
தொழிலாளர் பிரச்சினைக்கு உதவிக்கரம் நீட்டுக
321 total views, 1 views today
பெட்டாலிங் ஜெயா-
இந்நாட்டில் பல்வேறு தொழில் துறைகளில் ஈடுபட்டிருக்கும் இந்திய வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இதனால் இவர்களின் தொழில்துறை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக சிலாங்கூர் – கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.இராமநாதன் தெரிவித்தார்.
ஜவுளி கடைக்காரர்கள், செர்விஸ் செக்ஸ்டர், உலோக பொருள் மறுசுழற்சி, வாழை இலை இந்திய உணவகங்கள், முடித்திருத்தும் கடைகள், நகைக் கடைகள், தையல் கடைகள், பூக்கடைகள் உட்பட பல துறைகளில் ஈடுபட்டிருக்கும் இந்திய வணிகர்கள் தற்போது அந்நிய தொழிலாளர்கள் இல்லாமல் தவிக்கிறார்கள்.
இந்நிலை தொடர்ந்தால் நாட்டில் பல இந்திய தொழில் வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை தொடர முடியாமல் போகலாம். ஆகவே சிலாங்கூர் மாநில அரசாங்கம் உடனடியாக மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி குறிப்பிட்ட தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாக எடுத்து அந்தத் தொழிலாளர்களை தொழில் துறைகளுக்கு தருவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் – கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இது நம்ம வீட்டு தீபாவளி உபசரிப்பில் உரையாற்றும் போது டத்தோ ஆர் இராமநாதன் இந்த கோரிக்கையை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரியிடம் முன் வைத்தார்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நாங்கள் எதிர் நோக்கி இருக்கும் அன்னிய தொழிலாளர்கள் பிரச்சினைக்கு உதவ முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரியுடன் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், நெகிரி செம்பிலான் மாநில துணை சபாநாயகர் டத்தோ எம் ரவி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, புக்கிட் காசிங சட்ட மன்ற உறுப்பினர் ராஜீவ், லோட்டஸ் குழுமத்தின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ ரெய்னா. துரைசிங்கம், பிரிமாஸ் தலைவர் சுரேஷ் உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்.