நேரலை | 15வது பொதுத் தேர்தல் : என்ன நடக்கிறது ? – தெரிந்து கொள்வோம் ! நல்ல அறிகுறி – ஸுரைடா

Malaysia, News, Politics, Polls

 10 total views,  1 views today

– குமரன்

சௌஜானா உத்தாமாவில் மிக நீளமான வரிசை

காலை மணி 9.50 – பண்டார் சௌஜானா உத்தாமா, சுங்கை பூலோ : சௌஜானா உத்தாமா இடைநிலைப் பள்ளி முன்புறம் ஒரு கிலோமீட்டர் நீளம் வரிசையில் வாக்காளர்கள்.

20 வழித் தடத்தில் 13,983 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

காலை 9.40 வரையில் கோவிட்-19 தொற்று பாதித்துள்ள 7 பேர் வாக்களித்துள்ளனர்.

நல்ல அறிகுறி – ஸுரைடா

காலை மணி 9.38 – அம்பாங், சிலாங்கூர் : இந்த நாடாளுமன்றத் தொகுதியைத் தக்கவைக்கக் களம் இறங்கி இருக்கும் ஸுரைடா கமாருடின் தமது வாக்கை டத்தோ அகமாட் ரஸாலி மண்டபத்தில் தமது வாக்கைச் செலுத்தினார்.

Parti Bangsa Malaysia (PBM) வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள அவர் கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் வாக்களிப்போர் விழுக்காடு அதிகமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இது மிகவும் நல்ல அறிகுறி எனக் கூறிய அவர், தாம் காலை 7.30 மணிக்கு வாக்களிக்கச் செல்லும்போது அதிகமான இளம் வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதைப் பார்த்தையும் குறிப்பிட்டார்.

தாம் இங்கு 15 ஆண்டு காலம் சேவையாற்றியவர் எனவும் கூறிய அவர், வரிசையில் நிற்கும் சில வாக்காளர்களிடம் பேசி விட்டுப் புறப்பட்டார்.

அஸ்லி : 18 வயது வாக்காளர்களே முடிவு செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் !

காலை மணி 9.30 – ஷா ஆலம் : இத்தேர்தலில் 18 வயது வாக்காளர்களே நாட்டின் தலையெழுத்தை முடிவு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள் என நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் அஸ்லி யூசோஃப் குறிப்பிட்டார்.

முதன் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் நாட்டிற்காகத் தங்களின் கடமையைச் செய்வார்கள் எனவும் அவர் சொன்னார்.

காலை மணி 9.20 – கோம்பாக், சிலாங்கூர் : கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தாம் தக்கவைப்பார் எனக் கூறி இருக்கிறார் அஸ்மின் அலி.

கிள்ளான் கேட் தேசியப் பள்ளியில் வாக்கைச் செலுத்திய அஸ்மின் அலி, செய்தியாளர்களிடம் பேசினார். எந்த முடிவாக இருந்தாலும் அது மக்களின் முடிவு. தமது சேவையின் அடிப்ப்டையில் கோம்பாக் மக்கல் தம்மை ஆதரிப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

காலை மணி 9.39, லெம்பா பந்தாய், கோலாலம்பூர் : புக்கிட் பண்டாராயா இடைநிலைப்பள்ளி வாக்குச் சாவடிக்கு முன்புறம் FoodPanda ஊழியர் ஒருவர் வாக்காளர்களுக்கு தண்ணீர் புட்டி, முகத் துடைப்பு, கை விசிறி ஆகிவை கொண்ட பையைப் பகிர்ந்தளித்துக் கொண்டிருந்தார்.

வாக்களிக்க வருகிறவர்களுக்கு செய்யும் மரியாதையாக இது வழங்கப்படுவதாகத் தெரிவித்த அவர், லெம்பா பந்தாய், சுபாங், பண்டார் துன் இரஸாக் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் இது போன்று FoodPanda ஊழியர்களைப் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஒவ்வொரு பள்ளியிலும் 500 பைகள் கொடுப்பட ஏற்பாடு செய்திருப்பதாகவும் இது வரையில் 250 பைகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

தேசிய முன்னணி ஆட்சி அமைக்கும் – ஸாஹிட் நம்பிக்கை

காலை மணி 9.15, பாகான் டத்தோ, பேரா : நேற்று நள்ளிரவு 12.00 மணி அளவில் தமக்குக் கிடைத்த அறிக்கையின்படி, தேசிய முன்னணி ஆட்சி அமைக்கும் என தேசிய முன்னணியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.

மற்றக் கூட்டணியுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் சொன்னார்.

மிக நீளமான வாக்குப் பதிவுத் தாள் – பிரபாகரன்

காலை மணி 9.00, பத்து, கோலாலம்பூர் : வாக்குப் பதிவுத் தாள் மிக நீளமாக இருக்கிறது என பத்து நாடாளுமன்றத் தொகுதியில் களம் இறங்கியுள்ள நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் பிரபாகரன் தெரிவித்தார்.

மக்களைச் சந்தித்த அவர், நன்கு சிந்தித்து நாட்டிற்காக வாக்களியுங்கள் எனக் கூறினார்.

அந்த வகையில், யாருக்கு நீங்கள் வாக்களிப்பீர்கள் என பிரபாகரனை அங்கு வந்த வாக்காளர் ஒருவர் பிரபாகரனைக் கேட்டபோது, “அது இரகசியம்” என அவர் சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

ஃபாஹ்மியின் ஊடகவியலாளர் சந்திப்பு – கூடாது என அறிவுறுத்திய தேர்தல் ஆணைய அதிகாரி

காலை மணி 8.55, லெம்பா பந்தாய், கோலாலம்பூர் – இங்குள்ள ஶ்ரீ பந்தாய் இடைநிலைப் பள்ளியில் வாக்களிக்க வந்த இத்தொகுதியைத் தக்க வைக்க நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள ஃபாஹ்மி ஃபாட்ஸில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அதே நாடாளுமன்றத் தொகுதியின் மற்ற வாக்குச் சாவடியில் உள்ள குறைகளை அங்கு அவர் சுட்டிக் காட்டினார்.

புக்கிட் பண்டாராயா இடைநிலைப் பள்ளியில் காலை 8.15 வரை வாக்களிப்பு தொடங்கப்பட வில்லை எனவும் கெரிஞ்சி மக்கள் குடியிருப்பு அடுக்ககத் திடலில் மிக நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்ததையும் அவர் அங்கு குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, வாக்குச் சாவடியில் ஃபாஹ்மியின் உடனடி செய்தியாளர் சந்திப்பு தவறு என தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் வலியுறுத்திக் கூறினார்.

மலேசியத் தேர்தலை உலகுக்கு அறிவித்த Google Doodle

காலை மணி 8.45: மலேசியாவின் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு கூகிள் டூடல் தேடல் இயந்திரத்தின் முகப்பில் வாக்குப் பெட்டியையும் மலேசியக் கொடியையும் இடம்பெறச் செய்துள்ளது கூகிள்.

google.com.my எனும் முகவரியில் கூகிள் சின்னத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை சொடுக்கினால் சிறு விளக்கமும் காண்பிக்கப்படுகிறது.

காலை மணி 8.37, லெம்பா பந்தாய், கோலாலம்பூர் – நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் தமது வாக்கை ஶ்ரீ பந்தாய் இடைநிலைப் பள்ளியில் செலுத்தினார்.

வெள்ளை ஆடையில் வாக்களிக்க வந்தவர் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

தாம் வாக்களித்த ஆதாரமாக மை வைத்த விரலை செய்தியாளர்களிடம் காட்டினார்.

மழையிலும் வாக்களிக்கச் சென்ற மக்கள்

காலை மணி 8.13, பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர் – மழை இலேசாகத் தூறினாலும் பெட்டாலிங் ஜெயா வாக்காளர்கள் வாக்களிக்க சுல்தான் அப்துல் சமாட் இடைநிலைப் பள்ளிக்கு வந்தனர்.

வாக்குச் சாவடி திறக்கும் முன்னரே மிக நீளமான வரிசையில் பள்ளிக்கு வெளியே காத்திருந்தனர்.

ஸாஹிட் வாக்களித்தார்

காலை மணி 8.10, பாகான் டத்தோ, பேரா – தேசிய முன்னணியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடியும் அவரது துணைவியார் ஹமிடா காமிஸ், அவரது மகள் நுருல் ஹிடாயா ஆகியோரும் வாக்களிக்க மன்பயில் மதராசா உலும் சுங்கை நீப்பா டாராட்டுக்கு வாக்களிக்க வந்தனர்.

அவர்களது வீட்டிற்கு மிக அருகிலேயே வாக்குச் சாவடி அமைந்துள்ளது.

தேசிய முன்னணியின் நீல நிற ஆடையில் அவர்ந்த அவர் கடந்த 1995 முதலே இத்தொகுதியைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறார்.

தம்பூனில் மாபெரும் வெற்றி – அகமாட் ஃபைஸால் அஸுமு நம்பிக்கை

காலை மணி 8.10 : அல்-இதிடியா சமயப் பள்ளியில் தமது வாக்கினைச் செலுத்த வந்தார் தேசியக் கூட்டணி வேட்பாளர் அகமட் ஃபைஸால் அஸுமு.

தமது தொகுதியைத் தக்க வைக்க களமிறங்கிய அவர் காலை 7.55 மணிக்கு தமது மனைவி டாக்டர் னோமி அஷிக்கின் முகம்மட் ரட்ஸியுடன் வந்தார்.

தியோமான் சட்டமன்றத் தியோமான் சட்டமன்றத் தொகுதியில் தேசியக் கூட்டணி வேட்பாளராகக் களம் இறக்கப்பட்ட முகம்மட் யுனுஸ் ரம்லி காலமானதைத் தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு தமது இரங்கலைத் தெரிவித்தார்.

ஷா ஆலாம் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் முன்கூட்டியே வந்து சேர்ந்தார்

காலை மணி 8.00 , ஷா ஆலாம், சிலாங்கூர் – ஷா ஆலாம் நாடாளுமன்றத் தொகுதியின் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் அஸ்லி யூசோஃபும் அவரது துணைவியாரும் செக்‌ஷன் 7 மெலுர் மண்டபத்தின் வெளியில் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்தனர்.

மழை தூறல் இருந்தாலும் வாக்காளர்கள் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்ததைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகக் குறிப்பிடார்.

இந்த வாக்குச் சாவடி திறப்பதற்கு முன்னரே ஏறத்தாழ 50 பேர் வரிசையில் காத்திருந்தனர்.

ஷா ஆலமில் நம்பிக்கைக் கூட்டணியின் வெற்றியைத் தக்க வைக்கும் என அவர் சொன்னார்.

வாக்களிப்பதற்கு முன்னர் கைத்தூய்மியைப் பயன்படுத்த வேண்டியதில்லை ! – ஆணையம்

காலை மணி 8.00 : வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்னர் கைத்தூய்மியைப் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயம் இல்லை எனத் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

கட்சிகளின் சின்னத்தைக் கொண்டிருக்கும் ஆடையை வாக்குச் சாவடிக்கு அணிந்து வரக்கூடாது எனவும் ஆணையம் அறிவித்திருந்தது.

தியோமான் சட்டமன்றம் – தேசியக் கூட்டணி வேட்பாளர் மரணம்

அதிகாலை மணி 3.30 : இதயக் கோளாறு காரணமாக தியோமான் சட்டமன்றத் தொகுதியில் தேசியக் கூட்டணி வேட்பாளராகக் களம் இறக்கப்பட்ட முகம்மட் யுனுஸ் ரம்லி காலமானார்.

இதனை பகாங் மாநில தேர்தல் ஆணைய இயக்குநர் ஸம்ரி ஹம்லி உறுதிப்படுத்தினார்.

ரொம்பின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் சுய நினைவு இல்லாமல் இருந்தார். மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிர் நீத்தார்.

எனவே, அங்கு வாக்களிப்பு ஒத்தி வைக்கப்படுவதாகவும் அத்தேதி பின்னர் அறிவிக்கப்படுவதாகவும் சொன்னார்.

.

Leave a Reply