பலவீனத்தை கலைந்து பலம் பெறுமா பிகேஆர்?

Malaysia, News

 257 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

பிகேஆர் கட்சியின் புதிய மத்திய செயற்குழுவுக்கான தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்சியின் தலைவராக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது பதவியை தொடரும் வேளையில் கட்சியின் துணைத் தலைவராக ரபிஸி ரம்லி உறுப்பினர்களின் பேராதரவோடு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் உயர்மட்ட நிலையிலும் தொகுதி நிலையிலான தேர்தல்கள் சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் கட்சி தன்னை உருமாற்றி கொள்ளக்கூடிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.

‘வருங்கால பிரதமர்’ எனும் அடைமொழியுடன் பல்வேறு துரோகங்ளுக்கும் இன்னல்களுக்கும் ஆட்பட்ட டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரதமராக உருவெடுக்க வேண்டும் என்பது கட்சி அடிமட்ட உறுப்பினர்களின் தீராத பேராவல் ஆகும்.

நாட்டின் துணைப் பிரதமராக பதவி வகித்த அன்வார் இப்ராஹிம் மீது குற்றச்சாட்டு சுமத்திய  அப்போதைய பிரதமர் துன் மகாதீர் முகம்மது அன்வாரை சிறையில் அடைத்தது முதல் நயவஞ்சக சூழ்ச்சி அரங்கேற்றப்பட்டே வந்துள்ளது.

அப்போது தொடங்கிய சதிராட்டமும் துரோகமும் இன்னமும் டத்தோஶ்ரீ அன்வாரை பிரதமர் அரியாசணத்தில் ஏற விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கிறது.

கடந்த 2018இல் நடந்த நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போதுகூட 60 ஆண்டுகாலம், ஆட்சியில் இருந்த தேசிய முன்னணியை வீழ்த்தி  பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் நயவஞ்சகர்களின் சதிராட்டத்தில் வீழ்த்தப்பட்டது அன்வாரின் கனவு மட்டுமல்ல; வாக்குரிமை உள்ள மலேசியர்களின் ஜனநாயக உரிமையும் தான்.

புதிய செயற்குழுவோடு உருமாற்றம் காண்கின்ற பிகேஆர் கட்சி அடுத்த பொதுத் தேர்தலுக்குள் தன்னை முழுவதுமாக சுதாகரித்துக் கொண்டு தம்முடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை அறிந்து கொண்டு பலவீனங்களை கலைந்து புத்தாக்கம் படைத்த புது கட்சியாக களமிறங்கினால் மட்டுமே அடுத்த பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்றுவதற்கான வழியாக அமையும். அக்கட்சிக்கான ‘வருங்கால பிரதமர்’ என்ற சொற்றொடர் நிஜமொழியாக உருமாறும்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிகேஆர் கட்சியின் செயற்குழுவினருக்கும் தொகுதி பொறுப்பாளர்களுக்கும் ‘ஐ சேனல்’ தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply