பள்ளிகளுக்கு விற்கப்படும் விருதுகள்; பணம் கொடுத்து வாங்கப்படும் (தங்கப்) பதக்கங்கள்; அதில் கலந்திருக்கும் ஊழல் !

Education, Indian Student, Malaysia, Malaysia, News, Tamil Schools

 79 total views,  1 views today

குமரன்

கோம்பாக் – 28 ஆகஸ்டு 2022

தமிழ்ப்பள்ளிகள் தங்கப்பதக்கங்கள் வெல்வது நம் சமுதாயத்தின் பெருமைதான்.
ஆனால், பல தரப்பினருடன் போட்டியிடாமல் ஒரு திட்ட நடவடிக்கையை மட்டும் மேற்கொண்டு விட்டு ஒரே பள்ளியில் இருந்து பங்கு பெற்ற அனைத்து மாணவர்களும் தங்கப்பதக்கம் வெல்லும் விந்தை மலேசியாவில் நடந்து வருகிறது.
அதில் ஒன்று கோம்பாக் மாவட்டத்தில் இருப்பது ஐ சேனலின் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

திட்டம் / போட்டி / நடவடிக்கை
சுற்றுச் சூழல் தொடர்புடைய நடவடிக்கை ஒன்றில் இத்தமிழ்ப்பள்ளி பங்கெடுத்துள்ளது. 5 மாணவர் கொண்ட குழு என சில குழுக்கள் பங்கெடுக்க இந்தப் பள்ளி மாணவர்கள் தயார்படுத்தப்பட்டனர். மாணவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஆசிரியர்களின் கட்டளையைத்தான் நிறைவேற்றி அதில் பங்கெடுத்துள்ளனர். இதனை அரசு சாரா இயக்கம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.

கல்வி அமைச்சின் அனுமதிக் கடிதம்
(பள்ளிக்கு) வெளியே உள்ள அமைப்புகள் தங்களின் போட்டிகளில் பங்கெடுக்க பள்ளிகளை அழைத்தால், அந்தப் போட்டிக்கு கல்வி அமைச்சின் அனுமதி / தடை ஏதும் இல்லை எனக் குறிப்பிடும் கடிதம் இருக்க வேண்டும். அதே போல் இந்தப் போட்டிக்கும் முறைப்படி பெறப்பட்டிருக்கின்றது.

அனைத்தும் முறையாக இருக்க, அது நடத்தப்பட்ட முறையில் சிக்கல் ஏற்பட்டுள்ளை ஐ சேனல் கண்டறிந்துள்ளது.

அரசு சாரா அமைப்புகளின் இதுபோன்ற போட்டிகளில் பங்கெடுக்கும் பள்ளிகள் / மாணவர்களுக்குக் கட்டணம் விதிக்கப்படக் கூடாது என்பது கல்வி அமைச்சின் அனுமதிக் கடிதத்தில் குறிப்பிடப்படும் விதிமுறை.

ஆனால், இப்போட்டியில் பங்கெடுக்க நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. பதிவுக் கட்டணத்தைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கமோ அல்லது பள்ளி நிர்வாகமோ ஏற்றுக் கொண்டிருக்க வேண்டுமே அன்றி, நேரடியாகப் பங்கெடுக்கும் மாணவர்களிடம் வசூலிக்கக் கூடாது. ஆனால் இந்தத் தமிழ்ப்பள்ளி நிர்வாகம் செய்துள்ளது.

பதக்கத்திற்குக் கட்டண செலுத்த வசூல் வேட்டை
பதிவுக் கட்டணத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அப்பள்ளியில் இருந்து பங்கு பெறும் பல்வேறு குழுக்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தங்கப்பதக்கமும் சான்றிதழும் பெற, கூடுதல் பணம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டும் வசூல் வேட்டை நடந்துள்ளது.

இந்த உண்மையானக் காரணத்தைச் சொல்லித்தான் வசூலித்தார்களா அல்லது பெற்றோருக்கு இதெல்லாம் எங்கு தெரியப் போகிறது எனும் ஆணவத்தில் வசூலித்தார்களா ?

மேலும், குறிப்பிட்ட இந்தப் போட்டியில் கலந்து கொள்வதால் அதற்கு ஏற்படும் செலவை ஈடுகட்ட நிதி வசூலிப்பும் நடந்துள்ளது. பல கொடை நெஞ்சங்கள் இந்த முன்னெடுப்பில் இருக்கும் நஞ்சை அறியாமல் வாரி வழங்கி இருக்கிறார்கள்.
விதிக்கப்பட்டுள்ள கட்டணத் தொகையைவிடப் பல மடங்கு வசூலிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட அரசு சாரா அமைப்பின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டத் தகவலின்படி, கலந்து கொள்கிறவர்களுக்கு விதிக்கப்படும் கட்டணத்திற்கும் இத்தமிழ்ப்பள்ளி மாணவர்களை உட்படுத்திய வசூல் வேட்டை தொகைக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

ஒரே பள்ளி – ஒரே போட்டி – 50க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை
இப்படி பல கோணங்களில் வசூலிக்கப்பட்டப் பணத்தைக் கொண்டு போட்டி என்கிற பெயரில் நடந்த நடவடிக்கையில் கலந்து கொண்டனர். அப்பள்ளியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்கள். பாவம் மாணவர்கள்.

இந்த மொத்த ஊழல் குறித்த ஆதரங்களை ஐ சேனல் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு தீர ஆராயப்பட்டது.

இந்தப் போட்டியில் பங்கு கொண்டே ஆக வேண்டும் என இத்தமிழ்ப்பள்ளி நிர்வாகம் மிகத் தீவிரமான ஆர்வம் காட்டியதன் பின்னணி என்ன ?

இப்போட்டியை நடத்திய அமைப்பு பள்ளி மாணவர்களிடம் பணம் உட்படுத்திய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது எனத் தெரியாதா ? அல்லது தெரிந்தே விதிமுறையையும் கல்விமமைச்சையும் மீறுகிறார்களா ?

வெளி அமைப்புகளுக்குதான் தெரியவில்லை என்றால், பள்ளியின் ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியையுக்கும் தெரியாதா ? இது கூடத் தெரியாமல் பணியிலும் பதவியிலும் காலத்தைத் தள்ளிக் கொண்டு இருக்கிறார்களா ?

ஒரே போட்டி தொடர்பான செலவுக் கணக்கு ஆவணத்தைக் காட்டி பன்முனை வசூலில் இறங்கியது யார் ? பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் செயலவை யார் ?

இப்போட்டியில் எத்தனைப் பள்ளிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது ?

எத்தனைப் பள்ளிகள் கலந்து கொண்டன ?

எத்தனைப் பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது ?

யார் அந்த வெற்றியாளர்கள் ? எல்லோருக்கும் தங்கப்பதக்கமா ?

எந்த அடிப்படையில் பதக்கத்திற்குக் கட்டணம் விதித்தது அந்த அமைப்பு ?

இப்போட்டி நடத்தி முடிக்கப்பட்டு அறிக்கையை கல்வி அமைச்சுக்கு இந்த அமைப்பு அனுப்பியதா ?

அவ்வாறு அனுப்பியதென்றால், எந்த அளவுக்கு அந்த அறிக்கையில் உண்மை இருக்கின்றது ?

கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதா ?

அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தால், அவ்வறிக்கையை முறையாகக் கவனிக்காத – அமைச்சின் விதிமுறை மீறப்படுவதைக் கண்டுகொள்ளாத அந்த அதிகாரி யார் ?

இந்த அதிகாரி குறித்தும் அந்த அறிக்கை குறித்தும் கல்வி அமைச்சின் நடவடிக்கை என்ன ?

கலந்து கொண்ட பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வாயிலாக வசூல் வேட்டை சம்பந்தப்பட்டிருந்தால், ஆண்டறிக்கையில் (வரவு செலவு நிதி அறிக்கை) இவ்விவகாரம் வெளிவரவில்லையா ? மூடி மறைக்கப்பட்டதா ?

இந்த ஒரு பள்ளிதான் அந்த அரசு சாரா அமைப்பின் குறியா ? அல்லது இதே பதக்க விற்பனையை மற்ற பள்ளிகளுக்கும் விரிவு படுத்தி உள்ளதா ? அங்குள்ள நிலவரம் என்ன ?

நிலைமை இப்படி இருக்க, இந்த ஊழலில் சம்பந்தப்படும் பள்ளிகள் தங்களின் TS25 புறப்பாட நடவடிக்கை அறிக்கையில் இப்போட்டி குறித்தத் தகவலை இணைந்துள்ளதா ?

இப்படி 360° பாகை நிலையில் பல கேள்விகள் விடை அறியாமலேயே இருக்கின்றன. மூடி மறைக்கப்பட்டிருக்கின்றன என்று சொன்னாலும் தகும்.

பதக்கம் கிடைக்கும் என்பதற்காக மாணவர்களை உட்படுத்தி பள்ளிகள் என்ன வேண்டுமானாலும் செய்யுமா ?

ஊர் மெச்சதான் இந்தப் பதக்கங்கள் வாங்கப்படுகின்றனவா ? மாணவர்கள் திறமையும் ஆக்கச் சிந்தனையும் பிஞ்சிலேயே ஊழல் நடவடிக்கைகளால் நசுக்கப்படுகின்றனவா ?

இளமையிலேயே தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இந்த நஞ்சை விதைக்க ஐ சேனல் என்றும் துணைபோகாது !

ஐ சேனலுக்குக் கிடைத்தத் தகவலின்படி, இந்த விவகாரம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை எட்டி இருப்பதாகவும் இதில் சம்பந்தப்பட்டுள்ள தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க செயலமையைச் சேர்ந்தவர்கள், அரசு சாரா அமைப்பு என அத்தனை பேரும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

Leave a Reply