


கடந்த 2008 பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மஇகா முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலுவை தோற்கடித்து நாடாளுமன்ற உறுப்பினராக டாக்டர் ஜெயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply