பாலியல் தொல்லையில் தமிழ்ப்பள்ளி ஆசிரியை?
நடவடிக்கை எடுக்குமா கல்வி இலாகா

Crime, Malaysia, News, Special News, Uncategorized

 1,152 total views,  1 views today

கோம்பாக் – 18 ஏப்பிரல் 2022

ஆசிரியரைத் தவறாகப் படம் எடுப்பது, அதனை அனுமதி இல்லாமல் ஊடகத்தில் பதிவேற்றம் செய்வது, இது குறித்து கேள்வி எழுப்பினால் அவமானப்படுத்துவது என ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியரின் மானத்திற்கும் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்கும் செயல்பாடுகள் கோம்பாக் வட்டாரத்தில் அரங்கேறி உள்ளது.

இது குறித்து மாவட்டக் கல்வி இலாகா, மாநிலக் கல்வித் திணைக்களம், கல்வி அமைச்சு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ? எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இங்குள்ள தமிழ்ப்பள்ளி ஒன்றில் நடந்த புறப்பாட நடவடிக்கையின்போது பங்கு கொண்ட பெண் ஆசிரியை ஒருவரை சக ஆசிரியர் ஒருவர் தவறானக் கோணத்தில் காணொலியைப் பதிவு செய்தது மட்டும் இல்லாமல் அதனை குறிப்பிட்ட அந்த ஆசிரியரின் அனுமதி இன்றி ஊடகம் ஒன்றில் ஒளிபரப்பவும் செய்துள்ளார்.

பெண் ஆசிரியரின் மாண்பினைக் கேள்விக் குறியாக்கும் அந்தக் காணொலி ஊடகத்தில் ஒளிபரப்பட்டப் பிறகு அவருக்கு மோசமான சில கருத்துகள் எதிர்வினையாக வந்துள்ளன.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஆசிரியை இவ்விவகாரம் குறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளார் என அத்தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த நம்பத்தகுந்த வட்டத்தில் இருந்து ஐ சேனலுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

எதுவாக இருந்தாலும் Ketua Jabatan எனும் இலாகா தலைவர் முடிவை அடிப்படையாகக் கொண்டுதான் எந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறியது மட்டும் இல்லாமல், இவ்விவகாரத்தில் தமது பாதுகப்புக்காக உடனடியாகக் காவல் துறையில் புகார் செய்த பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே !

இப்புகாரின் அடிப்படையிலும் இரகசியக் காப்பு கொள்கை அடிப்படையிலும் விசாரணையைக் கோரியுள்ளார் பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர்.
ஆனால், தலைமை ஆசிரியை விசாரணையை மேற்கொள்ளாமல் பாதிக்கப்பட்டு புகார் அளித்த ஆசிரியரை அப்பள்ளியின் அனைத்து ஆசிரியர் முன்னிலையில் கடிந்து கொண்டதாக அப்பள்ளியின் நம்பத்தகுந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர் குறிப்பிட்டார்.

ஐ சேனலின் சிறப்பு செய்திக்குழு மேற்கொண்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட ஆசிரியர் அடையாளம் காணப்பட்டு தொடர்பு கொள்ளப்பட்டது. ஆனால், இவ்விவகாரம் குறித்து தாம் பெரும் மன உளைச்சலில் இருப்பதாகவும் மேலும் எந்தக் கருத்தையும் தாம் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும், அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவென்று அறிய ஐ சேனல் சிறப்பு செய்திக்குழு மாவட்டக் கல்வி இலாகாவைத் தொடர்பு கொண்ட போது, இவ்விவகாரம் குறித்து இன்னும் விசாரணை முடிவடையவில்லை எனத் தகவல் கிடைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஆசிரியையின் புகாரை அடிப்படையாகக் கொண்டு அவரின் பாதுகாப்புக்கும் மாண்புக்கும் மரியாதை செலுத்தும் வகையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை விசாரணை நடத்தாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டப் பின்னரும் சம்பந்தப்பட்டத் தலைமை ஆசிரியை தமது தரப்பு விசாரணையை மேற்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட ஆசிரியையைக் கடிந்து கொண்டது, இவ்விவகாரத்தை மூடி மறைக்கும் முயற்சியாகிறதா ? அல்லது தவறு செய்த ஆசிரியரைக் காப்பாற்றும் முயற்சியாகிறதா ?

ஒரு பெண் ஆசிரியரின் மாண்பு தொடர்புடைய இந்த விவகாரத்தில் மாவட்டக் கல்வி இலாகா அலட்சியம் கொள்ளுமா ? அல்லது தக்க நடவடிக்கை எடுக்குமா ?

(அரசாங்கத்தில் பணி புரியும்) ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லையோ அல்லது வேறு ஏதேனும் அநீதி நேர்ந்தாலோ, தமது பாதுகாப்புக்காக காவல் துறை புகார் போன்ற உடனடி நடவடிக்கை எடுப்பது தவறு என இரகசியக் காப்புச் சட்டம், சுற்றறிக்கை (Pekeliling) ஆகியவற்றை Ketua Jabatan எனும் இலாகா தலைவர் முன்னிறுத்துவது சரியா ?

பாலியல் தொல்லைகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் இலக்காகும் பெண் ஊழியர்களுக்கு சட்டத்தின் பாதுகாப்பு இதுதானா ?

இவ்விவகாரத்தில், APECS எனப்படும் அரசாங்கத் துறைப் பணியாளர்கள் அமைப்பின் நிலைப்பாடும் நடவடிக்கையும் பாதிக்கப்பட்ட ஆசிரியரின் நலன் காக்க செயல்படுமா ?

அரசுத் துறை அதிகாரிகளுக்கான இரகசியக் காப்புச் சட்டம் உட்பட இதர சட்டங்களுக்குப் பின்னால் தவறு செய்யும் சில அதிகாரிகள் ஒளிந்து கொண்டு தப்பித்து ஓட மட்டும் தான் உள்ளதா ?

மகளிர் மாண்புக்குக் களங்கம் ஏற்படும் வகையில் நடந்துள்ள இவ்விவகாரத்தில் மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சிகளில் மகளிர் அல்லது புத்ரி பிரிவுகள், மகளிர் – கல்வி தொடர்பான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அமைதியாகவே இருந்திடுவார்களா ?

ஐ சேனல் சிறப்பு செய்திக்காக – குமரன்

Leave a Reply