தும்பிக்கை துண்டிக்கப்பட்ட யானைக்குட்டி உயிரிழப்பு

News, World

 153 total views,  3 views today

காடுகள்… வன விலங்குகள் உயிர் வாழ்வதற்கான ஆதாரமாக திகழும் காடுகள் அழிக்கப்படுவதனால் அழிவின் விளிம்பில் பல உயிரினங்கள் இருக்கின்றன. இதில் பெருமளவு அபாய நிலையில் உள்ளது யானைகள்தான்.
பெருமளவு இடப்பெயர்வை முன்னெடுக்கும் யானைகள் வேட்டைக்காரர்களின் தாக்குதலுக்கு இலக்காகின்றன.


அவ்வகையில் இந்தோனேசியாவில் வேட்டைக்காரர்கள் உருவாக்கிய யானை குழியில் சிக்கிய குட்டி சுமத்ரா யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

ஆபத்தான நிலையில் இருந்த ஒரு வயதான அந்த குட்டி யானையை அதனுடன் வந்த யானைக்கூட்டம் அப்படியே விட்டுச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

ஆச்சே ஜேயா கிராம மக்களால் இந்த குட்டி யானை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளூர் யானை பாதுகாப்பு அமைப்பின் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.

காயங்களுடன் இருந்த அந்த குட்டியை காப்பாற்ற, அதன் தும்பிக்கையில் பாதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஆனாலும், காயங்களின் தொற்று உடலின் பிற பகுதிகளுக்கும் பரவியதால் அது இரண்டு நாட்கள் கழித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

“காயம் கடுமையாக இருந்ததால் எங்களால் அதைக் காப்பாற்ற முடியவில்லை” என்று ஆச்சே ஜெயா இயற்கை வளங்கள் பாதுகாப்பு முகமையின் தலைவர் அகஸ் அரியான்டோ தெரிவித்தார்.
“நாங்கள் அதற்கு எங்களால் முடிந்த உதவியைச் செய்தோம்,” என்றும் அவர் கூறினார்.

யானைகளின் இயற்கையான வாழ்விடங்களான போர்னியோ மற்றும் சுமத்ரா காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வரும் விகிதம் காரணமாக, அவற்றில் வாழ்ந்து வந்த சுமத்ரா யானைகள், மிகவும் அழிவை சந்திக்கும் உயிரினமாகக் கருதப்பட்டு வருகின்றன.

Leave a Reply