தரமிக்கக் கற்பித்தல் மூலம் தரமான மாணவர்களை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்

Malaysia, News

 121 total views,  1 views today

கோலாலம்பூர்-

“வளமிக்கப் பள்ளிக்கு ஆசிரியரே ஆணிவேர்” என்ற கருப்பொருளுடன் இந்த வருட ஆசிரியர் தினம் மலர்கிறது. மலேசிய வாழ் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

துலாக்கோல் போல எல்லா மாணவர்களையும் சமமாக நோக்கி, மாணவர்களை செம்மைப்படுத்தி, சிந்திக்க வைத்து, கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக உருவாக்கிவிடுவதற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆசிரியர்கள், அவர்களின் ஈடு இணையற்ற சேவையை வழங்கிய வண்ணம் இருக்கிறார்கள்.

கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்குச் சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே. இன்றைய சூழலில் நாளைய உலகம் எப்படி இருக்கும், எதிர்காலத்தில் என்ன ஆச்சர்யம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாது என்பதை மாணவர்கள் உணரும்படி செய்ய வேண்டும். இன்றைய சூழலில் உலகத்தில் ஏற்படும் மாற்றங்கள், சமூக சூழல், சமுதாய சிந்தனை என்று பல்வேறு சூழலுக்கும் ஏற்ப மாணவர்களைத் தயார் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

தொழில் புரட்சி 4.0, உலகமயமாக்கல், டிஜிட்டல் உலகம் இப்படி பல காலத்திற்கேற்ற தகவல்களையும் தந்து மாணவர்களைக் கல்வியாளர்களாக, அடுத்தத் தலைமுறையின் வெற்றியாளர்களாக உருவாக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.

கடந்த 2 வருடங்கள் கல்வி என்பது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்குமே மிகவும் மோசமானதாக இருந்தது என்பதனை அனைவரும் அனுபவித்து உணர்ந்தோம். தற்போது அந்நிலை மாறி வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளோம். ஆனால் கடந்த 2 வருடங்களின் தாக்கம் சற்று கூடுதலாகவே கற்றல், கற்பித்தல் நிலையில் இருந்து வருகிறது.

இணைய வழிக்கல்வி எந்த அளவிற்கு வெற்றி கண்டது என்பது கேள்விக் குறியே. ஆக ஆசிரியர்கள், மாணவர்களின் புரிதலை மேம்படுத்த வேண்டும். புதிய சூழலில் மாணவர்களின் தன்மை, கிரகிக்கும் நிலை போன்றவற்றை ஆராய்ந்து கற்பிக்கும் சூழலுக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதனையும் சிறப்பாக, மாணவர்களை மேம்படுத்தும் ஒரே நோக்கத்தில், தங்களது கடமையிலிருந்து சற்றும் விலகாத ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.

“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

 மன்னனின் கற்றோன் சிறப்புடையன்

மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை

கற்றோற்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.”

என்றார் ஒளவையார் கல்வியின் மேன்மை பற்றி கூறும்போது.   கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றால் அந்தக் கல்வியை நமக்குக் கற்றுத் தந்த ஆசானுக்கு வாழ்நாள் முழுதும் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது”

எந்தப் பிரதி பலனும் கருதாமல் செய்த உதவியின் நன்மை, கடலைவிடவும் பெரியது.

ஏட்டுக்கல்வி மட்டும் இல்லாது, வாழ்க்கைக் கல்வியையும் சேர்த்து கற்றுக் கொடுக்க வேண்டும். ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற்றான் என்பது பணத்தினால் மட்டுமல்ல, குணத்தினாலும் தான். இன்னும் சொல்லப்போனால் குணமே ஒருவனை உயர்த்திக் காட்டும், உயர்ந்த நிலையில் நிலைக்க வைக்கும்.

தரமிக்க கற்பித்தல் மூலம் தரமான மாணவர்களை உருவாக்கி இந்த நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வோம். ஆசிரியர்களின் சேவைக்கு நன்றி சொல்லும் இந்நாளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்வோம். இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் என்று மனிதவள அமைச்சரும் மஇகாவின் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

Leave a Reply