பள்ளிக் கூட இணைக் கட்டட ஊழல் : முன்னாள் பெ.ஆ.ச. தலைவர் உட்பட மூவரை தடுத்து வைத்தது ஊழல் தடுப்பு ஆணையம் !

Crime, Education, Malaysia, Malaysia, News

 28 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 10 செப் 2022

சிலாங்கூரில் உள்ள ஒரு பள்ளிக் கூட இணைக்கட்டட விவகாரத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்து ஏறத்தாழ ரிம 300,000 ஊழல் செய்திருக்கும் விசாரணைக்கு உதவியாக அப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் உட்பட மூவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இக்குற்றம் நடந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

மூன்று நாள் தடுப்புக் காவல் ஆணை இன்று சனிக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை வரை ஷா ஆலாம் நீதிமன்றத்தில் மஜிஸ்திரெட் நோர் அஸியான் சோஹைனி வெளியிட்டுள்ளார்.

ஒரு பெண்மணி உட்பட 34 முதல் 56 வரையிலான மூவர் சிலாங்கூர் மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் பணிமனையில் விசாரிக்கப்படத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அப்பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரோடு அவ்விவகாரத்தில் தொடர்புடைய குத்தகையாளரும் கட்டுமானப் பொருட்களை விநியோகித்த நிறுவனத்தாரும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளியின் புதிய இணைக்கட்டடம் கட்டுவதற்கான செலவுக் கணக்கை அதன் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் சம்பந்தப்பட்டவர்கள் ஒப்படைத்து உள்ளார்கள், அந்தப் போலி ஆவணங்களின்படி அதன் மதிப்பு ஏறத்தாழ ரிம 300,000 ஆகும். ஆனாலும்கூட, அந்த இணைக்கட்டடம் இன்னும் கட்டி முடிக்கப்பட வில்லை.

இதனிடையே, சிலாங்கூர்  மாநில ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டத்தோ அலியாஸ் சலிம் இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தியதோடு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009, பிரிவு 18இன்படிஇவ்விவகாரம் விசாரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறை, போலியாகக் கொடுக்கப்பட்ட ஆவணங்களின் மதிப்பில் 5 மடங்கு அல்லது ரிம 10,000 இவ்விரண்டில் எது அதிகமோ அந்தத் தொகை தண்டமாக விதிக்கப்படலாம்.

Leave a Reply