நன்னெறி பாடம் நடத்துவதில் அலட்சியம் காட்டும் தலைமை ஆசிரியை ! எதிர்த்துக் கேள்வி கேட்டால் அதிகாரத்தைக் கொண்டு அடக்குமுறை !

Crime, Education, Indian Student, Malaysia, Malaysia, News, Tamil Schools

 440 total views,  1 views today

கைவிடப்பட்ட மாணவர்கள் !
கொந்தளித்த பெற்றோர்கள் !

~ ஐ சேனல் சிறப்பு செய்தி ~

கோம்பாக் – 17 ஜூலை 2022

நன்னெறிக் கல்வி பாடம்தானே என அலட்சியம் காட்டியதில் 2022 ஆம் ஆண்டு பள்ளி தவணை தொடங்கி இம்மாதம் வரையில் வெறும் 4 பயிற்சிகள் மட்டுமே மாணவர்களின் நோட்டுப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விவகாரம் தற்போது குறிப்பிட்ட ஒரு தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்களிடையே கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடங்களை ஆசிரியர்கள் முறையாகக் கற்பிக்கிறார்களா ? சரியான பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறார்களா ? பள்ளி நிர்வாகம் முடிவு செய்திருக்கும்படி கால அட்டவணையைப் பின்பற்றி பாடங்கள் கற்பிக்கப்படுகின்றனவா ? குறித்த காலத்தில் அப்பாடம் பாடத்திட்டத்தின்படி கற்பிக்கப்படுகிறதா ? ஆகியவற்றை ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர்தான் கண்காணிப்பார்.

சில பாடங்களுக்கு தலைமை ஆசிரியரே கற்பிக்க கால அட்டவணை தயார் செய்யப்படும். தமிழ்மொழி, மலாய்மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற முதன்மைப் பாடங்களைத் தவிர்த்து கலைக் கல்வி, உடற்கல்வி – நலக்கல்வி, நன்னெறி போன்ற பாடங்களுக்கு இது போன்ற சூழல் ஏற்படுவது வழக்கமான ஒன்று.

இது போன்ற பாடங்கள் வாரத்தில் ஒரு முறை அல்லது இரு முறை கற்பிக்கும் நிலையில் அந்தக் கால அட்டவணை அமைந்திருக்கும்.

அவ்வாறு கொடுக்கப்படும் பொறுப்பில் இருந்து விலகி இவ்வாண்டு பள்ளித் தவணை தொடங்கி 5 மாதங்களில் வெறும் நான்கு பயிற்சிகளை மட்டுமே அந்தக் குறிப்பிட்டத் தலைமை ஆசிரியர் மாணவர்களுக்குக் கொடுத்திருக்கும் தகவலை அப்பள்ளியின் பெற்றோர்கள் ஐ சேனலுக்குக் கொடுத்துள்ளனர்.

மேலும், இவ்வளவு குறைவாகப் பாடம் கற்பிக்கப்பட்டது குறித்து தங்களின் பிள்ளைகளிடம் அப்பெற்றோர்கள் வினவியதில், அப்பாடத்தைக் கற்பிக்க (தலைமை) ஆசிரியர் வகுப்புக்கு வருவதில்லை எனும் தகவல் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். இது குறித்து கல்வி அமைச்சு நிலையில் புகார் கடிதத்தையும் பெற்றோர் தரப்பு அனுப்பு இருப்பதும் ஐ சேனலுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தலைமை ஆசிரியர் பொறுப்பு எனும் நிலையில் அதிகப்படியான நிர்வாகப் பணிச் சுமை இருப்பது யாவரும் அறிந்ததே, அவ்வாறானச் சூழலில் மாற்று ஆசிரியரை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அடிக்கடி அதிகாரப்பூர்வ பணி காரணமாக வெளியிலும் செல்ல வேண்டிய நிலை வரலாம். அப்படி இருந்தால் அந்தத் தலைமை ஆசிரியர் இப்பாடத்தைக் கற்பிக்கத் தன்னால் இயலாது என முன்னரே தெரிவித்திருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல், மாணவர்களை இப்படி கைவிடுவது எந்த வகையில் நியாயம் ?

ஐ சேனலின் மேற்கொண்ட சில கள ஆய்வு, விசாரணை ஆகியவற்றுக்குப் பிறகு, பணி காரணமாக தாம் வெளியில் இருப்பதையோ விடுமுறை எடுத்திருப்பதையோ பள்ளிக்கு – குறிப்பாக இதரத் துணைத் தலைமை ஆசிரியர்களுக்குத் இந்தப் பொறுப்பற்றத் தலைமை ஆசிரியர் தெரிவிப்பதோ இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

இதனால், மாற்று ஆசிரியர் ஏற்பாடு செய்யப்படாமலும் போகிறது. பல ஆண்டுகள் நிர்வாகப் பதவியில் இருந்தும் இவ்வாறான அவரது நடவடிக்கை மாணவர்களின் கல்வித் தரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அந்தத் தலைமை ஆசிரியருக்குத் தெரியாமல் போகுமா என்பதையும் பெற்றோர்கள் குறிப்பிடாமல் இல்லை.

ஓரு முறை இரு முறை என்றால் பரவாயில்லை. ஏப்பிரல் முதல் வாரம் தொடங்கி ஜூலை முதல் வாரம் வரையில் அப்பள்ளியின் குறிப்பிட்ட ஒரு வகுப்பு மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்த வில்லை என்றால் அப்பாடம் குறித்த தேர்வும் அது சார்ந்த அம்மாணவர்களின் முடிவு – தரம் பாதிக்கப்படும் என்பதை கிஞ்சீற்றும் உணராமல் அத்தலைமை ஆசிரியர் நடந்து கொள்கிறாரா எனும் சந்தேகத்தையும் பெற்றோரிடத்தில் ஏற்படுத்தி இருப்பதையும் நம்மால் மறுக்க முடியாது.

மற்ற ஆசிரியர்களின் கற்றல் – கற்புத்தலை கண்காணிக்கும் தலைமை ஆசிரியர்கள் சிலரின் இவ்வாறான நடவடிக்கையை யார் கண்காணிப்பது ?

இல்லை, நன்னெறி கல்வி பாடம் தானே எனும் அலட்சியமா ? ஏற்கெனவே பல பள்ளிகளில் பாடத்திட்டத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக சில முதன்மைப் பாட ஆசிரியர்கள் நன்னெறி கலைக் கல்வி, உடற்கல்வி, நலக்கல்வி போன்ற பாட நேரங்களைப் பயன்படுத்தி வருவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆனால், கல்வி அமைச்சின் பாடத்திட்டத்தையும் மீறி தாம் எடுப்பதுதான் முடிவு எனும் மனப்போக்கில் இப்பாடங்களை அலட்சியப் படுத்தி அதனைத் தயார் செய்யும் அமைச்சின் பாடத்திட்டப் பிரிவுக்கே சவால் விடுகிறாரா என்பதும் இங்கு கேள்விக் குறியாகி உள்ளது.

குறிப்பு : இந்தச் செய்தி வெளி வந்த பிறகு, இது போன்ற தவறுகளைச் செய்யும் சில பள்ளியைச் சார்ந்த ஆசிரியர்களோ, தலைமை ஆசிரியர்களோ அல்லது அவர்களது கைகூலிகளோ, ஒத்து ஊதும் ஆசாமிகளோ அரைவேக்காட்டுத் தனமாய் கொதித்து எழக் கூடும். அவ்வப்போது தமிழ்ப்பள்ளி சார்ந்த சமூக ஊடகங்களில் கருத்துப் பரிமாற்றம் எனும் பெயரில் வீர வசனம் பேசியும் சிலரின் பெயர், சம்தப்பட்ட நிர்வாகத்தின் பெயரைப் பதிவிட்டு தங்கள் தலை தாங்களே மண்ணை வாரி இறைத்துக் கொண்டும் இருப்பதையும் ஐ சேனல் மறுக்கவில்லை.

அதிகார முறைகேடல், அத்துமீறல் போன்றவை தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் எவ்வித ஒளிவு மறைவையும் ஐ சேனல் முன்னெடுக்காது.
அதே வேளையில் சமுதாய நோக்கத்தை முன்னெடுக்கும் பட்சத்தில் வெளியிடப்படும் செய்திகளில் எந்தவொரு தனிநபரையும் அவமானப்படுத்துவதோ தாழ்த்துவதோ நமது நோக்கம் கிடையாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இச்செய்தி விவகாரத்தில் அதிருப்தி கொள்பவர்கள் சட்டத்தை நம்பும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கலாம். தேவைப்படும் பட்சத்தில், சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை ஐ சேனல் நீதிமன்றத்தில் சேர்க்க வழக்கறிஞர் குழுவுடன் எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றது.

Leave a Reply