தாப்பாவில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் பயிற்சி வகுப்புகள்

Business, Economy, Local, Malaysia, News

 90 total views,  1 views today

தாப்பா – 27/10/2022

பூர்வீகக் குடியினர் பங்கு கொள்ளும் மாச்சில் (பிஸ்கட்), சிறு அனிச்சல் (கப் கேக்) செய்யும் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து 5 நாட்களுக்கு தாப்பாவில் நடைபெற்று வருகின்றன. ஏறத்தாழ 75 பூர்வீகக் குடியினர் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

பல இன மக்கள் வாழும் மலேசியத் திருநாட்டில் பெருநாட்களுக்குக் குறைவில்லை. அந்தப் பெருநாள் காலங்களில் இது போன்ற பலகாரங்கள் செய்வது வழக்கமான ஒன்று. ஆனால் இன்றைய அவசரச் சூழலில், பலரும் வேலையில் அதிக நேரம் செலவிடுவதால் வீட்டில் இதுபோன்ற பலகாரங்கள் செய்ய நேரம் கிடைப்பதில்லை. அதனால் பெரும்பாலும் கடைகளில் வாங்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஆக மாச்சில் (பிஸ்கட்), சிறு அனிச்சல் (கப் கேக்) போன்ற உணவுப் பொருட்களின் தேவை அதிகமாகப் பெருகியுள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. எனவேசிது போன்ற பயிற்சிகளின் வழி வருமானம் ஈட்ட முடியும். குறிப்பாக பூர்வக் குடியினர், இல்லத்தரசிகள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

தாப்பா வாழ் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப, அவர்களுக்கான வருமானத்தை ஈட்டுவதற்கு இது போன்ற பயிற்சிகள் பேருதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனவேதான் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மனிதவள அமைச்சருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ மு சரவணன் இதுபோன்ற பயிற்சிகளுக்கு முக்கியத்துவம்  கொடுத்து வருகிறார். வெறும் பயிற்சிகள் மட்டுமல்லாது, பயிற்சிகளில் பங்கெடுப்பவர்களுக்கு அதற்கான பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, தையற்கலைப் பயிற்சிக்குத் துணி தைக்கும் தையல் இயந்திரம்; அனிச்சல் செய்யும் பயிற்சிகளுக்கானக் கருவிகள்; ஆண்களுக்கான புல் வெட்டும் பயிற்சிக்குப் புல் வெட்டும் இயந்திரம் என பல்வேறு பயிற்சிகளும் அதற்கான பொருட்களும் வழங்கப்படுகின்றன.

“இதன்மூலம் சிறுதொழில் தொடங்குவது மட்டுமல்லாமல், சொந்தத் தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். ஆக வருமானம் ஈட்டுவது ஒரு பக்கம் இருக்க, அவர்களின் செலவினங்களைக் குறைக்கவும் முடியும்” என்று கூறினார் டத்தோ ஸ்ரீ மு சரவணன்.

கடந்த 15 வருடங்களாகத் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்கள், தாப்பா மக்களின் நாடியறிந்து செயல்படுகிறார் என்றால் அது மிகையாகாது.

Leave a Reply