தம்பூனில் அன்வார் போட்டி ? இம்மாத இறுதியில் தெரிய வரலாம் ! – முஜாஹிட் தகவல்

Malaysia, News, Politics

 92 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 9/10/2022

எதிர்வரும் 15வது பொதுத் தேர்தலில் மக்கள் நீதிக் கட்சியான பிகேஆர்-இன் தலைவர் அன்வார் இபுராகிம் தம்பூன் நாடாளுமன்றத்தில் போட்டியிடுவது குறித்து முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது பேரா மாநில நம்பிக்கைக் கூட்டணி.

இது குறித்துத் தகவல் அளித்த நம்பிக்கைக் கூட்டணியின் பேரா மாநிலத் தலைவர் முஜாஹிட் யூசோஃப் ராவா, இம்மாதம் 29 ஆம் நாளில் அறிக்கப்படலாம் எனக் குறிப்பிட்டார்.

தற்போது போர்ட் டிக்சன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அன்வார் இபுராகிம் தம்பூனில் போட்டியிட்டால் அது பேரா மாநில நம்பிக்கைக் கூட்டணிக்குக் கிடைத்த பெருமை எனவும் அவர் சொன்னார்.

தற்சமயம் தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினராக பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் அகமாட் ஃபைஸால் அஸுமு பதவி வகித்து வருகிறார்.அவர் இளைஞர், விளையாட்டு அமைச்சரும் ஆவார்.

கடந்த பொதுத் தேர்தலின்போது நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் அவர் போட்டியிட்டு 5,320 வாக்குகள் பெரும்பான்மையில் பாஸ் கட்சியின் இபுராகிம் ஸக்காரியாவையும் தேசிய முன்னணியின் அகமாட் ஹுஸ்னியையும் தோற்கடித்தார்.

தற்போது தம்பூனில் துரோகிகள் பதவி வகித்து வருவதாகவும் அதனால் அங்கு அன்வார் இபுராகிம் போட்டியிட வேண்டும் என பேரா மாநில ஜசெக அழைப்பு விடுத்திருந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் நடந்த ஷெரட்டன் நகர்வினால் நம்பிக்கைக் கூட்டணியில் இருந்து அகமாட் ஃபைஸால் அஸுமு கட்சித் தாவினார்.

இதனிடையே, தம்பூனில் அன்வார் போட்டியிடுவது குறித்து ஃபைஸால் வரவேற்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அது தமக்கு எனத வகையிலும் ஆபத்து இல்லை எனக் கூறிய அஸுமு, யார் வேண்டுமானாலும் தம்மை எதிர்த்துப் போட்டியிடுவது மக்களாட்சி முறையே எனவும் அவர் சொன்னார்.

Leave a Reply