
தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்: அரசு பரிசீலனை – டத்தோஸ்ரீ சரவணன்
194 total views, 1 views today
– இரா. தங்கமணி –
கோலாலம்பூர் – 21 செப் 2022
அரசு துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் இருப்பது போல் தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவதை அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
அரசுத் துறை ஊழியர்கள் அவர்களின் வேலை காலத்திற்குப் பின்னர் கிடைக்கப் பெறும் ஓய்வூதியத்தை வைத்து தங்களது எஞ்சிய காலத்தை கழிக்கின்றனர்.
ஆனால் தனியார் துறை ஊழியர்கள் அப்படியில்லை. தங்களது வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் பணத்தை வாழ்க்கைச் செலவீனங்களுக்கே பயன்படுத்துகின்றனர்.
வேலை காலத்திற்குப் பின்னர் கிடைக்கப் பெறும் இபிஎஃப் பணத்தை பிள்ளைகளின் திருமணம், கல்விக்குச் செலவிடுகின்றனர்.
வருமானம் இல்லாமல், உயர்ந்து வரும் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றினால் 60 வயதுக்குப் பிந்திய அவர்களின் வாழ்க்கை இக்கட்டான சூழலை எதிர்கொள்கின்றனர்.

தனியார் துறை ஊழியர்களின் இப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் அவர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவதை அரசு பரிசீலித்து வருகிறது.
சொக்சோ சந்தா செலுத்துவதிலிருந்தே அவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகிறது என்று மலேசிய தொழிலாளர் அமைப்பின் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.
இத்திட்டம் எப்போது அமலாக்கம் காணப்படும் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, இன்னும் 6 மாதங்கள் ஆகலாம் எனவும் அதற்குள் தேர்தல் வந்தால் மக்கள் நலன் விரும்பும் அரசு எது என்பதை மக்கள் தீர்மானித்து மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் இத்திட்டம் அமல் செய்யப்படும் எனவும் டத்தோஸ்ரீ சரவணன் மேலும் சொன்னார்.