தமிழ்பள்ளிகளின் தன்மையை சீர்குலைக்கும் இருமொழி பாடத்திட்டம் வேண்டாம்! – மலேசியத் தமிழர் தேசியப் பேரவை

Education, Indian Student, Malaysia, Malaysia, News, Tamil Schools

 88 total views,  2 views today

கோலாலம்பூர் | 1-4-2023

இருமொழி பாடத்திட்டதால் தமிழ்ப்பள்ளிக்கும் தமிழ்வழி கல்விக்கும் பெரும் ஆபத்து விளையும் என்று சமூக ஆர்வலர்கள் சான்றுகளோடு நிறுவும் வேளையில், இரு மொழி பாட திட்டம் வேண்டும் என குரல்கள் மேலோங்கி வருகிறது.

அந்த வகையில், மலேசியத் தமிழர் தேசியப் பேரவையும் இந்த இருமொழி பாடத்திட்டத்திற்குத் தமது எதிர்ப்புக் குரலைப் பதிவிட்டுள்ளது.

இரு மொழி பாடத்திட்டம் என்பதன் பொருளே ஏற்கனவே பள்ளியில் உள்ள கற்றல் – கற்பித்தல் மொழியோடு கூடுதலாக இன்னொரு மொழி அறிமுகப்படுத்தப்படுவதே ஆகும். எடுத்துக் காட்டாக, மலாய் மொழி மட்டுமே கற்றல் – கற்பித்தல் மொழியாக உள்ள பள்ளியில் ஆங்கிலமும் கற்றல் – கற்பித்தல் மொழியாவதுதான் இரு மொழி திட்டத்தின் முக்கியக் கூறாகும்.

ஆனால் தமிழ் பள்ளியில் தமிழ் மொழியோடு மலாய் மொழியும் குறிப்பிட்டப் பாடங்களுக்கு கற்றல் – கற்பித்தல் மொழியாக உள்ளது, ஆக ஆங்கிலமும் கற்றல் – கற்பித்தல் மொழியாகும் போது இருமொழியை கடந்து இது மும்மொழி படத்திட்டமாவது தெளிவு.

கோப்புப் படம்

வாய்ப்பும் வசதியும் இல்லாத காரணத்தினால் சில பள்ளிகளில் மலாய் மொழியை மற்ற பாடங்களில் பயன்படுத்தி தமிழ்மொழியோடு சேர்த்து மூன்று மொழிகள் தமிழ்ப்பள்ளியில் போதிக்கப்படும் நிலை இருக்கிறது. தமிழ்ப்பள்ளியில் ஆங்கிலத்தில் படிப்பதென்றாலும் இடைநிலைப்பள்ளியில் ஆங்கித்திலேயே கற்பார்கள் என்ற உறுதி இல்லை.

அதோடு 2016-இல் எந்த தமிழ்ப்பள்ளியும் இந்த திட்டதை நடப்புக்குக் கொண்டு வர தகுதி அற்றவை என்ற அடிப்படையில் கல்வியமைச்சின் தலைமை இயக்குநரால் நிராகரிக்கப்பட்டன என்பதையும் நோக்க வேண்டும்.

ஆங்கிலப் புலமையை ஆழப்படுத்த அந்த மொழி சார்ந்த கற்றல் கற்பித்தலை மேம்படுத்திவிட்டாலே போதுமானது. திறனுள்ள ஆசிரியர்களும் நவீன கற்றல் – கற்பித்தல் உத்திகளையும் கையாண்டாலே ஆங்கில மொழி புலமையை மேம்படுத்தி விடலாம்.

இதை விடுத்து அறிவியலையும் கணிதத்தையும் ஆங்கிலத்தில் போதித்து ஆங்கில புலமையை உயர்த்துவோம் என்ற பெயரில் எதற்கு தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும்?

பள்ளியின் அடைவு நிலையை அதிகப்படுத்தி அதன் மூலம் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதை ஊக்குவிப்பதை விடுத்து இப்படி பின் பக்க வழியாக தமிழ்ப்பள்ளியின் அடையாளத்தை மாற்றக்கூடிய இருமொழி படத்திட்டத்தின் மூலமாக மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஊக்குவிப்பது முறையா என்று பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும் அவ்வியக்கத்தின் துணைத் தலைவரும் வழக்கறிஞருமான பாலமுரளி இராமசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

பொருளாதார அடிப்படையிலும் சமுதாய கட்டமைப்பு அடிப்படையிலும் வலுவான நிலையில் உள்ள சீன சமூகமே இருமொழி பாடதிட்டதை முற்றிலும் நீராகரித்துள்ள நிலையில் இன்னும் அடிப்படை வசதியே சரியாக அமையப்பெறாத தமிழ்ப்பள்ளிகளுக்குள் ஏன் இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது வியப்பாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்துக்கு செய்யும் செலவை பள்ளியின் கட்டமைப்புக்குச் செலவு செய்தாலே பள்ளியின் நிலைமை மாறும் என்பது உறுதி.

தமிழ்வழி கல்விதான் தமிழ்ப்பள்ளியின் அடையாளம் அந்த அடையாளத்தையும் அடிப்படையையும் மாற்றப்படுவதுக்கு இந்த சமூகம் ஒரு போதும் இடம் கொடுக்க கூடாது என அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply